Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரிட்டிஷ் காலத்து நடைமுறை எப்போது மறையும்?

பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை விட்டு சென்று அறுபது ஆண்டுகளுக்கு மேலான பின்னும், அவர்கள் உரு வாக்கி வைத்துவிட்டு சென்றுள்ள சில நடைமுறைகளை நாம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அவை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.

அரசு உயரதிகாரிகள்,  தங்களின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களிடம் அதிகாரம் செலுத்துவதும், அடிமை யைப்போல அவர்களை நடத்துவதும்,  அதிகாரிகளை ஊழியர்கள் எஜமானைபோல பார்ப்பதும் இன்னும் தொடர்கிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெள்ளை உடையில் தலையில் டர்பன் அணிந்து கூத்துகளில் கட் டியம் கூறும் கோமாளியைப் போல், கலெக்டரின் குரல் கேட்டவுடன் ஓடி நிற்கும் ஒருவரை பார்த்திருப் பீர்கள். இவரை டபேதார் என்றழைப்பார்கள்.

கலெக்டர், அலுவலகம் வந்து விட்டால், இவரால் சிறுநீர் கழிக்கக் கூட ஒதுங்க முடியாது. ஒவ்வொரு ஆட்சியருக்கும் மூன்று ஷிப்டில் பணிசெய்ய இம்மாதிரி ஊழியர்கள் இருக்கிறார்கள். அலுவலகத்தில் மட்டுமல்ல, கேம்ப் ஆபீஸ் எனப்படும் அவரது வீட்டிலும் இதே வேலையை தொடர வேண்டும்.

இதே போன்று தாசில்தார் துவங்கி டி.ஆர்.ஓ எனப்படும் மாவட்ட வருவாய் அலுவலர் வரை குறிப்பிட்ட உயரதிகாரிகளுக்கு டபேதார் உண்டு. மாநகராட்சி கமிஷனர், மேயருக்கும் உண்டு. மாநில அமைச்சர் களுக்கும் உண்டு. தலைமை செயலக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் உண்டு. சில இடங்களில் இவர்களுக்கு டவாலி என்று பெயர்.

நீதிமன்றங்களில் இதே பணியை செய்பவர்களை டவாலி என்பார்கள். பெயர்கள்தான் வேறுபடும் எல்லா இடங்களிலும் இவர்களுக்கு ஒரே பணிதான். அது உயரதிகாரிகளுக்கு ஒளிவட்டத்தை ஏற்படுத்துவது. நீதிபதி இருக்கையில் அமர்ந்துவிட்டால், சத்தமே இல்லா விட்டாலும் ‘உஷ்..சத்தம் போடா தீங்க...’’என்று இவர்கள் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை உடலை வளைத்து, நீதிமன்றத்தில் இருப்பவர்களை பார்த்து பயமுறுத்தியபடி இருப்பார், ஒரு ரிகார்ட் வாய்ஸ் போல.

மாவட்ட காவல் அலுவலகங்களில் கான்ஸ்டபிள்களே இந்த பணியை செய்வார்கள். எஸ்.பி அல்லது கமிஷனர் அலுவலக வாசலில் பாராவுக்கு இரண்டு பேர், அவர் அறை கதவுக்கு முன்னாள் இரண்டு கான்ஸ்டபிள்கள் காவல் காப்பார்கள். உள் அறையிலிருந்து பெல் அடித்தால் விழுந்தடித்து ஓடுவார்கள். அப்போது காவலர்களுக்கே உரிய மிடுக்கின்றி அவர்கள் பரிதாபமாக தெரிவார்கள்.

உள்ளே இருக்கும் அதிகாரி தன் மேஜையின் மேல் இருக்கும் பேனாவை எடுத்துத் தரக் கேட்பார். அதை பணிவாக எடுத்து கொடுத்துவிட்டு ஒரு சல்யூட் அடித்து விட்டு வெளியே வருவார் காவலர்.

இதேபோல் ஒரு நாளைக்கு நூற்றுக்கு மேற்பட்ட சல்யூட்களை அடிப்பார்கள். இதாவது பரவாயில்லை, வீட்டில் சில கான்ஸ்டபிள்களை வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். அங்கு இவர்களுக்கு காக்கி பேண்டும் வெள்ளை பனியனும்தான் சீருடை. இதுதான் வெள்ளையன் உருவாக்கி சென்ற அடிமைத்தனத்தின் உச்சம். மிடுக்கான அந்த காவலர், அதிகாரி வீட்டில் சமையல் செய்வதிலிருந்து வீட்டை பெருக்குவது, அதிகாரியின் குடும்பத்தை வெளியில் கூட்டி செல்வது என்று அத்தனை வேலைகளையும் செய்வார்.

இங்கு இவர்களுக்கு பெயர் ஆர்டர்லி. மிகவும் அடிமைத்தனமான வேலை. ஆனால், இந்த வேலையை சில போலீஸ்காரர்கள் விரும்பிச் செய்வார்கள். காரணம் அதிகாரி குடும்பத்தினரின் அபிமானத்தைப் பெற்று தங்களின் சொந்த விஷயங்களை சாதித்துக்கொள்வதற்காக. யோசித்துப் பாருங்கள் ஆத்திரம் வரவில்லை?

இன்னும் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்கிறோமா என்று நினைக்கத் தோன்றும். ஒவ்வொருவர் கல்வித்தகுதி அடிப்படையில் வேலை கொடுக்கப்பட்டாலும், அவரவர் சுயமரியாதையை சீண்டி பார்ப் பதுபோல் இதுபோன்ற பணிகளை ஏன் இன்னும் அரசு நடைமுறையில் வைத்திருக்கிறது என்று பல தரப்பிலும் கேட்டு வருகிறார்கள். இதில் தலையாரி என்று சொல்லப்படும் கிராம உதவியாளர்கள் தாலுகா அலுவலகத்திலும், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் சுழற்சி முறையில் இரவில் தங்கியிருக்க வேண்டும் என்ற நடைமுறைதான்.

அந்த காலத்தில் தாலுகா அலுவலகம் பாதுகாப்பற்ற இடங்களில் அமைந்திருக்கும். பல ஊர்களை பற்றிய ஆவணங்கள் அங்கே இருந்ததால், கிராம உதவியாளர்களை தங்க வைத்திருக்கிறார்கள். இப்பொழுது பாதுகாக்க வேண்டுமென்றால் வாட்ச்மேன் அல்லது பிரைவேட் செக்யூரிட்டி போடலாம். ஆனால், இப்போ தும் அந்த பழைய நடைமுறை தொடர்வதால், பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அமைந்திருக்கும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவுப் பணியில் இருந்த கிராம உதவியாளர் தங்கபாண்டி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அன்று இரவு வரை தன் குடும்பத்தினருடன் செல்போனில் பேசியிருக்கிறார். இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், கட்டிலில் படுத்திருந்தவர் உருண்டு கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் கூறினார்கள்.

துணைக்கு ஆளில்லாமல், ஒரு பிரிட்டிஷ் காலத்து நடைமுறையால் அவர் உயிர் பிரிந்துள்ளது. வறுமை யிலுள்ள அவர் குடும்பத்தினர், முதலில் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று சண்டை போட்டாலும், சூழ் நிலை கருதி சமாதானமாகி அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்கள் பிரச்சனை செய்தால் அரசு வழங்கும் இழப்பீடு கிடைக்காது என்று மிரட்டியிருக்கிறார்கள். வேலுார் ஆதிதிராவிடர் அலுவலகத்திலும் ஊழியர் ஒருவர் இரவுப்பணியின்போது இப்படி நடுஇரவில் மாரடைப்பு வந்து, காப்பாற்ற ஆளின்றி போராடி இறந்ததாக சொல்வார்கள். இப்படி இந்த வேலையில் சிக்கிக் கொண்டு பலர் மன ரீதியான பிரச்னைகளுக்குள்ளாகி தவிப்பதோடு, மதுவுக்கு அடிமையாகி உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் நடந்த கிராம உதவியாளர்கள் சங்க மாநாட்டில் ‘’பல  மாவட்டங் களில் கிராம உதவியாளர்கள் இரவுக்காவல் பணிக்கு  அழைக்கப்படுகின்றனர். இதனால் பகலில் கிராம நிர்வாக அலுவலகத்திலும், இரவில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடுமையாக பணியாற்ற வேண்டி யுள்ளது. இந்த பிரிட்டிஷ் காலத்து நடைமுறையை அனைத்து மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டும்’’ என்று அச்சங்கத்தின் மாநில தலைவர் காண்டீபன் அழுத்தமாக பேசியிருந்தார். இந்த மோசமான சிஸ்டத் துக்கு எதிராக அனைவரும் கோரிக்கை வைத்துவரும் நிலையில்தான், தங்கபாண்டியனின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தி வருகிறது.

எத்தனை பேர் சொன்னால் என்ன, யார் செத்தால் என்ன? தமிழகத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் இரவில் தலையாரிகள் தங்கியிருக்க வேண்டுமென்ற நடைமுறை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற,10 ஆண்டுகளுக்கு மேல்  கிராம உதவியாளராக பணியாற்றியவர்களை வி.ஏ.ஓ.வாக பதவி உயர்வு கொடுக்க வேண்டுமென்று தமிழக அரசு ஒரு ஜி.ஓ.போட்டுள்ளது. அதையும் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

மொத்த வி.ஏ.ஓ. பணியிடங்களில்  20 சதவீதத்தை பத்து வருடங்களுக்கு மேல் சர்வீஸ் உள்ள பத்தாம் வகுப்பு படித்த தலையாரிகளுக்கு வழங்க ஜெயலலலிதா முதல்வராக இருந்தபோது  உத்தரவு போட்டாலும், இப்போதைய முதல்வர் அதை மறந்து விட்டார். அப்படி பணி நிரப்பப்பட்டால், இந்த கிராம உதவியாளர்கள் கொஞ்ச நாட்களுக்காவது வீட்டில் துாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

என்னென்ன காரணங்களுக்காகவோ பொது நல வழக்கு போடும் நம்மவர்கள், இதுபோல அரசு அதிகாரிகளிடம் அடிமைகளாய் சிக்கி தவிக்கும் கடைநிலை அரசு ஊழியர்களை மீட்க வழக்கு போடுவார்களா?

செ.சல்மான்
படங்கள் :
பா.காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close