Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரவுடியாக சுத்திய என்னை மனுஷனாய் மாத்தியவர் ஜெ.கே: சென்னை நாகூரானின் கதை!

’’அய்யா மட்டும் இல்லாட்டி இன்னைக்கு நான் ஜெயில்ல களி தான் சாப்பிட்டுட்டு இருந்திருக்கனும். 2002ல் நான் பண்ண ரவுடிசத்துக்காக போலீஸ் என்னை துரத்துச்சு. பொறுக்கியா தறுதலையா சுத்திட்டு இருந்தவனுக்கு மறுவாழ்வு கொடுத்து மனுஷனா மாத்துனவர் ஜெ.கே அய்யா தான்’’ கண்ணீர் முட்டப் பேசுகிறார் 'சென்னை நாகூரான்’.

ஒரு காலத்தில் ரவுடி என்று சொல்லப்பட்டவர், இன்று தமிழ்நாடு கானா கலைஞர்கள் சங்கத்தின் தலைவர். ஜெயகாந்தனுடன் கடந்த 12 வருடங்களாக கூடவே இருந்த நாகூரான், தன் குருநாதரின் இழப்பைக் குறித்து பேசும் இந்த பகிர்வு ஜெயகாந்தனுக்கான உன்னதமான கண்ணீர் அஞ்சலி.

நாகூரான் பேசுவதைக் கேட்போம்.

’’2002ல நான் செக்யூரிட்டி வேலை பாத்துட்டு இருந்தேன். அந்த சமயத்துல சேர கூடாத கூட்டாளிகளோட சேர்ந்து சைக்கிள் செயின் சுத்துறது, கத்தியை வச்சு மிரட்டுறதுன்னு நான் பண்ணாத ரவுடித்தனமே இல்லை. போலீஸ் ஒருபக்கம் துரத்தினாலும், நான் யாருக்கும் அடங்காம என் போக்குல போயிட்டு இருந்தேன். அப்ப தான் அய்யாவுக்கு தெரிஞ்ச ஒருத்தரோட பழக்கம் எனக்கு கிடச்சது. அவர் தான் என்னை ஜெ.கே. அய்யா கிட்ட அறிமுகப்படுத்தினார். அவரை சந்திச்ச அடுத்த நிமிஷம் தான் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துச்சு.

'என்னடா ரவுடித்தனமும் பண்ணுவே, நல்லா பாட்டும் பாடுவியாமே’ன்னு கேட்டு என்னை ஒரு பாட்டு பாட சொன்னார்.

'இதுவும் வேணுமடா... இன்னும் வேணுமடா... எதையும் நம்பி எடையும் போடாமல் பழகி வந்தேனே’னு ஒரு பாட்டு பாடினேன். அதை கேட்டு, 'இவ்ளோ நல்லா பாடுறியே, ஏன் இப்படி உருப்படாம இருக்கே'ன்னு அடிக்கடி புத்திமதி சொல்வாரு. அவருக்கு என் பாட்டுன்னா அவ்ளோ இஷ்டம். நீ உன்னோட கலையை இப்படியே விட்டுட கூடாதுன்னு சொல்லி கானா பாடகர்களுக்காக ஒரு சங்கம் ஆரம்பிக்க சொல்லி என்னை அதுக்கு தலைவராக்க அவ்ளோ முயற்சி எடுத்தார். ஒரு காலத்துல பொறுக்கியா இருந்தவன் இன்னைக்கு கானா கலைஞர்கள் சங்க தலைவர்.

அய்யாவால என்னைப் பாக்காம இருக்க முடியாது. தினமும் காலையில ஒருதரம், சாயங்காலம் ஒருதரம்னு அவர் வீட்டுக்குப் போய் கானா பாட்டு பாட ஆரம்பிச்சுடுவேன். அவருக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல கூட என்னோட பாட்டைக் கேட்டு எழுந்து உட்கார்ந்துடுவார்.

‘’நாயா பேயா அலைய வச்சு..
நடுரோட்டுல குந்த வச்சு...
மூக்குல ரெண்டு சந்தை வச்சு..
தவிக்க விட்டியே கடவுளே...
நான் மாட்டிக்கினு முழுக்கிறேன் இப்ப நடுவுல...’’ன்னு ஒரு நாள் சத்தம் போட்டு பாடிட்டேன். அவர் அந்த பாட்டை கேட்டு வரிவரியா விளக்கம் கேட்டார். என்னோட வலிகளை அந்த மனுஷன் புரிஞ்சிக்கிட்டு எனக்கு ஒரு நல்ல அப்பாவா வழியை காட்டி நல்லது எது, கெட்டது எதுன்னு புரிய வச்சார். அவர் இல்லாட்டி இன்னைக்கு நான் ஜெயில்ல தான் இருந்திருப்பேன். ஜெ.கே. அய்யாகிட்ட கத்துக்க வேண்டிய நல்ல விஷயம் நிறைய இருக்கு. அவர் வீட்டுக்கு போனா அது மினிஸ்டரா இருந்தாலும் சரி... சாதாரண கந்தல்துணியோட வர்ற கூலித் தொழிலாளியா இருந்தாலும் சரி...  அவங்களை ஒரே இடத்துல உட்கார வச்சி உபசரிக்குற உயர்ந்த பண்பை அவர்கிட்ட தான் பாத்தேன்.

அய்யாவை இப்ப தான் பெசன்ட் நகர்ல நல்லடக்கம் பண்ணிட்டு வாரேன். துக்கம் நெஞ்சை அடைக்குது. அவர் கூட 12 வருஷம் வாழ்ந்துட்டேன். இனிமேலும் அவர் நெனப்புல நல்லவனா வாழ்ந்துட்டு சாவேன்’’ என்று கண்ணிருடன் முடித்தார் சென்னை நாகூரான்.

 ’ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கு ஜெ.கே.வின் இந்த சிஷ்யன் ஒரு உதாரணம்.

-பொன்.விமலா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ