Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காந்தியை புறக்கணித்த டெல்லி புனித ஸ்டீபன்ஸ் கல்லூரி!

1915 ஏப்.12 ம் தேதி! சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் மகாத்மா காந்தி முதன் முறையாக டெல்லிக்கு வந்தார்.

இந்த தினம் டெல்லியில் நினைவு கூறப்பட்டது. அறுபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் காந்தி உயிரை விட்டது எந்தளவிற்கு முக்கியமோ, அந்த அளவுக்கு இந்த வருகை தினமும் சரித்திர முக்கியத்துவம் பெற்றதாகும்.

‘‘தென்னாப்பிரிக்காவிற்கு வந்த கோபாலகிருஷ்ண கோகலே, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள காந்தியை அழைக்கிறார். இதன்படி 1915ல் காந்தி தாய் நாடு திரும்பினார்.

இந்த சம்பவத்தையும் இவ்வாண்டு நினைவு கூறும் இந்த வேளையில், இந்த டெல்லி விஜயமும் நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. 1915 ஜனவரி மாதம் தாய் நாடு திரும்பிய காந்தி, தன்னுடைய வழிகாட்டி கோகலேயை சந்திக்க சென்றார். அவர் காந்தியிடம், ‘'தென்னாப்பிரிக்க போராட்டம் வேறு, இந்திய நிலைமை வேறு. இங்கு பல தரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இங்கு போராட்டத்தை தொடங்கும் முன்பு முதலில் நாடு முழுக்க உள்ள மக்களின் நிலைமையை அறிந்து பின்னர் போராட்டத்தில் கால் வைக்கவேண்டும்‘ என்று  ஆலோசனை கூறினார். அதன்படி காந்தி புறப்படுகிறார். முதன் முறையாக டெல்லிக்கு  ஏப்.12 ஆம் தேதியில் சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு வந்தார். இந்த தினம் அன்று நினைவு கூறப்பட்டது‘‘ என்கிறார் டெல்லி தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை.

காந்தியோடு அவரது துணைவியார் கஸ்தூரிபாய் மற்றும் நண்பர்கள் ராவ்ஜிபாய், கோட்வால் தியோதர் போன்றவர்களுடன் டெல்லிக்கு வந்தனர். அவர்கள் தங்கியது புனித ஸ்டீபன்ஸ் கல்லூரி. ஆங்கிலேயர்களால் நிர்வாகிக்கப்பட்ட அந்த கல்லூரியிலேயே வந்து தங்கியதோடு, இந்த கல்லூரி மாணவர்களிடமும் காந்தி பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்லூரியின் முதல்வராக இருந்தவர் சுஷில் குமார் ருத்ர. முதல் இந்திய கல்லூரி முதல்வரான இவர் வீட்டில்தான் காந்தி தங்கினார் என்றாலும், காந்தி, டெல்லிக்கும் இந்தக் கல்லூரிக்கும் வரக்காரணமாக இருந்தவர் இதே கல்லூரியில் பணியாற்றிய சி.எஃப்.ஆன்ரூஸ்.

ga

ஆங்கிலேயரான ஆன்ரூஸ்தான் புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட இருந்தார். ஆனால் ஆன்ரூஸ், ‘‘எஸ்.கே.ருத்ர சிறப்பாக திறமையாக பணியாற்றுகிறார். அவரை ஏன் மாற்றவேண்டும்?‘‘ என்று கூறி, ருத்ராவின் கீழ் பணியாற்றிய பெருந்தன்மைக்காரர். தென்னாப்பிரிக்க தொடர்புகள் மூலம் இப்படிப்பட்ட ஆன்ரூஸ்தான் காந்தியை இந்த கல்லூரிக்கு வரவழைத்ததோடு பேசவும் வைத்துள்ளார். இப்படி வந்துதான் முதன்முறையாக காந்தி, இரண்டு நாட்கள் தங்கி செங்கோட்டையையும் குதுப்மினாரையும் சுற்றிப்பார்த்துவிட்டு மாணவர்களிடமும் பேசியுள்ளார்.

கிழக்கு இந்திய கம்பெனியினரால் கிறிஸ்தவ பிரச்சாரத்திற்கு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி, ஆங்கில மொழி புலமைக்கு பெயர் பெற்றது. இங்கு காந்தி பேசியது ஹிந்தியில். பழைய டெல்லி கஷ்மீர் கேட் அருகே, தற்போது டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகமாக செயல்படும் கட்டடத்தில்தான் அப்போது புனித ஸ்டீபன்ஸ் கல்லூரி செயல்பட்டுள்ளது.

காந்தி முதன் முதலில் வந்து தங்கியதையொட்டி, ஏப் 12 நினைவு தினத்தை மாணவர்கள் மத்தியில் விழாவாகக் கொண்டாட, தேசிய காந்தி அருங்காட்சியகம் மற்றும் காந்தி சமாராக் நிதி[Gandhi Smarak Nidhi] ஆகியோர் முயற்சிக்க, தற்போதைய ஸ்டீபன்ஸ் கல்லூரி நிர்வாகம் ஆர்வத்தோடு முன் வரவில்லை.

காந்தியை நினைவுபடுத்துவதை எந்த அரசியல் தடுக்கிறதோ தெரியவில்லை. கடைசி நேரம் வரை புனித ஸ்டீபென்ஸ் கல்லூரி முதல்வரிடமிருந்து சரியான பதில் இல்லை. இதனால் 12 ம் தேதியை தவறவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த தேசிய காந்தி மியூசியத்தின் இயக்குநர், தற்போது இந்த கட்டடத்திற்கு பொறுப்பு வகிக்கும் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியை அணுகி ,இந்த நூற்றாண்டு நினைவு நாளைக் கூற, இந்த விழாவை கொண்டாட டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி சந்திர பூஷண் குமார் ஞாயிற்றுக் கிழமை என்றும் பாராமல் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

டெல்லி தேர்தல் அலுவலகமான இந்த பழைய செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி கட்டடத்தில், காந்தி டெல்லி வருகை தினத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு, பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஸ்டீபன்ஸ் கல்லூரி முதல்வர் வல்சன் தம்பு [Valson Thampu] ,  தானும் கலந்து கொள்ளாமல் தனது மாணவர்களையும் அனுப்பாமல்ம் ஒரே ஒரு பேராசியரை [Prof.Rohit Wanchoo] மட்டும் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்.

ஆங்கிலேயர் ஆண்ட்ரூஸ் பதவி பெற மறுத்து, இந்தியரை உட்காரவைத்தார். ஆனால் இப்போது பல்வேறு பிரச்னைகளுக்கு பின்னர் தம்பு முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். நூறு வருடங்களுக்கு முன்பு மாணவர்களிடையே பேச வந்த காந்தி, அரசியல் பேசவில்லை. அல்லது மதம் தொடர்பானவைகளையும் பேசவில்லை. ‘‘அராஜகம் தேவையில்லை. தீயவைகளை எதிர்கொள்ள, உண்மை, கடவுள் நம்பிக்கையோடு கடுமையான உழைப்பை மேற்கொள்ளுங்கள்‘‘ என்றே காந்தி மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

காந்தியின் இந்த முதல் விஜயத்திற்கு சாட்சியமாக அப்போது எடுக்கப்பட்ட படமும் உண்டு. அப்போது அவர் பேசிய விவரங்கள் எல்லாம் கல்லூரி முதல்வரின் டைரியிலும் குறிப்பாக இருக்க, இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.  அப்போது இந்தக் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள், முதல்வர் ஆகியோரோடு காந்தி புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த பிரமாண்டமான புகைப்படமும் கிடைத்தது. அப்போது நீடித்த கரவொலிகளுக்கிடையே காந்தி பேசியதாக கல்லூரி முதல்வர் குறிப்பிடுகிறார்.

காந்தியின் பேச்சையும், இந்த புகைப்படத்தையும் புனித ஸ்டீபன்ஸ் கல்லூரி, இந்த தினத்தில் பெற்றுக்கொண்டு, கல்லூரியில் வைத்து மாணவர்களை ஆர்வப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியிலும், இந்தியாவில் மட்டுமல்ல இந்த சிறுபான்மையினர் கல்லூரியிலும் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் கீழ் இருக்கும் டெல்லி  தேர்தல் அதிகாரி பூஷண் குமார், இந்த காந்தி புகைப்படத்தை, காந்தி அருங்காட்சியக தலைவர் பேராசிரியர் அபர்னா பாசுவிடமிருந்து பெற்று தனது அலுவலகத்திலும் வைத்துள்ளார்.

- சரோஜ்கண்பத்   

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ