Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெண்கலக்குரலை விஞ்சிய ஹனிபா!

திருவாரூர் விஜயபுரம் பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ள சபையில் 'நாகூர் ஹனிபாவின் கச்சேரி" என்று அறிவித்து இருந்தார்கள். குளத்தில் தண்ணீர் பாம்பு தலையை நீட்டுவதுபோல் மெல்ல சபைக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டேன். அப்போதுவரை  சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். செளந்தரராஜன் குரல்களில் லயித்திருந்த காலம்.
 

ஒலிபெருக்கி முன்பு உதட்டை பொருத்திய ஹனிபா 'இந்த பாடலை எந்த பாடகனாவது சுருதி பிசகாமல் பாடினால் நான் இசை உலகை விட்டே விலகத்தயார்" என்கிற சவாலோடு 'திக்குத் திகந்தமும் கொண்டாடியே...." என்று தொகையறாவை வெண்கலக்குரலை விஞ்சிய குரலாக ஹனிபா  இசைத்தபோது, ஒட்டுமொத்த சபையும் ஸ்தம்பித்தது. அடுத்து அதன் தொடச்சியாக 'உம்மை ஒரு போதும் நான் மறனேன் மீரா..." என்று எல்லோரையும் ஒரு மணி வெயிலில் உட்கார வைத்த ஐஸ்கட்டியாய் உருகவைத்தார்.

திருவாரூரில் கலைஞர் கருணாநிதி, கார்பன் காப்பி வைத்து பென்சிலால் எழுதி முரசொலி விற்ற காலத்தில், ஹனிபா ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது இருந்து கருணாநிதியின் கெழுதகை நண்பர் ஹனிபா.  கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் ரேஞ்சுக்கு கருணாநிதியின் மேல் வெறித்தனமாக பாசம் கொண்டவர். ஒருமுறை நீதிகேட்டு திருச்செந்தூருக்கு நடைபயணம் போனார் கருணாநிதி. நீண்டதூரம் நடந்ததால் கால் புண்ணாகி காலில் கட்டு போட்டபடி நடந்தார். அப்போது ஓரிடத்தில் நடந்த மீட்டிங்கில் கருணாநிதி காலைப் பார்த்து கதறிவிட்டார், ஹனிபா. அப்போது நடந்த எம்.ஜி.ஆர் ஆட்சியை எதிர்த்து 'கீழே இறங்கு ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் கீழே இறங்கு..." என்று கோபத்தின் உச்சியில் நின்று ஒருமையில் திட்டித்தீர்த்தார்.

தி.மு.க மாநாட்டில் யார் இருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக ஹனிபாவின் கச்சேரி இடம்பெறும். முன்வரிசையில் அமர்ந்து கண்கொட்டாது ஹனிபாவின் இசையை கேட்டு ரசிப்பார் கருணாநிதி. அவரது சொந்த ஊரான நாகூருக்கு அருகிலுள்ள இஸ்லாமிய மக்கள் நிரம்பி வாழும் நாகப்பட்டின பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக 1957-ல் நிறுத்தினர். சிவாஜியை எப்படி சொந்த ஊர் சூரக்கோட்டை மக்கள் தோற்கடித்தனரோ அதுபோல் ஹனிபாவையும் தோற்கடித்தனர். அடுத்து வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க  சார்பில் நிறுத்தப்பட்டார். அப்போதும் தோற்றார்.  கடைசியில் 1600 கோடி சொத்துக்கு சொந்தமான வக்பு வாரியத் தலைவராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி. வாழ்நாள் முழுக்க இஸ்லாமிய இறைப்பாடல் பாடிவந்த ஹனிபா இடையில் 'செம்பருத்தி" திரைப்படத்தில் பாடியதற்காக அவரை சிலகாலம் பாடக்கூடாது என்று அவரது சமூகம் கட்டிப்போட்டது.

இசைமுரசு என்று உலகமக்களால் போற்றப்பட்ட ஹனிபா, தனது 96வது வயதில் இசை மூச்சை  நிறுத்திக் கொண்டார்.

- எம்.குணா

============================================================================

                                      'பட்டுமணல் மெத்தையிலே... பூ மணக்கும் வேளையிலே..!'


முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கோமாநிலையில் இருந்து சுயநினைவு திருமிபிய உடனே ‘‘நாகூர் ஹனிபா பாடிய ஓடி வருகிறான் உத்யசூரியன் பாடல் கேட்கணும்’’ என்றார். அந்தளவிற்கு அவரது குரல் வளம் அனைவரையும் வசீகரித்ததோடு மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் கொடுத்தது. இன்றைய தலைமுறையினருக்கு இவர் ஒரு திமுக பிரச்சார பாடகர், கருணாநிதியின் புகழ் பாடு அபிமானி என்ற அளவில்தான் இவரை தெரியும்.

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலத்திலேயே அதன் கொள்கைகளை  தன் குரல்வளத்தால் மக்களிடம் பரப்பியவர். பெரியார், அண்ணா கலந்து கொள்ளும் மேடைகளில் பாடியிருக்கிறார். நாகூரில் இவர் கட்டிய அண்ணா இல்லத்தை, அண்ணாதான் திறந்து வைத்தார். அண்ணா இறந்த போது இவர் பாடிய ‘ பட்டுமணல் மெத்தையிலே... பூ மணக்கும் வேளையிலே... உறங்குகிறாய் உறங்குறாய் அண்ணா' என்ற பாடல் தமிழ்நாடு முழுவதும் இவருக்கு புகழை தேடி தந்தது.

'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே..!' என அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு இவர் பாடியிருக்கிறார். ஆனால் நாகூர் ஹனிபாவும் கருணாநிதியும் சமகால நண்பர்கள். ஆரம்பகாலங்களில் ஹனிபா பாட்டு பாடி கூட்டத்தை கூட்டுவார்... கருணாநிதி உரையாற்றுவார். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் திமுக கூட்டங்களில் பாடல்கள் பாடுவதற்கு பெரும்பாலும் மதிப்பூதியம் வாங்கியதில்லை. திருமண விழாக்களிலும் கூட பண விஷயத்தில் கறாராக இருக்கமாட்டார். அவர்களின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப நெகிழ்வோடு நடந்து கொள்வார்’’ என நினைவு கூர்கிறார் திமுக நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் செயலாளர் அம்பலவாணன்.

 ‘‘திமுக ஆட்சிகாலத்தில் ஹனிபாவுக்கு வக்பு வாரிய தலைவர் பதவி வழங்க ஆசைப்பட்டார் கருணாநிதி. தனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் அந்த பதவியை மறுத்தார் ஹனிபா. இவருக்காகவே ஆவணங்கள் உத்தரவுகள் எல்லாம் தமிழில் மாற்றப்பட்டன. அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களின் திருமண விழாக்களில் கண்டிப்பாக இவருடைய கச்சேரி இருக்கும். பாரதிதாசன், உடுமலை நாரயண கவி எழுதிய பாடல்களை அதிகமாக விரும்பி பாடுவார். இவருடைய கம்பீர குரல் உலகநாடுகள் அனைத்திலும் உலா வந்தது’’ எனகிறார் நாகூர் ஹனிபாவை நன்கு அறிந்த பேராசிரியர் ஹாஜாகனி.

‘‘இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை..!’’ - நம்முடைய செவிப்பறைகளில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

- கு. ராமகிருஷ்ணன்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close