Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவம், பொறியியல் சீட்டுக்காக அலைகிறீர்களா... உஷார்!

ள்ளிகளில் பொதுத் தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் தேர்வு முடிந்து முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

முடிவு வருவதற்கு முன்பே பொறியியல், மருத்துவ படிப்பில் சேர துடிக்கும் மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் கவர்ச்சியான அறிவிப்புகளை சிலர் வெளியிடத் தொடங்கி விட்டனர். இந்த அறிவிப்புக்குப் பின்னால் உள்ள ஆபத்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை.

அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இதில் பாயின்ட் அடிப்படையிலான மதிப்பெண்களில் வாய்ப்பை கோட்டை விடுபவர்கள், ஓரளவு பிரபலமடைந்த தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மாணவர்கள், கல்வித்துறை நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாமல், பணத்தை கொடுத்து மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சீட் பெற முயல்கிறார்கள். இவர்களை குறி வைத்து ஒரு மோசடி நெட்வொர்க் தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் இந்த மோசடி நெட்வொர்க் காட்டில் பணமழை என்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள மருத்துவம் உள்ளிட்ட மேல்படிப்பிற்காக இடங்களை வாங்கி கொடுப்பதாக இந்த மோசடி நெட்வொர்க், மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் ஆசையை காட்டி அவர்களுக்கு வலைவிரிக்கிறது. இவர்களின் நுனிநாக்கு ஆங்கிலத்திலும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும், நட்சத்திர அறையில் நடத்தும் பேச்சுவார்த்தைகளையும் நம்பி ஏமாறுபவர்களின் பட்டியல் ஆண்டுந்தோறும் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சீசனில் டிப்டாப் மோசடி கும்பலிடம் பணத்தையும் கொடுத்து, கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவது சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. இதற்கென தனியாக புரோக்கர்களும் இருக்கிறார்கள்.

இன்றையக் காலக்கட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துள்ளன. இதில் சில கல்லூரிகளைத் தவிர, பெரும்பாலான கல்லூரிகளில் முழு 'சீட்'டும் நிரப்பப்படுவதில்லை. இதற்கு பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் ஆண்டுந்தோறும் குறைந்து வருவதுதான் காரணம். பொறியியல் படிப்பவர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட்டானால் மட்டுமே நல்ல சம்பளத்தில் வேலை என்பது உறுதி. மற்றவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் காலத்தை கடத்த வேண்டியதிருக்கிறது.

பி.பி.ஓ என்ற அழைக்கப்படும் கால்சென்டர்களில் இரவெல்லாம் கண்விழித்து குறைந்த சம்பளத்தை பெற வேண்டியதுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் சீட்கள் நிரப்பப்படாத தனியார் பொறியியல் கல்லூரிகளுடன் கைகோர்த்து புரோக்கர்கள் தங்களது மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள். பிரபலமான கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, அனுமதியில்லாத கல்லூரிகளில் இடம் வாங்கி கொடுத்து விடுகிறார்கள். தமிழகத்தில் இந்த நிலை என்றால் வெளிநாடுகளில் சொல்ல வேண்டியதில்லை. வெளிநாடுகளில் பிரபலமான கல்லூரிகளில் இடம் வாங்கி கொடுப்பதோடு, கல்வி சலுகைகளையும் பெற்றுத் தருவதாக இந்த புரோக்கர்கள் சொல்கிறார்கள். பிறகு அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியில் எதையும் நிறைவேற்றாமல் கமிஷனை மட்டும் பெற்றுக் கொண்டு கம்பியை நீட்டிவிடுகிறார்கள்.

கல்வி சீசனில் கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்க்கை நடத்தும் இந்த கும்பல் தலைமறைவாகி விடுகிறார்கள். பிறகு அடுத்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் மீண்டும் பலரை ஏமாற்றுகிறார்கள். இதுவே வாடிக்கையாக அந்த மோசடி நெட்வொர்க் செய்து வருவதாக  சொல்கிறது காவல்துறை. இவர்கள் மீது புகார் கொடுத்து விட்டு ஏமாந்த பணம் கிடைக்கும் நம்பிக்கை பலருக்கு இன்னமும் இருக்கிறார்கள். சிலர் ஏமாந்தது தெரிந்தால் கௌரவக் குறைச்சல் என்று யாரிடமும் சொல்வது கிடையாது. ஏதோ ஒரு கல்லூரியில் கேட்கும் பணம் கொடுத்து கடைசி நேரத்தில் அட்மிஷன் வாங்கிவிடுகிறார்கள். ஆனால், நடுத்தர வர்க்கத்தினரோ, புரோக்கர்கள் மற்றும் மோசடி கும்பல் கேட்கும் பணத்துக்கு நகை, சொத்தை விற்று கொடுத்து ஏமாந்து நடுத்தெருவில் பலர் நிற்கிறார்கள்.

மருத்துவ, பொறியியல் படிப்புக்கு மட்டுமல்ல சென்னையில் எல்.கே.ஜி படிப்புக்கு கூட அட்மிஷன் வாங்கித் தருவதாக மோசடி நடக்கிறது. இந்த மோசடி கும்பல் சொல்வது எனக்கு அந்த கல்வி நிறுவனத்தின் சேர்மனை தெரியும், அமைச்சரைத் தெரியும் என்று சொல்லியே ஏமாற்றுகிறார்கள். ஏமாந்தபிறகே பலருக்கு புத்தி வருகிறது.

இந்த ஆண்டு எஜுகேசன் மோசடியில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார் கவுரிவாக்கத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி சுப்ரியா. இவரைப் பற்றி மாம்பலம் காவல் நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "தி.நகர், வைத்தியராமன் தெருவில் செயல்பட்ட ஒரு தனியார் (எஜிகேசன் கன்சல்டன்சி)  நிறுவனம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் பிரபலமான கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், எம்.எஸ் படிப்புக்கு அட்மிஷன் வாங்கித் தருவதாக ஆன் லைனில் விளம்பரம் செய்திருந்தது. அதை நம்பி பலர் அந்த நிறுவனம் கேட்ட பணத்தை அங்கு கொட்டினார்கள். ஆனால் அவர்கள் வாக்குறுதி அளித்தப்படி எம்.பி.பி.எஸ், எம்.எஸ். சீட்களை வாங்கி கொடுக்கவில்லை.

இதுகுறித்து எங்களுக்கு புகார் வந்தன. இந்த மோசடியில் ஈடுபட்டது கவுரிவாக்கத்தை சேர்ந்த சுப்ரியா என்று தெரிந்தது. இவர் எம்.பி.ஏ படித்துள்ளார். குறுகிய  காலத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த மோசடியில் சுப்ரியா ஈடுப்பட்டுள்ளார். அவர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியதாக புகார் வந்துள்ளது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய், இரண்டு லேப் டாப்கள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றனர்.

உஷராக இருக்கவில்லையென்றால் உங்கள் பணமும் ஸ்வாகா!

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ