Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனி மனித வானொலி நாகூர் ஹனிபா...!

மிழ் சினிமாவில் மெல்லிசை பாடகர்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நாகூர் ஹனிபா. இவரது அம்மா ராமநாதபுரத்தை சேர்த்தவர். அப்பா நாகூரைச் சேர்ந்தவர். இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்ற தனது பெயரை சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

சிறுவயது முதலே பள்ளி, திருமண விழாக்களில் பாடத் துவங்கினார். 15 வயதில் திருமண வீடுகளில் பாடத்துவங்கியவர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான திருமண வீடுகளில் பாடியுள்ளார். திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டு அதன் உறுப்பினர் ஆனார்.

தி.மு.க.வுக்காக இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம். தி.மு.க., சார்பாக சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். போராட்டங்களில் ஈடுபட்டு சிறையும் சென்றுள்ளார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ ‘உன் மதமா என் மதமா’ மற்றும் ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ போன்ற பாடல்கள் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 96 வயதான அவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவர் குறித்த சில நினைவலைகள்...

# 1953 ஆம் ஆண்டு அது…..

திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி நான்கே நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெரியாரின் சீடராக இருந்த நாகூர் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக முழுமூச்சாய் பெரிதும் பாடுபட்டார். நாகூர் ஹனிபா அறிஞர் அண்ணாவின் மீது தீவிர பற்று வைத்திருந்தார். அதே போன்று அறிஞர் அண்ணாவும் எந்தவொரு போராட்டத்திற்குச் சென்றாலும் தன்னுடன் நாகூர் ஹனிபாவையும் தவறாமல் அழைத்துச் சென்றார்.

1953 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லவொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள். அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின் குடும்பம் படும் அவலங்களை அவரால் காணப் பொறுக்கவில்லை. நெய்த துணிகள் யாவும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. குடும்பங்கள் பசியால் வாடினர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலை.

இதனால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை ஏற்பட்டது.  சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டனர். கழகத் தலைமை ஒன்று கூடி கைத்தறித் துணிகளை விற்று அதனைக் கொண்டு நெசவாளர்களின் துயர் துடைக்க முடிவு செய்தனர். விற்பனை செய்வதற்கு முதற்கட்டமாக திருச்சி மாநகரத்தை தேர்ந்தெடுத்தனர்.

“திருச்சியில் யார் துணிகளை விற்பது?” என்ற கேள்வி எழுந்தபோது “திருச்சியில் நானே சென்று விற்கிறேன்” என்று அறிஞர் அண்ணா அறிவிப்பு செய்தார். கழகத் தொண்டர்களுக்கிடையே இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும், மிகுந்த எழுச்சியையும் உருவாக்கியது.

கழகத் தொண்டாற்றுவதற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நாகூர் ஹனிபா... இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அண்ணாவிடம் சென்று “நானும் உங்களோடு இணைந்து பாடிக்கூவி கைத்தறி துணிகளை விற்கத் தயார்” என்றார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்று தந்தை பெரியார் முன்னொரு சமயம் கூறியது அறிஞர் அண்ணாவின் நினைவுக்கு வந்தது. ஊர் ஊராகச் சென்று கூவி விற்பதற்கு கம்பீர குரல்வளம் படைத்த நாகூர் ஹனிபாவைவிட வேறு பொருத்தமான ஆள் கிடையாது என்ற முடிவுக்கு வந்த அறிஞர் அண்ணா, உடனே அவரை அழைத்துக் கொண்டு கழகக் கண்மணிகளோடு திருச்சிக்கு புறப்பட்டார்.

அறிஞர் அண்ணாவின் இந்த கைத்தறி விற்பனைத் திட்டம் நன்றாகவே வெற்றி கண்டது. எதிர்பார்த்ததைவிட கூடுதல் பலனை அளித்தது. திருச்சியில் தொடங்கி பின்னர் ஊர் ஊராகச் சென்று கழகத் தோழர்கள் கைத்தறி துணி விற்பனையில் ஈடுபட்டனர். மூட்டைகளைச் சுமந்து தெருத் தெருவாக கூவி விற்றனர். இந்த விற்பனையில் நாகூர் ஹனிபாவின் பங்கு கணிசமான அளவில் இருந்தது.

உடுமலை நாராயணகவி எழுதிய பாடலொன்று நாகூர் ஹனிபாவுக்கு கைகொடுத்தது. கம்பீரக் குரலோடு ஒலிபெருக்கியின் உதவி இல்லாமலேயே பாடத் தொடங்கினார்.

    சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்

    திராவிட நாட்டின் சேமம் வேண்டி

    சிங்கார ஆடைகள் வாங்குவீர்.

பாடலின் ஆரம்ப வரிகள் இதுதான்.

தங்கள் அபிமான தலைவர்களைக் காணவும், “கணீர்” என்ற வெண்கலத் தொனியுடன், கம்பீரத் தோற்றம் கொண்ட  நாகூர் ஹனிபா பாடும் பாடலை ஆர்வத்துடன் கேட்கவும், கட்டுக்கடங்காத கூட்டம் ஆங்காங்கே கூடியது. பொதுமக்கள் தங்கள் விருப்பம்போல் கைத்தறி துணிகளை தாராள மனப்பான்மையோடு வாங்கிச் சென்றனர்.

# 1955-ஆம் ஆண்டு, “நம் நாடு” கழக ஏட்டில் வெளிவந்த ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலை HMV நிறுவனம் பதிவு செய்ய, நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில்  இசைத்தட்டு வெளியானபோது, அப்பாடல் தமிழகத்தில்  ஓர் இசைப்பிரளயத்தை உண்டு பண்ணி தென்னக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்காரணமாக இருந்தது. அந்த இசைத்தட்டுதான் அந்த ஆண்டில் அதிகம் விற்று விற்பனையில் ஒரு சாதனையைப் படைத்தது

அறிஞர் அண்ணா அடிக்கடி பெருமைபட கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “அழைக்கின்றார் அண்ணா” என்ற இந்தப்பாடலை நாகூர் ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால் நிச்சயம்  திராவிட நாடு பெற்று விடுவேன்” என்பதுதான். அப்படிப்பட்ட காந்தக் குரல் ஹனிபாவுடையது. ஒலிபெருக்கியையே அதிர வைக்கும் எட்டுக்கட்டை கம்பீரச் சாரீரம் அது.


#  “ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
    தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!”

    “திராவிடச் சோலையிலே
    தீரர் வாழும் வேளையிலே
    செந்தமிழை மேயவந்த
    இந்தி என்ற எருமை மாடே!
    முன்னம் போட்ட சூடு என்ன
    மறந்ததோ உனக்கு?
    என்றும் இந்தி ஏற்கமாட்டோம்
    ஓடிப்போ வடக்கு!”

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாகூர் ஹனிபா தி.மு.க. மேடைகளில் பாடிய பாடல் வரிகள் இவை.

#  “ஓடி வருகிறான் உதயசூரியன்”

  “அழைக்கின்றார்.. அழைக்கின்றார் அண்ணா”

  “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே”

  “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

  “வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா”

என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த ‘தனிமனித வானொலி’.

நன்றி: 'நாகூர் மண் வாசனை" வலைப்பூ

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close