Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போகிறதா அஞ்சல்துறை?

க்களோடு பின்னிப் பிணைந்த அரசுத்துறை ஒன்று உண்டென்றால், அது அஞ்சல் துறைதான். முன்பெல்லாம் கிராமங்களில் அஞ்சல்காரர்கள்தான் மக்களின் கூகுள் போல காட்சி தந்தார். ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவராக அஞ்சல்காரர் இருப்பார். காரணம் விவரம் தெரிந்தவராக மக்கள் அவரை மதித்ததால். ரயில்வேக்கு அடுத்த பெரிய அரசு நிறுவனமாக அஞ்சல் துறை திகழ்ந்தது. 

மக்கள் சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு லாபத்தை இரண்டாம் பட்சமாக்கி செயல்பட்டு வந்த அஞ்சல் துறை தற்போது பேங்கிங், ஏடிஎம், ஆர்.டி, டெபாசிட் வசூலித்தல், ஃபாரின் மணி எக்சேஞ், பொருட்கள் விற்பனை என்று ஒரு பக்கம் நவீனமாக தன் சேவையை விரிவுபடுத்தினாலும், இன்னொரு பக்கம் அடிப்படையான சேவைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வருகிறது. இதனால், அஞ்சல் துறையை காலம் முழுதும் நம்பி வாழ்ந்த பொது மக்களை விட்டு அந்நியப்பட்டு வருகிறது.

நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த தந்தி சேவையை சில மாதங்களுக்கு முன் நிறுத்திக்கொண்டது. காரணம் தகவல் தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் செல்போன்கள் பெருகி விட்ட பின்பு தந்தியை யாரும் பயன்படுத்தவில்லை. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் மட்டும் தந்தி ஒரு ஆவணமாக பார்க்கப்பட்டது. இப்போது செல்போனில் எஸ்.எம்.எஸ். வசதி வந்து விட்ட பின்னாலும், செல்போனில் சிம்மை மாற்றி பேசினாலும் அது எந்த ஊரில், எந்த டவரிலிருந்து பேசியது என்பது வரை துல்லியமாக  தகவல்களை பெற முடியுமென்பதால் தந்தி தேவையற்ற ஒரு சேவையானது.

அதுபோல் ஆரம்பத்தில் துக்க நிகழ்வுகளை சொல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த தந்தி சேவை, பின்பு வாழ்த்துக்களை கோட் நம்பர் மூலம் அனுப்பும் எளிய வழியாக இருந்தது. அது எல்லாவற்றையும் செல்போன் காலி செய்து விட்டதால், அதை தபால் துறை நிறுத்தியபோது ஒரு வருத்தம் இருந்ததே தவிர மக்களுக்கு எந்த பாதிப்புமில்லை.

இன்றும் ஐம்பது பைசாவுக்கு அஞ்சலட்டை சேவை இருந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், கடிதம் எழுதுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.  முன்பு பள்ளிகளிலிருந்து பரீட்சை முடிவுகளை அஞ்சலட்டையில்தான் அனுப்புவார்கள். அதை வாங்குகின்ற அனுபவமே தனி, தற்போது பள்ளிகளும் எஸ்.எம்.எஸ்ஸில் ரிசல்ட் அனுப்புகிறார்கள். பத்திரிகைகள் கூட வாசகர் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லி ஊக்கபடுத்துகின்றன.

இந்த நிலையில்தான் மணி ஆர்டர் சேவையையும் நிறுத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. தபால் துறையின் 135 ஆண்டு கால சேவையை நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணமுள்ளது. முன்பு வெளியூரில் பணியாற்றுபவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப மணி ஆர்டர்தான் சரியான வழி. அது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட நபர் கையில் பணம் கிடைத்துவிடும். அது கிடைத்ததற்கான ஒப்புதலும் நமக்கு வந்து விடும்.

ஆனால், வங்கிகள் தங்கள் சேவையை நவீனமயமாக்கியதில் எங்கிருந்தும் பணம் போடலாம், அடுத்த நிமிஷமே அந்த பணத்தை எங்கேயும் எடுத்து விடுகின்ற வசதியை அதிகப்படுத்தியதால், மணியார்டருக்கு மவுசு குறைய ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் மணியார்டரில் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் ஐம்பது ரூபாய் கமிஷன், ஐந்தாயிரம் என்றால் இருநூறு ஐம்பது ரூபாய் கமிஷனாக எடுப்பார்கள். ஆனால், வங்கி கோர் பேங்கில் பணம் போடவோ, எடுக்கவோ கமிஷன் இல்லை. பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடுகிறது.

இருந்தாலும் இந்த வசதி கிராமங்களில் இல்லை என்பதால் இன்றும் வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு மணி ஆர்டரில்தான் பணம் அனுப்பி வந்தார்கள். தபால் துறை இந்த மணி ஆர்டர் வசதியை கொஞ்சம் நவீனபடுத்தியது. பணம் கட்டியவுடன் எஸ்.எம்.எஸ்ஸில் ஒரு என்னை அனுப்புவார்கள். அதை அந்த ஊர் போஸ்ட் ஆபிசில் காட்டி, பணத்தை வாங்கி கொள்ளலாம். இந்த சேவைக்கு கமிஷன் குறைவு, விரைவில் பணம் கிடைக்கும். இருந்தும் கிராம மக்களுக்கு இதை பயன்படுத்த தயக்கம் உள்ளது. நேரடியாக போஸ்ட் மேன் கையில் பணம் கொடுப்பதைத்தான் விரும்புகிறார்கள்.

இதே போல் அரசாங்க உதவித்தொகை வாங்குவோரும், தபால்காரர் மூலம் வாங்கவே விரும்புகிறார்கள். ஆனால், இந்த மணியார்டர் சேவையை நவீனப்படுத்தவே தபால்துறை விரும்புகிறது. அதனால், ஆட்கள் மூலம் பணம் கொண்டு சேர்க்கும் நடைமுறையை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட முயற்சி எடுத்து வருகிறது.

சமீபத்தில் இது சம்பந்தமாக பேசிய தபால்துறை துணை தலைவர் ஷிகாமாத்தூர்குமார், ‘’ தற்போது உடனடியாக பணத்தை பெறும் வகையிலான எலெக்ட்ரானிக் மணியார்டர் முறை புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே 135 ஆண்டு கால பழமையான படிவத்தை நிரப்பி தபால் மூலம் பணம் அனுப்பும் மணியார்டர் சேவையை நிறுத்த அஞ்சல் துறை ஆலோசித்து வருகிறது’’ என்று கூறியிருந்தார். இதுதான் மணி ஆர்டர் சேவைக்கு மூடு விழா என்று பரபரப்பானது. ஆனால், அது உடனடியாக நடைமுறைக்கு வராது. மக்களே ஆர்டினரி மணி ஆர்டர் சேவையை மறந்து விடுவதுபோல் நவீன மணி ஆர்டர் சேவையை பிரபலப்படுத்துவார்கள் என்கிறார்கள்.
 
பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 1880 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பண கொடுக்கல் வாங்கல் என்ற முறையில் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் உடனடியாக பணத்தை பெறும் வகையிலான எலக்ட்ரானிக் மணியார்டர் முறை புழக்கத்திற்கு வந்தது.

சிறிய நாடுகளில் அந்த அரசாங்கம் ஒரு சேவையை சிறப்பாக நடத்துவது சாதனையல்ல. இந்தியா போன்ற பல மக்கள் தொகை அதிகமுள்ள தேசத்தில் கல்வியறிவு குறைந்த நாட்டில், மலைகள், காடுகள், பாலை நிலங்கள், கடற்புரங்கள், சமவெளிகள் நிறைந்த ஒரு தேசத்தில் மிகப்பெரிய அஞ்சல் சேவையை நடத்தி வருவதே பெரும் சாதனைதான். அதில் சில மாற்றங்களை கொண்டு வருவது கால மாற்றத்தில் சகஜம்தான் என்கிறார்கள் விவரம் தெரிந்த மக்கள்.

மாற்றங்களை வரவேற்போம் அது நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துமானால் !

- செ.சல்மான்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close