Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ.கே. என்றால் துணிச்சல்!

மிழ் இலக்கிய உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்யாத சாதனையை எழுத்தாளர் ஜெயகாந்தன் செய்தார். உலகில் வேறு எந்த எழுத்தாளரும் செய்திராத சாதனை என்று இதை நான் நினைக்கிறேன்.

'நான் இனிமேல் எழுதப் போவதில்லை' என்று ஜெ.கே. அறிவித்தார். சுமார் கால் நூற்றாண்டுகளாக எந்தப் படைப்பிலக்கியத்தையும் அவர் செய்யவில்லை. ஆனாலும், தமிழ் எழுத்தாளர்களின் அடையாளமாக இன்றுவரை அவர்தான் இருந்தார்... இருக்கிறார். அவர் எத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதினாரோ, அத்தனை ஆண்டுகாலம் தீவிரமாக எழுதாமலும் இருந்தார். அவர் எழுதாத அந்தக் காலத்திலும் கூட மக்களால் எழுத்து சிங்கமாகப் போற்றப்பட்டவர் அவர் ஒருவர்தான்.

எழுத்துத் துறையில் மட்டுமல்ல; மேடைப் பேச்சுகளிலும் உண்மையின் ஒளி பிரகாசிக்கும். பெரியார் அமர்ந்திருக்கும் மேடையிலேயே பெரியாருக்கு இலக்கியம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டவர் ஜெ. கே.  அண்ணா அமர்ந்திருக்கும் மேடையிலேயே 'எனக்கு அண்ணாவையும் பிடிக்காது; அவருடைய எழுத்துக்களையும் பிடிக்காது' என்று கர்ஜித்தவர். எம்.ஜி.ஆர். முதல்வராக பொறுப்புக்கு வந்த நேரத்தில் 'எம்.ஜி.ஆர் தமிழரா' என விவாதித்தவர். அவருடைய சத்துணவுத் திட்டத்தை விமர்சித்தவர்.

ஆனால் பெரியாரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் ஒருபோதும் ஜெ.கே.வை விமர்சித்தது இல்லை. மாறாகப் போற்றினார்கள். மதித்தார்கள். அதுதான் உண்மையான எழுத்தாளனுக்குக் கிடைத்த மரியாதை. மரியாதைக்குரிய எல்லோராலும் மதிக்கப்பட்டவர் ஜெ.கே.  காமராசர், கண்ணதாசன், ப.ஜீவானந்தம் என அவருடைய மதிப்பு வட்டம் மகத்தானது. சாதாரண அச்சகத் தொழிலாளியாக இருந்து மாபெரும் எழுத்தாளனாக, அறச்சீற்றம் மிக்க அரிய மனிதனாக ஜெ.கே. உயர்ந்தார். அவருடைய கால கட்டத்தில் தமிழ் எழுத்து கம்பீரமாக உலா வந்தது.

புதிய வார்ப்புகள், தரிசனங்கள், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, உண்மை சுடும், பிரளயம், அக்னி பிரவேசம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், ரிஷிமூலம்... என அவருடைய படைப்புகளுக்கு அவர் வைத்தப் பெயர்களே அன்று தமிழைப் புரட்டிப் போட்டன. சரஸ்வதியில் எழுத ஆரம்பித்து ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என அனைத்து இதழ்களிலும் எழுதினார். எழுதினார் என்பது இலக்கணக் சுருதி.  கொடிகட்டிப் பறந்தார் என்பதே சரி.

சாகித்திய அகாதமி, ஞான பீடம் என இலக்கியத்துக்காக இந்திய அரசு வழங்கும் அனைத்து விருதுகளையும் அந்த விருதுகளைப் பெற்றவர்களைக்காட்டிலும் இளைய வயதில் பெற்றவர்.
அவருடைய வீட்டின் மாடியில் அப்போது ஓர் ஓலைக் குடிசை இருக்கும். அதிலே மாலை வேளைகளில் பலரும் கூடுவார்கள். பெரிய எழுத்தாளர்கள், டாக்டர்கள் முதல் ரிக்‌ஷா தொழிலாளி வரை அந்தச் சபையிலே இருப்பார்கள். கஞ்சா குடிப்பார்கள். அதை அவர் மறுத்ததில்லை.

நீங்கள் கஞ்சா குடிப்பீர்களா என கேட்டபோது, பகவான் ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் மகாகவி பாரதியும் கஞ்சா அடித்தவர்கள்தான். அந்த வரிசையில் நானும் அடிக்கிறேன் என்றார். வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாகச் சொல்லியும் கைது செய்யப்படாதவர் அவர்...  இத்தனைக்கும் அவரால் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் அப்போது இருந்தார்கள். அவர்களின் இயக்கங்கள் ஆட்சியில் இருந்தன. ஓர் மாபெரும் எழுத்தாளன் மீது அரசாங்கம் வைத்த பயபக்தியின் அடையாளம் அது.

சினிமா, திரைப் பாடல், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிலும் அவருடைய எழுத்துக்கள் பிரகாசித்தன. பத்திரிகையாளராகவும் பொதுவுடமை அரசியல்வாதியாகவும் திரைப்படக் கலைஞராகவும் எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். இன்று இல்லை என்பது அந்த அத்தனைத் துறைக்குமே இழப்பு.

ஒரு கலகக்காரன்... காலத்தின் நாயகன்... கண் மூடினான்.

-தமிழ்மகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ