Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4 ஆண்டுகளில் 1400 பேர் சாவு... மனிதப் பலி கேட்கும் செம்மரக்காடு!

வெட்ட வெட்ட கோடிகளைக் கொட்டும் தாவரத் தங்கமாக இருந்த செம்மரம் தற்போது கடத்தல்காரர்களுக்கு மனிதப் பலி கேட்கும் வன எமனாக மாறிப் போயுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 1400 மரம் வெட்டும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை காவு வாங்கி, கடத்தல் காரர்களுக்கு சாவு பயம் காட்டி பரந்து விரிந்து கிடக்கிறது திருப்பதி வனப்பகுதி. இனி தமிழன் திருப்பதி வெங்கடாஜலபதியை கும்பிடச் சென்றால், அத்துவான காட்டில்   மரண ஓலம் எழுப்பி, துப்பாக்கிக் குண்டடிப்பட்டு மண்ணில் சரிந்து மரித்துப்போன அப்பாவித் தமிழர்களின் நினைவு வராமல் இருக்காது.

ஆந்திராவுக்கும், தமிழகத்திற்கும் இருக்கும் ஆதிகால உறவையும் கூட மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் புறப்பட்டு உள்ள நிலையில் செம்மரம், ஏன் தாவர தங்கமாக மாறிப்போனது? வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்தும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? அதில் ஏன் தமிழ் நாட்டு மரம்வெட்டும் தொழிலாளர்கள் ஈடுபட்டு உயிரை இழக்கிறார்கள்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.     

`வான் பொய்த்தாலும் தான் பொய்யா காவிரி`... `சோழ நாடு சோறுடைத்து`...இப்படி ஏரளாமான செழிப்பான பழமொழிகள் கொண்ட தமிழகம், தற்போது குடி தண்ணீருக்கும், குடி இருப்பதற்கும்,உணவுக்கும் காய்கறிக்கும் அண்டை மாநிலங்களை அண்டி இருக்கவேண்டிய அவலம்  தாங்கி நிற்கிறது.இது யதார்த்தமான நிலை.

இந்நிலையில்,விவசாயம் பொய்த்துவிட்ட சூழலில், இருக்கும் விலை நிலங்களும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்கும், அந்நிய நாட்டு பகாசூர கம்பெனிகளுக்கும் இரையாகிவிட்ட காலகட்டத்தில், ஏழைஎளிய தமிழர்கள்   பிழைக்க வழி தேடி அலைகிறார்கள்.அப்போது அவர்களின் கண்களையும்,காதுகளையும் வந்தடைகிறது `செம்மரம்`. 

செந்தமிழ், தெலுங்கு,கன்னடம் என்று மாறி மாறி கடத்தல் கும்பலின் தலைவர்கள்  `நைசாக` பேசி  அப்பாவி மரம் வெட்டும் தொழிலாளர்களை திருப்பதி வனம் நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.'ஒரு பகல், ஒரு இரவு உன் கையில 20 ஆயிரம் ரூபாய்'  இந்த  பண மொழிக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் மயங்கித்தான் தங்களின் இன்னுயிரை இழந்துவிட்ட பெருஞ்சோகம் நடந்துள்ளது.

தமிழகத்தில் பூண்டி ஏரி தொடங்கி ஆந்திரா, கர்நாடக வனப்பகுதிகளில் கடப்பா வரையிலான பகுதிகளில்   செம்மரங்கள் ஓங்கி உயர்ந்து, செழித்து வளர்ந்துள்ளன. அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாத,  மிகவும் அடர்ந்த வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள இந்த செம்மரங்கள், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகம் பிரபலம் ஆகவில்லை. பலரின் கண்களுக்கும் தட்டுப்படாமல்தான் இருந்தது.

ஆந்திர வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் காரணமாக யாரும் அப்பகுதிக்குள் ஊடுருவ எண்ணவில்லை. அச்சம் காரணமாக தயங்கியே இருந்துள்ளனர். நக்சலைட்டுகளின்  செல்வாக்குக்  குறைந்த பிறகு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள தேக்கு, சந்தன, செம்மரக் கட்டைகள் மட்டுமின்றி வன விலங்குகள் வேட்டைக்கும் கடத்தல்காரர்களுக்கு வழியேற்பட்டுவிட்டது.

மேலும் இரு மாநில எல்லை பகுதிகள்  என்பதால் எந்த மாநில போலீசாரும் உடனடியாகச்  சென்று நடவடிக்கை எடுக்க முடியாத  சூழல் கடத்தல்காரர்களுக்கு மிகவும் வசதியாகவும் போய்விட்டது. ஜரூராக நடந்த இந்தக் கடத்தல்கள்,  கடந்த 2010ஆம் ஆண்டு ஆந்திர அரசு நடத்திய என்கவுன்ட்டருக்கு பிறகு கொஞ்சம் சுணங்கியது. இருந்தபோதும் இந்த செம்மரங்களுக்கு ஜப்பான், சீனா ,ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் இருக்கும் கடும் `கிராக்கி`, கடத்தல் மன்னர்களை தெம்படைய வைத்து மீண்டும் கடத்தலில் குதிக்க வைத்தது.

நன்றாக விளைந்து வலிமை பெற்ற செம்மரங்கள், டன் ஒன்றிற்கு சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை  விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, அந்நாடுகளின் சந்தைகளில்,இந்திய செம்மரங்களின்  விலை இன்னும் எகிறி கோடிகளைத்  தொடுகின்றன. புத்த மடாலயங்களும்,புத்தர் சிலைகளும்,கழுத்து மணிகளும்,பல்வேறு இசைக் கருவிகளும்,மூலிகை மருந்தும் செம்மர கட்மூலமே  உருவாக்கப்படுவதுதான் இந்த அளவிற்கு முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது.

நம் நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து மரங்களை வெட்டி கடத்துவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். ஆனாலும், ஆந்திராவின் செல்வாக்கு பெற்ற அரசியல் புள்ளிகள் மற்றும் உயர் மட்ட வனத்துறை அதிகாரிகள் தயவுடன் இந்த செம்மரக் கடத்தல் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதற்காக இந்த கும்பல்கள் பல்வேறு பிரத்யேக வழிகளைக்  கையாள்கிறார்கள். லாரிகளில் வெளிப்படையாகக்  கடத்தி சென்றால் பிடித்துவிடுவார்கள் என்பதால் கார்களிலும், வேன்கள் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் கூட லாவகமாகக் கடத்தி செல்கின்றனர்.

தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களான  திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் கூலி வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்களை இந்த கடத்தல் கும்பல்கள் கண்ணி வைத்துப் பிடிக்கின்றன.  இங்கு வசிக்கும் மக்களுக்கு, விவசாயமும், மரத்தை வெட்டி விறகாக விற்பதும்தான் தொழில் என்பதால் அவர்கள் எளிதில் விழுந்து விடுகிறார்கள்.

மரம் வெட்டும் இளைஞர்களை, நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் சம்பளத்தில்15 நாட்களுக்கு கடத்தல் கும்பல் ஒப்பந்தம் செய்கிறது. இதில், முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் அந்த இளைஞர்களின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர்கள், லாரிகள் மூலம் ஆந்திர வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில் பெரும்பாலான படிப்பறிவு இல்லாத அப்பாவி கிராம மக்கள் புரோக்கர்களின் ஆசை வலையில் விழுகின்றனர். கொஞ்சம் விவரம் தெரிந்த ஆட்கள் இருந்தால் அவர்களுக்குக்  கொடுக்க வேண்டியதை கொடுத்து பேச விடாமல் செய்து விடுகின்றனர்.

இதுபோன்று அழைத்து செல்லப்பட்டவர்களில்,கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1400க்கும் அதிகமானோர் செம்மரக்கட்டைகள் கடத்தல் சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில்,  கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதும் நடந்துள்ளது.

இது  கடத்தப்பட்டதில் வெறும் 20 சதவீதம்தானாம். இதன் மொத்த விலை ரூ.2500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை, துப்பாக்கிச் சூடு, அரசு துறைகளின் கெடுபிடி, சோதனைச்சாவடி சோதனைகள், கடல் வழி அச்சங்கள் இவை அனைத்தையும் தாண்டி இந்த தாவரத் தங்கம் எனப்படும் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதற்கு முக்கிய காரணம் இதில் கிடைக்கும்` கணக்கில் வராத லாபம்தான்.

ஆந்திராவில் மணல் மாஃபியா, கிரானைட் மாபிஃயாக்களுக்கு அடுத்தபடியாக இந்த செம்மரக்கட்டைகள்தான் அங்குள்ள அரசியல் புள்ளிகளுக்கு வளம் கொழிக்கும் அட்சய பாத்திரமாக உள்ளது. எனவே செம்மரங்களைக்  கடத்துவதற்கு என்று தனியாக ஒரு ரகசிய சங்கிலித்  தொடர் கும்பலே செயல்பட்டு வருகிறது. கடத்துவதற்கு ஒரு குழு, வெட்ட ஒரு குழு, விற்பனைக்குக்  கொண்டு செல்ல ஒரு குழு, ரகசியமாகக்  கடல் வழி ஏற்றுமதிக்கு ஒரு குழு என இவற்றின் நடவடிக்கைகள் மர்மமாகவே தொடரும். ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதாக  காட்டிக் கொள்வதும்  கிடையாது.

வெட்டப்படும் செம்மரங்கள் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கப்படுகின்றன. இதற்காக அங்குள்ள கிடங்குகளுக்கு சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக வாடகை கொடுக்கப்படுகிறது. பின்னர் இவை லாரிகளில் ரகசியமாக அடுக்கப்பட்டு அவற்றை தோல் பொருட்களைக்  கொண்டு செல்வது போல மூடி வைத்து எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒரு கும்பலில் உள்ள சிலர் சோதனை சாவடிகளைச்  சமாளிக்கும். பின்னர் இவை அனைத்தும் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன. அந்த கும்பலுக்கு பணி அத்துடன் முடிந்துவிடும். பின்னர் மற்றொரு கும்பல். சுங்க இலாகா அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டும், கொடுப்பதைக் கொடுத்தும்  அப்படியே கப்பலில் ஏற்றுகின்றனர்.

இந்த கும்பலுக்கு பணி அத்துடன் முடியும். இதே போல் மற்றொரு கும்பல் விசாகபட்டினம் துறைமுகத்தையும், கேரளாவில் உள்ள துறைமுகத்தையும் பயன்படுத்தி வெளிநாட்டு வியாபாரிகளைப் பிடிக்கின்றனர். அங்கு வரும் சீனா, மியான்மர், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளின் தரகர்கள், துறை முகத்திலும் நடுக்கடலிலும் பேரம் பேசி விலை படிய வைக்கப்படும்.

பின்னர் இவை எங்கெங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானித்து அந்தந்த நாடுகளில் கிராக்கி உள்ள பார்ட்டிகளுக்கு அனுப்பி வைப்பர்.இந்த கும்பலுக்கும் வேலை அத்தோடு முடிந்து விடும். ஹாலிவுட் கடத்தல் கதைகள் கொண்ட சினிமாக்களை காட்டிலும் விறுவிறுப்பு கூட்டும் அத்தனை அம்சங்களும் இந்தக் கடத்தலில் உண்டு.

இவற்றில் எந்த ஒரு இடத்திலும் பிசிறு நடந்தாலும்,  தொழிலை வெற்றிகரமாக நடத்திச்  செல்லும் கில்லாடி தொழில் அதிபர்கள், ஆந்திராவில் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரசியல்வாதிகளின் பின்புலமும், பிரத்யேக ஆசியும் எப்போதும் உள்ளன.

ஆனால்  இதில் சிக்கி தங்களது உயிர், பொருள், ஆவி வரை இழப்பது தமிழக மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் மட்டும்தான் என்பது கொடுமையான ஒன்று.

தமிழக கிராம இளைஞர்களின் இந்த அறியாமையை பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் கும்பல், கோடிக்கணக்கில் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டே  இருக்கின்றன.

ஆனால், குற்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் தமிழக இளைஞர்கள், பல ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு ஆளாகி வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.

ஒரு புள்ளிவிவரக் கணக்கின்படி கேரளா மற்றும் ஆந்திர மாநிலச் சிறைகளில் சுமார் 2 ஆயிரத்து 500 தமிழக இளைஞர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை, வேலூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பல சம்பவங்களில் வழக்குகளே பதிவு செய்யப்படாமல் ஆந்திர வனப்பகுதிகளில் காணாமல்போன தமிழக இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்றும் செய்திகள் அச்சமூட்டுகின்றன.

சர்வதேச வலிமை கொண்ட செம்மரக்  கடத்தலை வெறும் இரு மாநில உணர்வு சம்பந்தப் பட்ட விசயமாகப் பார்க்காமல், உயிர் சம்பந்தப் பட்ட பிரதான பிரச்னையாக ஆந்திர, தமிழக அரசுகள் உணர்ந்து நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும் .

அப்போதுதான் மனிதப் பலி கேட்காது அந்தச் செம்மரக்காடு.

- தேவராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close