Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எக்ஸ்பிரஸ்களுக்கு போர்ட்டர்கள் கொடுக்கும் டிக்கெட்!

யில் பயணம் பாதுகாப்பு, வசதியானது என்பதால் அதில் பயணிக்கவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைப்பது என்பது குதிரைகொம்பாக உள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளில் பயணிக்கின்றனர்.

குறிப்பாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் உடனுக்குடன் முன்பதிவாகி விடுகின்றன. தட்கல் டிக்கெட்டுகளுக்கும் மக்கள் தவம் இருக்க வேண்டியதுள்ளது. அடுத்து சென்னை சென்ட்ரலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ்களிலும் டிக்கெட் எளிதில் கிடைப்பதில்லை. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக ரயில்கள் இயக்கப்படாததே இதற்கெல்லாம் காரணம்.

முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்களுக்கும், முன்பதிவு டிக்கெட் வாங்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்களுக்கும் வரப்பிரசாதம் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள். ரயில்களை பொறுத்து இந்த முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை இணைக்கப்பட்டு இருக்கும். பயணிகள் கூட்டம் அதிகமுள்ள எக்ஸ்பிரஸ்களில் முன்பகுதியில் இரண்டு, பின்பகுதியில் இரண்டு என்ற விகிதத்தில் முன்பில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இதைத்தவிர ஊனமுற்றவர்களுக்கும், பெண்களுக்கும் தனியாக முன்பதிவில்லாத பெட்டிகள் உள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (5.4.15) சென்னை சென்ட்ரலிருந்து விஜயவாடா சென்ற பினாக்கினி எக்ஸ்பிரசில் நடந்த சம்பவம் இது. மதியம் ஒரு மணி அளவில் சென்ட்ரலுக்கு பினாக்கினி எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது. இந்த எக்ஸ்பிரஸ் பிளாட்பாரம் 8ல் வந்தடைவதற்கு முன்பே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். முன்பதிவில்லாத ரயில் பெட்டியை நோக்கி அந்த க்யூவில் நின்றவர்கள் நகர்ந்து சென்று முண்டியடித்து ஏறத் தொடங்கினர். குழந்தைகள், முதியவர்கள் என்று பார்க்காமல் ஒவ்வொருவரையும் தள்ளிக்கொண்டு மக்கள் ஏறிக் கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் ரயிலில் உள்ள அவசர கதவு வழியாக (எமர்ஜென்சி விண்டோ) நான்கைந்து பேர் பெட்டிக்குள் ஏறி குதித்தனர். அவர்கள் பெட்டிக்குள் இருந்த முக்கால்வாசி இருக்கைகளில் துண்டு, பை போன்றவற்றை வைத்து இடம் பிடித்துக் கொண்டனர். இதனால் மூச்சுத்திணறி முண்டியடித்து ஏறிய பலருக்கு இடம் கிடைக்கவில்லை. இடம் பிடித்த இருக்கைகயின் பக்கம் சென்றால் அந்த நான்கைந்து பேர்கள் முறைத்தனர். சிலரை கடுமையான வார்த்தைகளால் (தெலுங்கில்) திட்டித் தீர்த்தனர்.

ரயிலில் ஏறி சீட் கிடைக்காமல்  நின்று கொண்டு இருந்தவர்களிடம், இருக்கைகளை பிடித்த நான்கைந்து பேர்கள் பேரம் பேசத் தொடங்கினார்கள். சார்.... ஒரு சீட் 30 ரூபாய் என்று சொன்னார்கள். நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் வேறுவழியின்றி பலர் அந்த சீட்டை விலை கொடுத்து வாங்கினார்கள். அதில் மூன்று பேர் கொண்ட இருக்கைகள் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டன. இவ்வாறு சீட்களை விற்றதில் ஒருவர் ரயில்வே போர்ட்டரின் சிகப்பு நிற சட்டை அணிந்திருந்தார். கட்டணம் குறைவு என்பதற்காகவே பாவப்பட்ட மக்கள் இந்த முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறுகின்றனர். அவர்களிடமும் இப்படி கொள்ளையா? என்று ஒவ்வொருவரின் மனதிலும் எண்ணம். அந்த எண்ணத்தை எப்படி பிரதிபலிக்க முடியும் என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டு இருந்தனர்.
 

இதில் வேதனை என்னவென்றால், இந்த சம்பவங்களை கண்டும் காணாதது போல ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே காவல்துறையினரும் நின்று கொண்டு இருந்ததுதான்.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், "இது இன்று நேற்று நடப்பது அல்ல. காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. காவல்துறையினருக்கு இது தெரியும். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம் அவர்களுக்கு தினமும் வசூலாகும் பணத்தில் மாமூல் கொடுக்கப்பட்டுவிடும். முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட துண்டு போட்டு முன்பதிவு செய்யும் கொடுமை வேறு எங்கும் கிடையாது. பினாக்கினி எக்ஸ்பிரஸ் மட்டுமல்ல சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் முக்கியமான ரயில்களில் எல்லாம் இந்த கூத்து நடக்கிறது" என்றனர்.

ரயில்வே காவல்துறையினர் கூறுகையில்,  "பயணிகள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாக ஒவ்வொரு முன்பதிவில்லாத ரயில் பெட்டி முன்பு காவல்துறையினர் பணியமர்த்தப்படுகின்றனர். முறைகேடாக முன்பதிவில்லாத பெட்டிகளில் இடம் பிடித்து அதை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களிடம் மாமூல் வாங்கும் காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தயங்காமல் பயணிகள் காவல்துறையில் புகார் கொடுக்கலாம்" என்றனர்.

இத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பயணிகள் தொந்தரவு இல்லாமல் பயணிக்க முடியும்.

-எஸ்.மகேஷ்


எடிட்டர் சாய்ஸ்

MUST READ