Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு காதல் திருமணம்...ஒரு நாட்டாமை கிராமம்!

"சார், காதல் திருமணம் செய்ததால எங்க குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைச்சிட்டாங்க...!" என்று கண்ணீர் மல்க நம்மிடம் சொன்னார் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், பட்டிபுலம் குப்பத்தை சேர்ந்த சந்திரசேகரன்.

என்ன நடந்தது என்று அவரிடம் விசாரித்தோம். "பரம்பரை பரம்பரையாக இந்த குப்பத்தில் குடியிருந்து வருகிறோம். என்னுடைய மனைவி பேரு சாந்தி. எங்களுக்கு மூணு குழந்தைங்க. ஒரு மகனுக்கும், மகளுக்கும் கல்யாணமாகி வெளியூர்ல இருக்காங்க. இன்னொரு பையன் பேரு சஷ்டிகவசன். என் கூட மீன் பிடி தொழில் செய்துட்டு இருந்தான். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க தெருவை சேர்ந்த கல்யாணமான ஒரு பெண்ணை கூட்டிட்டி ஓடிட்டான். இப்போ இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியாக வாழ்றாங்க. அகிலேஷ்ன்னு ஒரு பையன் இருக்கான். என்னுடைய பையன் செஞ்ச தப்புனால என்னை, எங்கள் குப்பத்திலிருந்து பஞ்சாயத்தார் ஒதுக்கி வைச்சிட்டாங்க.
 

யாரும் ஊர்ல பேசுறது இல்ல. தொழிலும் செய்ய விடமாட்டேங்கிறாங்க. போன வாரத்தில மீன்பிடிக்க கடலுக்குப் போயிட்டு கரையில இன்ஜின் (மோட்டார்) வைச்சிட்டு வீட்டுக்கு வந்தேன். பிறகு பார்த்தா இன்ஜின காணல. ஊர்காரங்க வேணுமுன்னு ஒளிச்சிவச்சிருங்காங்க. இத யார்கிட்ட போய் நான் சொல்ல? போலீஸ்ல சொன்னா கம்பளைன்ட் வாங்க மாட்டேங்கிறாங்க. எங்க ஊர்ல இதுமாதிரி நிறைய பேரு தப்பு செஞ்சிருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லிருக்காங்க. அன்னைக்கு பஞ்சாயத்துல கலந்துகிட்ட ஊர்க்காரங்களுக்கு எல்லாத்துக்கும் தப்பு செஞ்சவங்க தரப்பில குவாட்டர் வாங்கி கொடுக்கணும். நான் குவாட்டருக்குப் பதிலா ஃபுல்லே வாங்கி கொடுக்கிறேன்" என்றார்.

அடுத்து பேசிய சஷ்டிகவசன், "ஸ்கூல்ல படிக்கும் போதே எனக்கும், ராகினிக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. ராகினியை கட்டாயப்படுத்தி அடிச்சி, உதைத்து அவளுக்கு இஷ்டமில்லாம புதுச்சேரியில இன்னொருத்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க. வேதனை தாங்க முடியாம விஷம் குடிச்சேன். ஆனால் காப்பாத்திட்டாங்க. அவளாலும் என்னை மறக்க முடியல. இந்த சமயத்தில எனக்கு பொண்ணு பார்த்தாங்க. அப்போ ராகினி ஊருக்கு வந்திருந்தா. இரண்டு பேரும் முடிவு செஞ்சி ஊரை விட்டு ஓடி கல்யாணம் பண்ணி கிட்டோம். இதனால என்னோட குடும்பத்த மட்டும் ஊரை விட்டு தள்ளி வைச்சிட்டாங்க பஞ்சாயத்தாருங்க. மீன்பிடிக்கிறது தவிர எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. இதனால வேலைவெட்டி இல்லாம குடும்பத்தோட கஷ்டப்படுகிறேன். அடிக்கடி மிரட்டுறாங்க. எங்க உயிருக்கு ஆபத்து இருக்கு. போலீசும் எதையும் கண்டுக்கொள்வதில்ல" என்றார்.

கைக்குழந்தையுடன் ராகினி பேசுகையில், "தப்பு செஞ்சது நாங்க இரண்டு பேரு. ஆனா தண்டனை ஒரு குடும்பத்துக்கு மட்டும் கொடுக்காங்க. சஷ்டிகவசன் குடும்பத்த ஊரைவிட்டு தள்ளிவச்சது போல என்னுடைய குடும்பத்தையும் தள்ளிவச்சிருக்கணும். ஆனா அதை பஞ்சாயத்தார் செய்யல. எனக்கு குழந்தை பிறந்தவுடனே என்னுடைய மாமனார் என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போனாரு. இத தெரிஞ்ச ஊர்காரங்க அன்னைக்கு நைட்டே ஈவு இரக்கமின்றி பச்ச குழந்தைன்னு பார்க்காம வீட்ட விட்டு துரத்திட்டாங்க. ஊர்ல யாரும் எங்ககிட்ட பேசுறது இல்ல. தொழிலும் இல்லாம ரேசன் அரிசிய சாப்பிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம்" என்றார் கண்ணீர்மல்க.

பஞ்சாயத்தாரர் தரப்பில் பேசிய சேகர் நம்மிடம், "சந்திரசேகரன் குடும்பத்த ஊரை விட்டு தள்ளிவைக்கல. அவங்க எங்க ஊர்ல தான் இருக்காங்க. ஊர் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்கல்ல. அடுத்தவன் பொண்ணாட்டிய கூப்பிட்டு ஓடிப் போனதால ஊர்ல ஏகப்பட்ட பிரச்னை. அதையெல்லாம் சந்திரசேகரன் குடும்பத்துக்கு சாதகமாக பஞ்சாயத்துல பேசி முடிச்சிருக்கோம். பஞ்சாயத்துல அவர அழைச்சி இரண்டு மூணு தடவ பேசிட்டோம். இப்பவும் பொண்ணு தரப்பு சொந்தங்க அந்த குடும்பத்து மேல கோபமாக இருக்காங்க. அதற்காகத்தான் அந்த பையனையும், பொண்ணையும் கொஞ்ச காலத்துக்கு வெளியூர்ல இருக்க சொன்னோம். ஆனா அதையும் அந்த குடும்பம் கேட்கல. இன்ஜின் காணாமல் போனதற்கு பஞ்சாய்த்தார்தான் காரணமுன்னு போலீஸ்ல கேஸ் கொடுத்திருக்காரு. அந்த குடும்பத்துக்கு நாங்க மட்டும் இல்லன்னா அவ்வளவு தான்" என்றார்.

மாமல்லபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், "சந்திரசேகரன் கொடுத்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த ஊரில்தான் காணாமல் போனதாக சொன்ன இன்ஜின் இருக்கிறது. அதை கண்டுபிடித்து விட்டோம்" என்றார் சுருக்கமாக.

நாட்டாமை படத்தின் நிஜம் போல காணப்படுகிறது பட்டிபுலம் குப்பம்!

-எஸ்.மகேஷ்

படங்கள்:
ஹரிகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ