Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தமிழக ஊழல் தடுப்புத் துறைக்கு காமன்சென்ஸ் இல்லை...!‘ (ஜெ. வழக்கு விசாரணை - 23)

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது.

பவானிசிங்: கட்டடங்களைப் புனரமைக்க மும்பையில் இருந்து மிக உயர்ந்த ரக கிரானைட் மற்றும் மார்பிள்ஸ் வாங்கினார்கள். அதன் மதிப்பு ஒரு சதுர மீட்டர் ரூ.18,000 முதல் ரூ.21,000 வரை.

நீதிபதி: சதுர அடிக்கும், சதுர மீட்டருக்கும் என்ன வேறுபாடு?

மணிசங்கர் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): 10 சதுர அடி மார்பிள்ஸ், ஒரு சதுர மீட்டர் ஆகும். ஒரு சதுர அடி மார்பிள்ஸ் ரூ.1.800

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) கிரானைட்ஸ், மார்பிள்ஸ் என்ன விலை என்று புலன்விசாரணை அதிகாரியைக் கேட்டுச் சொல்லுங்கள்?

பவானிசிங்: (தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்தைப் பார்த்து) ஏனு ரேட்? (என்ன விலை?)

சம்பந்தம்: (முணகியவாறு...) 1 சதுர அடி ரூ.300

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) இதெல்லாம் ஏனு என்ரீ அவரை கேள்றீ? (இதெல்லாம் என்ன பதிவு என்று அவரைக் கேளுங்க)

பவானிசிங்: அவருக்குத் தெரியவில்லை.

நீதிபதி: (சம்பந்தத்தைப் பார்த்து) யார் புலன்விசாரணை அதிகாரி?

சம்மந்தம்: நல்லமநாயுடு.

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) கிரானைட், மார்பிள்ஸ் வேல்யூ செய்த பொறியாளர்கள் வருவார்களா?

நீதிபதி: கிரானைட், மார்பிள்ஸ் புலன் விசாரணை செய்தது யார்?

பவானிசிங்: இந்த வழக்கு மொத்தமும் புலன்விசாரணை செய்தது நல்லமநாயுடு.

நீதிபதி: கிரானைட், மார்பிள்ஸ் மிகவும் அதிகப்படுத்தி போட்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் என்ன இருக்கிறது?

பவானிசிங்: இதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை.

நீதிபதி: இதை சம்பந்தத்திடமே கொடுங்கள். படிக்கட்டும்!

சம்பந்தம்: (படித்தார்)

பவானிசிங்: (சம்பந்தம் படிக்கப் படிக்க குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தார்.)

நீதிபதி: (சம்பந்தத்தைப் பார்த்து) மார்பிள்ஸ், கிரானைட்டின் மதிப்பு என்ன?

சம்பந்தம்: நான் மதிப்பீடு செய்யவில்லை. தகுதி வாய்ந்த பொறியாளர்கள்தான் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

பவானிசிங்: அவர்கள் வருவார்களா?

நீதிபதி: ஏன்றீ? அவர்கள் 20 வருடங்களுக்கு முன்பு மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். கிரானைட், மார்பிள்ஸ் விலை மிகவும் அதிகப்படுத்தி காட்டி இருக்கிறார்கள். கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

பவானிசிங்: எல்லா பொறியாளர்களின் மதிப்பீடும் இப்படிதான் இருக்கும். கட்டட மதிப்பீடு சரியாக இல்லை என்றுதான் குன்ஹா 20% குறைத்து இருக்கிறார்.

பவானிசிங் உதவியாளர் சதீஷ் கிரிஜி: தமிழ்நாடு செராமிக் சென்டரில் கேட்டுதான் மார்பிள்ஸ், கிரானைட் வேல்யூ போட்டிருக்கிறார்கள். அவர்கள் வாய்மொழியாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், எழுத்துபூர்வமாகத் தரவில்லை.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) இரண்டு மூன்று பொறியாளர்களை வைத்து மீண்டும் கிரானைட், மார்பிள்ஸ் மதிப்பைக் கணக்கீடு செய்து திங்கள்கிழமை கொடுங்கள்.

மணிசங்கர்: இப்படியேதான் போயஸ்கார்டன், மற்றும் போயஸ்கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்ட கட்டடம் மதிப்பீடு அதிகப்படுத்தி காட்டி இருக்கிறார்கள். கட்டடங்களின் மொத்த மதிப்பு 28 கோடியாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் காட்டி இருக்கிறார்கள்.

தமிழக ஊழல் தடுப்புத் துறைக்கு காமன்சென்ஸ் இல்லை...

பவானிசிங்: போயஸ்கார்டன், போயஸ்கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்ட பங்களாகளில் மிக உயர்ந்த மார்பிள்ஸ் மற்றும் முக்கியமான மார்பிள்ஸ் பதிக்கப்பட்டது.

நீதிபதி: எதை வைத்து சொல்கிறீர்கள்?

பவானிசிங்: மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. கிரானைட் சப்ளை செய்த மாடசாமியும் தன் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார்.

நீதிபதி: போயஸ்கார்டன் எத்தனை சதுர அடி?

செந்தில்: மொத்தம் 21,000 சதுர அடி. புனரமைப்பு செய்தது 8,000 சதுர அடி. ஏற்கெனவே பழையது 5,000 சதுர அடி. புதியதாக புனரமைக்கப்பட்டது 3,000 சதுர அடி. போயஸ் கார்டனில் 2 பில்டிங் உள்ளது.

நீதிபதி: ஜெயலலிதாவிடம் வருமானவரித் துறை கேட்ட 80 கேள்விகளைக் கொடுங்கள்?

மணிசங்கர்: (அதை எடுத்துக் கொடுத்தார்.)

நீதிபதி: ஒரு சொத்துக்கு மட்டும் கிரானைட், மார்பிள்ஸ் விலை ரூ.1.58 கோடி என்று போட்டிருக்கிறார்கள். யார் புலன்விசாரணை அதிகாரி? ஒரு சதுர அடி ரூ.1,800 என்று போடப்பட்டுள்ளது. 1994 ல் அவ்வளவு மதிப்பு வராது. யார் காண்ட்ராக்டர்?

பவானிசிங்: (மௌனம். சற்று நேரத்துக்குப் பிறகு...) வீட்டிலிருந்து தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டிருகிறது.

மணிசங்கர்: (குறுக்கீடு) தங்க, வைர நகைகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கியவை.

குமார் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): தங்க, வைர நகைகள் வழக்கு காலகட்டத்திற்கு முன்பு வாங்கப்பட்டுள்ளது. அதற்கு சொத்து வரி கட்டப்பட்டுள்ளது.

பவானிசிங்: சுதாகரனின் திருமணம் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டது. அந்தத் திருமணம் ஜெயலலிதா பணத்தில்தான் நடைபெற்றது. வெள்ளித் தட்டுகளோடு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

நீதிபதி: திருமணத்திற்கு வெள்ளித் தட்டுகள் யார் கொடுத்தது?

குமார்: சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன்தான் வெள்ளித் தட்டுகள் கொடுத்தார். அதை அவர் வருமானவரித் துறையிலும் காண்பித்து இருக்கிறார். 

பவானிசிங்: இதேபோல பேங்க் வரவு செலவுகள், கட்டடங்களுக்கு பதிக்கப்பட்ட கிரானைட், மார்பிள்ஸ் மும்பையில் இருந்து மிக உயர்ந்த விலையில் வாங்கப்பட்டது.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) கிரானைட், மார்பிள்ஸ் உங்கள் விலைக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போட்ட விலைக்கும் எவ்வளவு வேறுபாடு வருகிறது?

குமார்: ஒரு சதுர அடி 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை போட்டிருகிறார்கள்.

நீதிபதி: 1994 - 95ல் மார்பிள்ஸ், கிரானைட் விலை எனக்கு நன்றாக தெரியும். ஒரு சதுர அடி மார்பிள்ஸ் எவ்வளவு அதிகப்படியான விலையாக இருந்தாலும், ரூ.150தான் இருக்கும்.

குமார்: உதாரணத்திற்கு சொல்கிறேன் யுவர் ஆனர். ஒரு சதுர அடி குளோரின் மார்பிள்ஸ் 8,000 ரூபாய் போட்டிருக்கிறார்கள்.

நீதிபதி: தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு காமன்சென்ஸ் இல்லாமல் மார்பிள்ஸ், கிரானைட் மற்றும் கட்டட கட்டுமான விலையை அதிகப்படுத்தி பதிவு செய்திருக்கிறார்கள்.

பவானிசிங்: ஒரு சதுர அடி மார்பிள்ஸ் ரூ.1,800 என போடப்பட்டுள்ளது.

நீதிபதி: கட்டட மதிப்பீடாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் எவ்வளவு போட்டிருக்கிறார்கள், நீங்கள் எவ்வளவு சொல்கிறீர்கள்?

குமார்: ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்கார்டன், போயஸ்கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்ட பங்காளா என மூன்று கட்டடங்களுக்கு ஆன செலவு 3.62 கோடிதான் ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் 13 கோடி என போட்டிருக்கிறார்கள். அதேபோல ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி 4 பேரில் மொத்த கட்டடக் கட்டுமான செலவு 10 கோடி. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் 28 கோடியாக பதிவு செய்திருக்கிறார்கள். 

பவானிசிங் திடீர் நிறைவு!

(மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வந்த பவானிசிங் ஆவணக் கட்டுகளோடு நின்றார்.)

நீதிபதி: முடித்து விட்டீர்களா?

பவானிசிங்: ஆமாம். முடித்துவிட்டேன். மேலும் எங்கள் தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக கொடுக்கிறேன்.

அவர் கொடுத்த 300 பக்கத்திற்கும் மேற்பட்ட அந்த எழுத்துபூர்வமான ஆவணத்தில், ‘‘குற்றவாளிகள் தரப்பு 66.65 கோடி வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களை சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்தோம். நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் சில தவறுகளைக் காட்டி 11 கோடி தள்ளுபடி செய்து, 55 கோடி வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக உறுதிப்படுத்தி, குற்றவாளிகளுக்குத் தீர்ப்பளித்துள்ளது.

அந்த நீதிமன்றத்தில் கொடுத்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் இங்கும் சமர்பிக்கிறேன். கீழமை நீதிமன்றம் வழங்கிய அதே தீர்ப்பை இந்நீதிமன்றமும் உறுதிசெய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இல்லையேல், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்டவர்கள் மீது நடைபெற்ற பல மாநில உயர்நீதிமன்ற வழக்குகளையும், உச்சநீதிமன்ற வழக்குகளையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருக்கிறது...

பவானிசிங் தன் வாதத்தை நிறைவு செய்ததும், டெல்லியில் இருந்து வந்திருந்த ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தன் நிறைவு தொகுப்புரை வழங்கினார்.

நாகேஸ்வரராவ்: கனம் நீதிபதி அவர்களே! இவ்வளவு நாட்களாக எங்களுடைய வாதங்களை பொறுமையாக கேட்டதை நினைத்து சந்தோஷமடைகிறேன். ஒவ்வொரு வழக்கறிஞர்களும் நீதிபதி ஆக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், நீதிபதிகளின் கஷ்டங்களை தாங்களே அறிவீர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தது என்று குற்றம் சுமத்துகிறார்கள். கீழமை நீதிமன்றமும் அவருக்கு 13(1)இ படி தண்டனையும் வழங்கி உள்ளது.

ஆனால் 13(1)இ சட்டம் என்ன சொல்கிறது என்றால், சட்டத்தால் தடை செய்யப்படாத எந்த ஒரு வருமானமும் அனுமதிக்கப்படுகிறது. அதை வருமானமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜெயலலிதாவிற்கு சட்டப்படி பல ஆதாரங்கள் மூலம் வருமானம் வந்தது. அதன் அடிப்படையில் சொத்துகளை வாங்கினார். ஆனால், வருமானத்தை ஊழல் தடுப்பு போலீஸார் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் பணத்தில்தான் மற்ற 3 பேரும் சொத்துகளை வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஜெயலலிதா அக்கவுண்ட்டில் இருந்து எந்த ஒரு பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை. ஜெயலலிதா வருமானம் குறித்து வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. வருமான வரித்துறை அளித்துள்ள ஆவணங்களையே இந்த வழக்கின் உண்மையான ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்தில் 14 கோடி சந்தா வசூலிக்கப்பட்டதற்கு அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்து இருக்கிறோம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் சலுகைத் திட்டங்களை அறிவித்து சந்தா பிடிப்பது வழக்கம்தான். ஹைதராபாத் திராட்சைத் தோட்ட பங்களாவின் கட்டுமான செலவு 5.72 லட்சம். ஆனால், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை 52 லட்சமாக பதிவு செய்துள்ளது. இரண்டுக்குமான வேறுபாது 46.71 லட்சம். ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் 1968ல் வாங்கப்பட்டது.

ஜெயலலிதா முதல்வர் ஆனதும் முதல் வருடம் அவருடைய 44வது பிறந்த நாள் 24.4.1992 அன்று கொண்டாடப்பட்டது. தலைவர்களின் பிறந்தநாளின்போது கிஃப்ட் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி கிஃப்ட் கொடுத்தவர்களுக்கு ஏதாவது சலுகை கொடுத்திருந்தால்தான் தவறானது. அதனால், கிஃப்ட் முறையாக வழங்கப்பட்டதுதான். அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை.

மார்பிள்ஸ், கிரானைட் மும்பையில் ஒரு சதுர அடி 80 ரூபாய்க்கு வாங்கப்பட்ட கற்களுக்கு ரூ.8000 வரை காண்பித்து இருக்கிறார்கள். இதேபோன்றுதான் ஒவ்வொரு செலவுகளின் மதிப்பையும் அதிகப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள்.

தங்க, வைர நகைகள் ஜெயலலிதாவிடம் 1977 -78லேயே 21.280 கிராமும், சசிகலாவிடம் 1,900 கிராமும், நினைவு பரிசு 3365 ம் இருந்தது. அனைத்தும் வழக்கு காலகட்டத்திற்கு முன்பே வாங்கப்பட்டது. சில்வர், வாகனங்கள், பேங்க் அக்கவுண்டில் இருந்த ஃபிக்ஸட் டெபாசிட் தொகையை வருடம் முடிவதற்குள்ளேயே மொத்தத் தொகையாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

சுதாகரன் திருமண செலவு ரூ.6.50 கோடி, பந்தலுக்கு மட்டுமே ரூ.5.21 கோடி என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். பந்தல் 2 நாளில் பிரிக்கப்பட்டு விட்டது. இவர்கள் இரண்டு மூன்று மாதம் கழித்து கணக்கு போட்டிருக்கிறார்கள். இப்படி செலவுகளை அதிகப்படுத்தியும், வருமானங்களைக் குறைத்தும் கணக்கீடு செய்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல், சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு வழங்கவில்லை.

எங்கள் கட்சிக்காரர்களை அரசியல்ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவணங்களையும் ஆதாரங்களையும் கவனத்தில் கொள்ளாமல் அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையே மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்து, நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். நீங்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவீர்கள் என்று நானும் என்னுடைய சகாக்களும் நம்புகிறோம்.

வழக்கு விசாரணை தொடரும்...

-வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

 

'ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?' (ஜெ. வழக்கு விசாரணை - 22) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

'ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?' (ஜெ. வழக்கு விசாரணை - 21) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 நீதிபதியின் கேள்விகளும் பவானிசிங்கின் மௌனமும்! (ஜெ. வழக்கு விசாரணை - 20) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீதிபதியின் கேள்விகளும் பவானிசிங்கின் மௌனமும்! (ஜெ. வழக்கு விசாரணை - 19) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீதிபதியின் கேள்விகளும் பவானிசிங்கின் மௌனமும்! (ஜெ. வழக்கு விசாரணை - 18) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 17) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 16) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 15) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 14) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

சசிகலாவின் வருமானமும், செலவுகளும்! (ஜெ. வழக்கு விசாரணை - 13) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-12) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-11) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-10) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-9) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


நமது எம்.ஜி.ஆர் தொடங்க கருணாநிதிதான் காரணம்! (ஜெ. வழக்கு விசாரணை- 8) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் ஏன் முதல்வராக முடியவில்லை? (ஜெ. வழக்கு விசாரணை - 7) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம் (ஜெ. வழக்கு விசாரணை - 6) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்? (ஜெ. வழக்கு விசாரணை - 5) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

‘மேல்முறையீடு செய்ய ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?’ (ஜெ. வழக்கு விசாரணை - 4) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை -3) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்! ( ஜெ. வழக்கு விசாரணை -2) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ