Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று எங்கோ ஓர் ஊர்... நாளை உங்கள் தெருவில்... அடுத்தநாள் உங்கள் வீட்டில்!

தினோராம் வகுப்புத் தேர்வு எழுதுவதற்காகப் புறப்பட்ட ஸ்ரீஜா, தேர்வுக்கும் போகவில்லை, வீட்டுக்கும் திரும்பவில்லை. பிணமாகத்தான் மீட்கப்பட்டிருக்கிறார். ஸ்ரீஜா கொலை செய்யப்படுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான்.... காதல்!

‘‘என்னை ஒரு வருடமாக காதலித்த ஸ்ரீஜா திடீரென்று என்னைவிட்டு விலக ஆரம்பித்தாள். அவளுடன் படிக்கும் மணிகண்டனை காதலிக்க ஆரம்பித்தாள். நான் எவ்வளவோ சொல்லியும் அவள் என் காதலை ஏற்கவில்லை. ஆதலால் கொலை செய்தேன்!" - காவல்துறையினரிடம் சிக்கிய திலீப்குமார் என்பவர் கொடுத்த வாக்குமூலம் இது.

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? ஸ்ரீஜா கொலை செய்யப்படும்போது மணிகண்டனும்  உடன் இருந்திருக்கிறார். திலீப்குமாரின் நண்பர் சந்தோஷ்குமாரும் அப்போது உடனிருந்தவர்களில் ஒருவர். இந்த சந்தோஷ்குமாரும் ஸ்ரீஜாவைக் காதலித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அருகே உள்ள கோட்டப்பாளையத்தில்தான் இந்தக் கொடூரம் அரங்கேறியிருக்கிறது. மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. வழக்கை விசாரிக்கும் எலச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் பேசினோம்.

"தனியா பேசணும் என்று சொல்லித்தான் ஸ்ரீஜாவை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கொட்டகைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். திலீப்குமார். காதலிக்கும்போது அடிக்கடி அந்தக் கொட்டகையில் இருவரும் சந்தித்துள்ளனர். ஸ்ரீஜாவும், திலீப்குமாரும் தனியாகப் போவதைப் பார்த்த மணிகண்டனும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார். அதற்கு முன்பே திலீப்குமார் தன்னுடைய நண்பன் சந்தோஷ்குமாருக்கு போன் செய்து வரச்சொல்லியிருக்கிறார். அவரும் அங்கே காத்திருந்திருக்கிறார். இவர்கள் மூவருமே நண்பர்கள். ‘முதல்ல என்னைக் காதலிச்சு ஏமாத்தினா... அடுத்து இவனை காதலிச்சு ஏமாத்தினா... இப்போ உன்னைப் பிடிச்சிருக்கா. உன்னையும் ஏமாத்திடுவா! இவளைவிடக் கூடாது’ என்று சொல்லி திலீப்குமார்தான் ஸ்ரீஜாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்திருக்கிறார். மற்ற இருவரும் அதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது’’ என்று சொன்னார்.

இதுவா காதல்?


“இது காதலே கிடையாது. காதல் என்பதை எல்லோரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உண்மையாகக் காதலித்திருந்தால் நிச்சயம் கொலை செய்ய முடியாது. நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது இது மனிதத்தன்மை இல்லாதவர்கள் செய்ததாகவே தோன்றுகிறது. அப்புறம் எங்கிருந்து வருவது காதல்?’’ என்று பேச ஆரம்பிக்கிறார் மனநல மருத்துவர் அபிலஷா.

"மனிதனுக்கு முதலில் மனிதாபிமானம் இருக்க வேண்டும். அதுதான் விலங்குகளிடம் இருந்து நம்மை வேறுபடுத்தும். ஸ்ரீஜா விஷயத்தில் அவருடைய பெற்றோரின் வளர்ப்பும் முக்கியக் காரணம். அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னை என்பதை அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே பேசியிருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் உடல், மனம் சார்ந்த பிரச்னைகளைப் பற்றி பேசுவதே இல்லை. இது குழப்பமான வயது. எது சரி... எது தவறு என்பதை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டியது பெற்றோர்கள்தான். அதேபோலத்தான் அந்தப் பசங்களுக்கும் அவங்களுக்கும் மனிதாபிமானம் பற்றியோ, பெண்கள் பற்றியோ எதுவும் தெரியவில்லை. அதைப் பெற்றோர்கள்தான் உணர வைத்திருக்க வேண்டும். நம் வீட்டில் இருக்கும் அக்கா, அம்மா, தங்கை ஆகியோரைப்போலத்தான் வெளியில் பார்க்கும் பெண்கள் எல்லோருமே என்பதை குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.

‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று சொல்லி காதலியை வாழ்த்திவிட்டுப் போன காதல் எல்லாம் கடந்த தலைமுறையோடு முடிந்துவிட்டது. இப்போது எனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் சினிமா. பெற்றோர்கள் இப்போதாவது உஷாராக வேண்டும். இல்லை என்றால், இன்று எங்கோ ஓர் ஊரில் நடந்த சம்பவம் நாளை உங்கள் தெருவில் நடக்கும். அடுத்தநாள் உங்கள் வீட்டில் நடக்கும். அதுதான் மனிதாபிமானத்தின் கடைசி பக்கமாக இருக்கும்” என்று எச்சரித்தார்.

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

- எம்.புண்ணியமூர்த்தி


படங்கள்:
க.தனசேகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ