Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`தமிழர்களை திட்டமிட்டே சுட்டுக் கொன்ற ஆந்திர போலீசார்!`

செம்மரம் வெட்டச் சென்ற தமிழ் நாட்டுக் கூலித் தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி காக்கைக் குருவியைச் சுட்டுத் தள்ளுவது போல் 20 பேரை துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கி பசியாறி இருக்கிறது ஆந்திர போலீஸ்.

இந்தச் செய்தி வெளியான உடனே தமிழக அரசியல் இயக்கங்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி  ஆந்திர காவல்துறைக்கும் அரசுக்கும் எதிர்ப்பைக் காட்டியுள்ளன.

 தமிழ்நாட்டில்சென்னை, பூந்தமல்லி, தடா, வேலூர் மற்றும் கோவை  உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் இயக்கங்கள் கண்டன ஆரப்பாட்டம் நடத்தியும் மற்றும் ஆந்திர பேருந்துகளைச் சிறை பிடித்தும் கைதாகியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், " துப்பாக்கிச் சூட்டில் மனித உரிமை மீறப்பட்டிருந்தால் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்  " என்று ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான அப்பாவி தொழிலாளர்களின் உடல்கள்,  திருப்பதி அரசு பொது மருத்துவமனையில்  உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் அளிக்கப்படும் அறிக்கையில் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவை ஒருபுறம் இருந்தாலும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு கொடூரம் திட்டமிட்டே நடந்து இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. கடத்தலைத் தடுப்பதிலும்,செம்மரங்களைப் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயல்படுவதாகவும்,அதனைத் தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கையே எடுக்கப்பட்டதாகவும் கூறும் ஆந்திர காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்கள் கவிந்துள்ளன.

"சேஷா சலம் வனப் பகுதிக்குள் ரோந்து சென்ற போது மரம் வெட்டிக்கொண்டிருந்த 200 க்கும் மேற்பட்ட நபர்கள் எங்கள் மீது  கற்களைக் கொண்டும் இரும்பு ராடுகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தினார்கள்.அதில் 9 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.அவர்களின் தாக்குதலில் இருந்து எங்களைத் தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று " என்கிறார் ஆந்திர சிறப்புக் காவல்படை அதிகாரி காந்தா ராவ். மேலும் அவர், " முந்தைய நாள் இரவே வனப்பகுதிக்குள் நுழைந்து பதுங்கி மரம் வெட்டும் வேலையை நடத்தி உள்ளதாகச் சந்தேகிக்கிறோம்" என்றும் கூறி தனது போலீஸ் கடமையை ஆற்றியிருக்கிறார். என்னவொரு கொடுமையான விளக்கம்?

சுட்டுக்கொல்லும் காவல்துறை எப்போதும் அளிக்கும் பொய்யான `ஸ்க்ரிப்ட்` என்பது தெளிவாகத் தெரிகிறது.ஒட்டுமொத்தமாக 20 பேரும் பலியாகும் அளவிற்கு சம்பவம் நடந்துள்ளபோது அவர்கள் எந்த வழியாகக் காட்டுக்குள் நுழைந்தார்கள்?, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காட்டின் உள்ளே செல்லும்வரை ரோந்துப் பணியில் இருந்தவர்கள் கண்களை மூடிக் கொண்டிருந்தார்களா? பாதுகாப்புப் பணி,காவல் பணியில் ஈடுபடும் போலீசார், கொல்வதில் காட்டும் அக்கறையை கண்காணிப்பதில் ஏன் காட்டவில்லை?  பல மாதங்களுக்கு முன்பே வெட்டப்பட்டு சீர் செய்த செம்மரங்கள் குண்டடிப்பட்டு இறந்து கிடப்பவர்கள் அருகே எப்படி வந்தது? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இந்தச் துப்பாக்கிச் சூடு போலி என்கவுன்ட்டர் என்பதற்கு பல்வேறு உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் சான்று கூறுகின்றன. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று இரு இடங்களில் நடந்தது போலி என்கவுன்ட்டர் என்று சித்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் குமார ரெட்டி வலிமையாகக் கூறுகிறார்.

கொடூர துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த பின்னர் திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த குமார ரெட்டி, " இது நூற்றுக்கு நூறு சதவீதம் போலி என்கவுன்ட்டர் ஆகும். சம்பவம் நடந்த இடத்தைப்  பார்க்கும் இது உறுதியாகத் தெரிகிறது. சம்பவ இடங்களில் வெட்டி போடப்பட்ட மரங்கள் அனைத்தும் ஏற்கெனவே வனத்துறையினர் பறிமுதல் செய்து சிவப்பு பெயிண்ட்டால் அடையாளம் வைக்கப்பட்டுள்ளவை ஆகும்.

மேலும் அங்கு தொழிலாளர்கள், போலீஸாரை தாக்க பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தி புதிதாக உள்ளது. இதனை உபயோகப்படுத்தியதற்கான அடையாளம் கூட இல்லை.கோடாலி மட்டும் விழுந்து கிடக்கிறது. இதில் கோடாலி கொம்பு கூட இல்லை. இவ்வளவு பெரிய என்கவுன்ட்டர் நடந்திருக்கும்போது போலீஸார் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படாதது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்ட இடங்களில் ஒன்றான ஈதலகுண்டு என்ற பகுதியில் செம்மரங்களே கிடையாது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் முட் புதர்களைத் தவிர வேறு எந்த மரமும் ஓங்கி வளர்வதில்லை. ஏறத்தாழப் பொட்டல் காட்டைப் போலத்தான் இருக்கிறது. அப்பகுதியில் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டினார்கள் என்றும், காவல்துறையினர் சென்ற போது மறைந்திருந்து கற்களை வீசித் தாக்கினார்கள் என்பது புனையப்பட்ட கட்டுக்கதை என்பதை தவிர வேறு என்னவாக இருந்திட முடியும்?

கடத்தல் நடக்கையில் அல்லது மரம் வெட்டுகையில் மோதல் நடந்து இருந்தால்,அதற்கான தடயங்கள் இல்லாமல் போயிருக்குமா? துப்பாக்கியால் சுடும் போது, இறந்தவர்களின் உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள்  பாய்ந்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், பலியான  20 பேருக்கும் மார்பு மற்றும் நெற்றியில் மட்டும்தான் குண்டு பாய்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கத்தில் அவர்களை நிற்க வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு,விசாரித்துக் கொடுமைப் படுத்தப்பட்டுப் பின்னர் நெருக்கமாக நிற்கவைத்தே கொடூரமாகச்   சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி அப்பட்டமாக மனித உரிமைகளை மீறிய ஆந்திரக் காவல்துறை மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை கடுமையாக்கப் படவேண்டும், காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும். தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போலீசாரின் போலி என்கவுன்ட்டர் குறித்து மத்திய அரசு தலையிட்டு ஆந்திராவிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசும் கடிதம் மட்டுமே எழுதாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தாமதிக்காமல் எடுக்கவேண்டும்.

அப்போதுதான் எதிர்காலத்திலும் இது போன்ற கொடூரங்கள் தொடராது!

 

- தேவராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close