Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-9)

ர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்கிறது...

ஜெயலலிதா தரப்பில் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், குலசேகரன், திவாகர், பன்னீர்செல்வம், ஜெயராமன், தனஞ்செயனும் அரசு தரப்பில் பவானிசிங், முருகேஷ் மராடியும், தி.மு.க. அன்பழகன் தரப்பில் தாமரைசெல்வன், குமரேசன், சரவணன், நடேசன், பாலாஜியும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பாக சிறப்பு பணி அமர்த்தல் ஐ.ஜி., குணசீலன், டி.எஸ்.பி., சம்மந்தம் ஆகியோர் ஆஜராகிறார்கள்.

நாகேஸ்வரராவ் (ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்):

என்னுடைய மனுதாரர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன். அவருக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் வழி பேத்தி சத்யலட்சுமிக்கும் சென்னை எம்.ஆர்.சி. கிரவுண்டில் 7.9.1995 அன்று திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகள் கழித்து 17.4.97-ம் தேதி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து திருமணத்துக்கு 6,45,04,222 ரூபாய் செலவு செய்துள்ளதாக செலவுப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்? இந்தத் திருமணத்துக்கு ஜெயலலிதா 29 லட்சமும், சிவாஜியின் மூத்த மகனும், சத்யலட்சுமியின் தாய்மாமனுமான ராம்குமார் 1 கோடி ரூபாயும் செலவு செய்திருக்கிறார்கள். அனைத்து பரிமாற்றமும் காசோலை மூலமே நடைபெற்றது.

கீழ்நீதிமன்றத்தில் குன்ஹா ‘திருமணப் பெண்ணின் அப்பா இருக்கும்போது தாய்மாமன் செலவு செய்துள்ளதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை’ என்று சொல்லி திருமண செலவுகளை 3 கோடி என்று குற்றிப்பிட்டுள்ளார். சிவாஜி வீட்டில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்ததால் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தன் தம்பி பிரபு மூவீஸ் படங்களை வெளிநாடுகளின் விற்று தன் அக்கா மகள் திருமணத்தை நடத்தினார். ராம்குமார் செலவு செய்த விவரங்களை வருமானவரித் துறையில் சமர்பித்துள்ளார்.

நீதிபதி குமாரசாமி: திருமணத்தின்போது சிவாஜி இருந்தாரா?

குமார் (ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்) : இருந்தார். அதன் பிறகு 2000ல் இறந்து விட்டார்.

நாகேஸ்வரராவ்: திருமண மேடைக்கு வெளியே நடைபெற்ற அலங்கார வளைவுகள், கட்-அவுட், தோரணங்கள், மின்விளக்கு, பேனர்கள் அனைத்தும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த காஞ்சி பன்னீர்செல்வம் செய்தார். திருமணத்துக்கு வந்த வி.ஐ.பி-களுக்கு அறைகள் போட்டுக் கொடுத்தது, சாப்பாட்டுச் செலவு அனைத்தும் ஓ.எஸ்.மணியனோடு மூன்று பேர் தாங்களாகவே விரும்பி செய்தார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கொடுத்த வெள்ளித் தட்டுகள் சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வழங்கினார்.

அதற்கான பில்களை வருமான வரித்துறையில் செலுத்தியிருக்கிறார். சுதாகரனுக்கு ஷூ மற்றும் உடைகள் 1.41 லட்சத்துக்கு சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கொடுத்தார். இப்படி ஒவ்வொருவரும் செலவு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் திருமண செலவுகளை பெண் வீட்டாரே செய்வதுதான் வழக்கம். அதனால், இந்தத் திருமணத்திலும் பெண் வீட்டார்தான் செலவு செய்தார்கள். ஜெயலலிதா வெறும் 29 லட்சம் மட்டுமே செலவு செய்தார். திருமண செலவுகள் அனைத்தையும் ஜெயலலிதாதான் செய்தார் என்பது போகிற போக்கில் புழுதியை வாரி தூற்றுவதற்கு சமம். இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் போடப்பட்ட பொய்யான வழக்கு.

ஊழல் தடுப்பு போலீஸார் போட்ட அட்டவணை!

ஜனவரி 28-ம் தேதி காலை நீதிபதி குமாரசாமி வந்ததும் கீழ் நீதிமன்றத்தில் ஏ2 சசிகலாவுக்காக வாதாடிய மணிசங்கர், ‘இந்த வழக்கில் ஏ2 சசிகலாவுக்காக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பசந்த் வாதாடுவார்’ என்று அறிமுகம் செய்து வைத்து அமர்ந்தார்.

பசந்த்: இவ்வழக்கின் காலகட்டமானது 1.7.1991 முதல் 30.4.1996 வரையானது. இந்தக் காலகட்டத்தில் ஏ1 ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தார். அவர் மீது மே 1996ல் ஒரு தனியார் புகார்தாரர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவரும் அரசியல்வாதிதான். அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட சென்னை அமர்வு நீதிமன்ற உத்தரவு பேரில் லத்திகா சரண் என்ற பெண் அதிகாரி புலன்விசாரணை செய்தார்.

அவருக்கு பதிலாக ஆளுங்கட்சியின் விசுவாசியாக இருந்த, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் டி.எஸ்.பி.யாக இருந்த பெருமாளை ஐ.ஜி.யாக பதவி உயர்வு கொடுத்து இந்த வழக்கை புலன் விசாரணை செய்ய ஆணையிட்டார்கள். அவரது மாமனார் 62 டூ 67 வரை தி.மு.க. சார்பாக எம்.பி.யாக இருந்தவர். இதில் இருந்தே இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டது என்பதை அறியலாம். ஐ.ஜி பெருமாளே புகார்தாரராக செயல்பட்டு 18.9.1996ல் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார். பிறகு அவருக்குக் கீழ் செயல்பட்ட நல்லமநாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் ரெடிமேடாகவே ஒரு குற்றப்பத்திரிகை தயார் செய்து 4.6.1997ல் ஏ1 மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதன் பிறகு 22.1.1997ல் இந்த குற்றப்பத்திரிகையில் ஏ2 சசிகலா, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சேர்க்கப்பட்டார்கள்.

தமிழ் சினிமா துறையின் இளவரசி!

ஏ1 ஜெயலலிதாவின் அம்மா சந்தியா சினிமா துறையில் சிறந்த நடிகையாக இருந்து நிறைய பணம் சம்பாதித்தார். அவருடைய மகள் ஜெயலலிதா 1964 முதல் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்ததோடு, தமிழ் சினிமா துறையின் இளவரசியாகவும் திகழ்ந்தார். அதன் மூலம் நிறைய செல்வங்களை ஈட்டினார். எம்.ஜி.ஆர். மிகச் சிறந்த நடிகர். அவரோடு பல படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததால் எம்.ஜி.ஆரின் சிறந்த நட்புக்குரியவராகத் திகழ்ந்தார்.

நீதிபதி: எம்.ஜி.ஆரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே?

பசந்த்: ஆமாம்.

அதன் மூலம் எம்.ஜி.ஆர் 1982-ம் ஆண்டு தன் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவைச் சேர்த்தார். அன்றில் இருந்து ஜெயலலிதா முழு நேர அரசியல்வாதியாக மாறினார். பிறகு 1984 முதல் 1989 வரை ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்தார். துரதிஷ்டவசமாக 24.12.1987ல் எம்.ஜி.ஆர். மரணமடைந்தார். அதன் பிறகு அ.தி.மு.க. கட்சி இரண்டாகப் பிரிந்தாலும் அ.தி.மு.க.வின் பெரும்பாலான தொண்டர்கள் ஜெயலலிதாவையே எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக ஆதரித்தார்கள். அதன் மூலம் 1989ல் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து கட்சியை தன் தலைமையின் கீழ் சிறப்பாக நடத்தியதால் 1991ல் தமிழகத்தின் முதல்வரானார். 

சசிகலா நட்பின் தொடக்கம்...

ஏ1 ஜெயலலிதா திருமணம் ஆகாதவர். ஏ2 சசிகலா பிசினஸ் செய்து கொண்டிருந்தார். அவர் வினோத் வீடியோ விஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. ஜெயலலிதா அரசியலிலும், சினிமா துறையிலும் இருந்ததால் அவருடைய வீடியோ பதிவுகள் சம்பந்தமாக சசிகலாவின் நிறுவனத்துக்குப் போக வர இருந்ததால், ஜெயலலிதாவும், சசிகலாவும் நெருங்கிப் பழகினார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் சிறந்த நண்பர்களாக மாற்றியது. இவர்களுக்குள் மிக நெருக்கமான ஈர்ப்பு இருந்ததால் ஏ1 ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சசிகலா நிரந்தரமாகத் தங்கினார். இவர்களுக்குள் மனரீதியான விஷயங்களைக்கூட பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமானதோடு, இருவரும் பிசினஸ் பார்ட்னர்களாகவும் இருந்தார்கள். இவர்களுடைய நட்பை யாரும் பிரிக்க முடியாது. இவர்களுடைய நட்பு பொன் எழுத்துகளால் பொறிக்கப்படக் கூடியது. இந்த நட்பை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தவறாக சித்தரித்தார்கள். இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் தங்கி இருப்பது தவறா?

உறவுகள் விரிவானது...

ஏ2 சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரன் தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தங்குவதற்காக சின்னம்மாவான சசிகலா இருந்த போயஸ்கார்டன் வீட்டில் இவரும் தங்க ஆரம்பித்தார். அதற்கு ஏ1 ஜெயலலிதா ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லை. பின்பு அம்மா என்ற முறையில் சுதாகரனுக்கு நடிகர் சிவாஜியின் மகள் வழி பேத்தியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து, 7.9.1995ல் மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. அதற்குக் காரணம், பெண் வீட்டாரான சிவாஜியின் குடும்பம் சமூதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிக வசதியாக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். இந்தத் திருமணத்தில் பல முன்னணி நடிகர்கள்கூட கலந்து கொண்டார்கள்.

ஏ2 சசிகலாவின் மூத்த அண்ணன் ஜெயராமன். இவர் ஏ1 ஜெயலலிதாவுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால் அவருடைய மனைவி இளவரசி கைக்குழந்தையோடு தன் கணவனின் தங்கை இருக்கும் போயஸ்கார்டனுக்கு வந்து தங்கினார். அதற்கும் ஜெயலலிதா ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லை. ஆக மொத்தத்தில் போயஸ்கார்டனில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் அவருடைய கைக்குழந்தை ஆகியோர் தங்கி இருந்தார்கள்.

முதல்வரும் அரசு ஊழியர்தான்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை அவரது வீட்டில் இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை பினாமிகளாக்கி அதன் மூலம் பல கம்பெனிகள் தொடங்கியதாக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

1998 செப்டம்பர் 5-ம் தேதி மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பினாமி சட்டத்தில், ரத்த சம்பந்தமான உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் எழுதி வைத்திருந்தால் மட்டுமே அவர்களை பினாமிகளாகக் கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. அப்படி பார்க்கும்போது ஜெயலலிதாவும் அவர் வீட்டில் தங்கி இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சம்பந்தமான உறவினர்கள் கிடையாது. அதனால், பினாமி சட்டம் இவர்களுக்குப் பொருந்தாது. அப்படி இருந்தபோதும் கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காக பினாமிகள் என்றும் சொல்ல முடியாது.

அரசு ஊழியர்கள்தான் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது. ஆனால், முதல்வர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்கள் தற்காலிக ஊழியர்கள். இந்தியாவில் காலகாலமாக குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் என பலரும் பரிசுப் பொருள்கள் வாங்கிதான் வருகிறார்கள். அப்படித்தான் தன் கட்சி தொண்டர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை ஜெயலலிதா வாங்கி இருக்கிறார். அந்த பரிசுப் பொருட்களை அவருடைய வருமானமாகச் சேர்த்துள்ளனர்.

நீதிபதி: அரசு பதவியில் இருந்து சம்பளம் வாங்கும் அனைவரும் அரசு ஊழியர்களாகத்தான் கருதப்படுவார்கள். இந்த விஷயத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது.

வாதங்கள் தொடர்கிறது...

-வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி, வி.சதீஸ்குமார்

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் ஏன் முதல்வராக முடியவில்லை? (ஜெ. வழக்கு விசாரணை - 8) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் ஏன் முதல்வராக முடியவில்லை? (ஜெ. வழக்கு விசாரணை - 7) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்? (ஜெ. வழக்கு விசாரணை - 6) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்? (ஜெ. வழக்கு விசாரணை - 5) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

‘மேல்முறையீடு செய்ய ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?’ (ஜெ. வழக்கு விசாரணை - 4) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை -3) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்! ( ஜெ. வழக்கு விசாரணை -2) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close