Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிரியையும், மாணவனும் செய்யும் செயலா இது?!

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்ட குரு என்ற சமுதாயம் மீது களங்கம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது, நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியிலும், குமரி மாவட்டத்திலும் நடந்த சம்பவங்கள்.

பத்தாம் வகுப்பு மாணவனை இழுத்துக் கொண்டு ஆசிரியை ஒருவர் ஓடி விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல பரவி வருகிறது.

கல்வியை கற்பித்து கொடுக்கும் ஆசானான ஆசிரியர், ஆசிரியை ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும். அவரே முறைத்தவறினால் அவரிடம் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் நிலை எப்படியிருக்கும். மாணவ, மாணவிகளுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டியது ஆசிரியர், ஆசிரியைகளே.

டெல்லியிலும், வெளிநாடுகளிலும்தான் இது போன்ற செய்திகளை படித்திருப்போம். ஆனால் இப்போது தென்மாவட்டமான நெல்லையில் இந்த கேவலமான சம்பவம் அரங்கேறி இருப்பது கல்வியாளர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வேதனையை விதைத்துள்ளது.

இதற்கெல்லாம் முதல் காரணம் இன்றைய சினிமா என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சமூக ஆர்வலர் பொன் சேகர். அவர் கூறுகையில், "எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். பக்கத்து மாவட்டமான நெல்லையில் இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்த மாவட்டத்துக்கு மட்டும் கேவலமல்ல. ஒட்டுமொத்த தமிழகத்துக்கே கேவலம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய கையோடு குருவாக மதிக்க வேண்டிய ஆசிரியைரின் கரம் பிடித்து ஊரை விட்டு ஓடி இருக்கிறார்கள் இவர்கள் இருவரும்.

ஓடும் போது செலவுக்காக வீட்டிலிருந்த 60 சவரன் நகை, பத்தாயிரம் பணமும் எடுத்து கொண்டு போயிருக்கிறார்கள். நகையும், பணமும் செலவாகியப்பிறகு இவர்களின் நிலைமை அந்தோபரிதாபம். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஏற்பட்ட பருவ மாற்றம் காரணமாக இப்படியொரு எண்ணம் மாணவனின் மனதில் ஏற்பட்டு இருக்கலாம். அந்த எண்ணத்தை ஆசிரியையுடன் மாணவன் பகிர்ந்தபோது அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்த வேண்டிய பொறுப்பு அந்த ஆசிரியைக்கு உள்ளது. ஆனால் அதை விட்டு அந்த மாணவனின் காதலுக்கு மனதை பறிகொடுத்து ஆசிரியர் சமுதாயத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி விட்டார் அவர்.

சினிமாக்களில்தான் ஆசிரியை மீது மாணவனும், மாணவி மீது ஆசிரியருக்கும் காதல் ஏற்படுவதாக காட்சியை படம்பிடித்து இருப்பார்கள். அதை நிஜ உலகில் வாழ நினைத்தால் என்னாகும் இந்த தமிழ் சமுதாயம். இப்படிப்பட்ட ஆசிரியை நம்பி எப்படி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியும். தனி மனித ஒழுக்கத்தை ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கடைப்பிடித்தால் மட்டுமே அவர்களிடம் கல்வி கற்கும் மாணவ சமுதாயத்தின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். இல்லையெனில் இதுபோன்ற பொருந்தாத காதல் மலர்ந்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையே சூன்யமாகி விடும்" என்றார் சமூக அக்கறையுடன்.

ஆசிரியர் வட்டாரத்தில் கூறுகையில், "ஆசிரியர் பணி என்பது புனிதமானது, அர்ப்பணிப்புமிக்கது. இந்தப்பணியை களங்கப்படுத்துபவர்கள் ஆசிரியர் பணிக்கே தகுதியற்றவர்கள். காதல் என்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஆசிரியைக்கு சக ஆசிரியர் ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி வாட்ஸ்அப்பில் வலம் வந்தது. பள்ளியை பள்ளியறையாக மாற்று நினைக்கும் இத்தகைய ஆசிரியர், ஆசிரியைகளை என்ன செய்வது.  இவர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கு தலைக்குனிவு ஏற்படுகிறது. இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இவர்களை களையெடுப்பதோடு கடும் தண்டணையும் வழங்கப்பட வேண்டும்" என்றனர்.

பொருந்தாத காதல் பருவ வயதில் ஏற்படுவது இயல்பு என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். இதுபோன்ற பொருந்தாத காதல் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை திருத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால், இன்று பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. அன்பிற்காக ஏங்கும் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள். பேச கூட நேரமில்லாமல் குழந்தைகளுக்காக உழைக்கும் பெற்றோர்கள் உள்ளனர். எனவே குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். பருவ வயதில் அவர்களை கண்காணித்து பக்குவமாக வாழ்க்கையை புரியவையுங்கள்.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ