Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடிகளை அள்ளுகிறது அரசு... தள்ளாடுகிறது டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்க்கை!

டாஸ்மாக் கடையை கடந்து செல்லும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் உதயமாகும். பெண்கள், குழந்தைகள் என்றால் அந்த இடத்தை ஒருவிதமான சங்கடத்துடனேயே கடப்பார்கள். குடிமகன்களுக்கு அந்த இடம் சொர்க்கப்புரி. குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு அந்த இடம் ஏதோ ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதி என்று கருதுவார்கள்.

தினமும் குடிமகன்களோடு வாழ்க்கை நடத்தும் டாஸ்மாக் ஊழியர்களின் நிலைமையை குறித்து என்றாவது நாம் நினைத்துப் பார்த்திருப்போமா..... ?- இது டாஸ்மாக் கடை ஊழியர்களின் குமுறல்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாஸ்டாக் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில தலைவர் பாலுச்சாமி கூறுகையில், "கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டாஸ்மாக்கில் பணியாற்ற வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் 6,837 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 29 ஆயிரத்து 647 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த பதினோரு ஆண்டுகளாக பணியாற்றினாலும் இதுவரை யாரையும் பணிநிரந்தரம் செய்யவில்லை. சூப்பர்வைசருக்கு மாதச்சம்பளம் 6,500 ரூபாயும், சேல்ஸ்மேனுக்கு 4,800 ரூபாயும், உதவி சேல்ஸ்மேனுக்கு 3,400 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணி செய்தாலே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அதை இதுவரை அரசு அமல்படுத்தவில்லை. முறைகேடு செய்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் ஆயிரம் பேர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டு இருக்கிறார்கள். முறைகேடு செய்ய தூண்டுவதே இந்த அரசும், அதிகாரிகளும் தான்.

மதுபானங்கள் வரும் அட்டைப்பெட்டிக்கு சேதாரமும், பாட்டில்கள் உடைவதற்கான தொகையையும் சம்பந்தப்பட்ட கடைகளில் வேலைப் பார்க்கும் ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டியதுள்ளது. இதற்காகத் தான் ஊழியர்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கூடுதலாக பணம் வாங்குகிறார்கள். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்து பார் நடத்தும் ஆளுங்கட்சியினரை எதிர்த்தால் அவ்வளவு தான். அந்தக்கடையில் அடுத்த வேலைபார்க்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இடமாற்றுவார்கள். அல்லது சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள்.

ஊழியர்கள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளுக்கு சம்பளத்திலிருந்துதான் மாமூல் கொடுக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொரு கடைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த இலக்கை அடையாத ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானத்தை சம்பாதித்துக் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசு அக்கறை செலுத்துவதில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க முதற்கட்டமாக பட்டினிப் போராட்டத்தை நடத்தியுள்ளோம். அடுத்து 7 சங்கங்கள் இணைந்து கடையடைப்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

மாநில பொதுச் செயலாளர் பழனிபாரதி கூறுகையில், "பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பதினோரு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசும், அதிகாரிகளும் எதையும் கண்டுகொள்வதில்லை. ஒரு நாளைக்கு 65 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் வருமானம் அரசுக்கு கிடைக்கிறது.  இதனால் எங்களை பணம் காய்க்கும் மரங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். சேல்ஸ், இலக்கு என்று ஊழியர்களை அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளில் மின்விசிறி போன்ற அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படுவதில்லை. சில கடைகளில் மின்கட்டணத்தைக் கூட ஊழியர்கள் செலுத்த வேண்டியதுள்ளது.

இது போன்ற செலவுகளை சரிகட்டவே எம்.ஆர்.பி.யிலிருந்து இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் கூடுதலாக வாங்க வேண்டியதுள்ளது. ரெய்டுக்கு வரும் பறக்கும் படை அதிகாரிகள் கூடுதலாக பணமிருந்தால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். சில நேரங்களில் தவறே செய்யாமல் ஊழியர்கள் பாதிக்கப்படுவதுண்டு. ஆளுங்கட்சியினர் நடத்தும் பார்களை பகைத்துக் கொண்டால் ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் வார விடுமுறையில்லாமல் பணியாற்ற வேண்டியதுள்ளது. அதிகாரிகள் நிர்ணயிக்கும் இலக்கை பூர்த்தி செய்யாவிட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. இலக்கை அடைய மக்களை குடிக்க வற்புறுத்த முடியுமா" என்று ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

தென்சென்னை மாவட்ட தலைவர் கோதண்டம் கூறுகையில், "குறிப்பிட்ட சில பிராண்ட் சரக்குகளை (மதுபானங்களை) விற்க சில அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால், அதை யாரும் விரும்பி வாங்குவதில்லை. டார்கெட் என்று ஊழியர்களை வதைக்கிறார்கள். இலக்கை அடையவில்லை என்றால் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். குறைந்த சம்பளத்துக்கு நிறைய சிரமங்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.

இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகையில், "ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எங்களது மேலதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் தெரிவித்து விட்டோம். இதற்கு அரசு தான் முடிவெடுக்க முடியும். ஒவ்வொரு மாதமும் எங்களது பறக்கும் படையினர் சோதனை நடத்தி முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது தவறல்ல. வழக்கமான நடைமுறை தான். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், மதுபான இருப்பில் குளறுபடி போன்ற தவறுகளுக்கு அதிகளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றனர்.

டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்க்கையும் தள்ளாடுகிறது!

-எஸ்.மகேஷ்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ