Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப்படி, எப்படி? கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி? (ஜெ. வழக்கு விசாரணை - 24)

ர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் தரப்பு வாதங்களும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வாதமும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் 3ம் தரப்பு வாதியான சுப்பிரமணியன் சுவாமி, எழுத்துபூர்வ வாதம் கொடுப்பதற்காக மார்ச் 9ம் தேதி வருவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. அவருடைய வழக்கறிஞர் பவன சந்தர ஷெட்டி வந்திருந்தார்.

பவனசந்தர ஷெட்டி: எங்களுடைய எழுத்துபூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்வதாகச் சொன்னோம். ஆனால், ஆவணங்களை இணைப்பதற்கும், டைப் செய்து தயாரித்துக் கொடுப்பதற்கும் ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும்.

நீதிபதி குமாரசாமி: நீங்கள் டைம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய எழுத்துபூர்வ வாதங்களைக் கொடுக்கவும், அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்கவும்தான் உத்தரவிட்டேன்.

பவன் சந்தர ஷெட்டி: நாங்களும் எழுத்துபூர்வ ஆவணங்களைக் கொடுக்கத்தான் கேட்கிறேன்.

நீதிபதி: நீங்கள் அரசு வழக்கறிஞரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

பவானி சிங் (அரசுத் தரப்பு வழக்கறிஞர்): என்னுடைய வாதத்தையும், எழுத்துபூர்வ ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டேன். இனி, இவர்களின் உதவி எனக்கு அவசியம் இல்லை.

பவன் சந்தர ஷெட்டி: எங்களுக்கு 2 நாட்களாவது அவகாசம் கொடுக்க வேண்டும்.

நீதிபதி: சரி... புதன்கிழமை 11ம் தேதி கொடுங்கள்.

பவன் சந்தர ஷெட்டி: (பவானிசிங்கைப் பார்த்து) நீங்கள் சமர்பித்த எழுத்துபூர்வ ஆவணங்களைக் கொடுங்கள்.

பவானி சிங்: அதை உங்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய கருத்துகளை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள்.

கம்பெனிகள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்!

நீதிபதி: எந்த அடிப்படையில் ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது இந்த வழக்கு தொடுத்தீர்கள்? குற்றப்பத்திரிகையில் ஏன் அனைத்து  குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்யவில்லை? குற்றப்பத்திரிகை யார் தாக்கல் செய்தது? அதை மேற்பார்வையிட்ட அதிகாரி யார்? இதுநாள் வரை அரசுத் தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் ஏன் ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை?

பவானி சிங்: இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அப்போது அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மேற்பார்வை செய்து ஒப்புதல் அளித்தார். குற்றவாளிகள் மீதான குற்றசாட்டுகளுக்கு தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போதிய ஆவணங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.
 
நீதிபதி: விசாரணை அதிகாரி நல்லமநாயுடுவை அழைத்து வாருங்கள். கட்டடங்களை மதிப்பீடு செய்த பொதுப்பணித் துறை பொறியாளர்களை வரச்சொல்லி இருந்தேனே?

பவானி சிங்: நல்லமநாயுடுக்கு வயதாகிவிட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராவதில் பல சிக்கல்கள் இருக்கிறது.

(இதையடுத்து பவானிசிங் 6 கம்பெனிகளின் வழக்குகளை இந்த மூலவழக்கில் இருந்து தள்ளுபடி செய்ய வேண்டும் என 6 பக்கங்களுக்கு எழுத்துபூர்வ ஆவணமாக சமர்பித்தார்)

பவானி சிங்: இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், சையனோரா, இந்டோ தோஹா, லெக்ஸ் பிராபர்டீஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என 6 கம்பெனிகள் சார்பாக தாக்கல் செய்துள்ள மனுவை இந்த வழக்கில் இருந்து தள்ளுபடி செய்ய வேண்டும்.

நீதிபதி: (ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமாரைப் பார்த்து) இந்த வழக்கில் கம்பெனிகளை இணைத்தது தவறு, கம்பெனிகளின் சொத்துகளை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நீங்கள் ஏற்கெனவே ஏதாவது மனு தாக்கல் செய்திருக்கிறீர்களா?

குமார்: (எழுந்து நின்று மௌனமாக இருக்கிறார்)

பவானி சிங்: (மௌளனம்)

நீதிமன்ற அதிகாரி பிச்சமுத்து: ஏற்கெனவே சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் கம்பெனிகளை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார்கள். அந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் இதோ இங்கிருக்கிறது. (ஆவணங்களை நீதிபதியிடம் சமர்பித்தார்.)

குமார்: அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக அப்போதைய அதிகாரிகளைக் வலுக்கட்டாயப்படுத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

பவானி சிங்: அரசு ஊழியர்கள் தவறு செய்தால், குற்றவியல் பிரிவு 21 ஏன் படிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கம்பெனிகள் அனைத்தும் ஜெயலலிதா முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம்தான் தொடங்கப்பட்டது.

நீதிபதி: ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எதை வைத்து சொல்லுகிறீர்கள்.

பவானி சிங்: ஜெயலலிதாவிடம் இருந்து நேரடியாகப் போகவில்லை. ஜெயலலிதா சசிகலாவுக்கு பவர் கொடுத்தார். சசிகலாவிடம் இருந்து பணப்பரிமாற்றம் நடைபெற்றது.

நீதிபதி: சசிகலாவிடம் இருந்து எவ்வளவு தொகை போனது?

பவானி சிங்: (மௌனம்.)

இவ்வழக்கின் சாட்சிகளை சாட்சியங்களாகவே கருதக் கூடாது!

ஜெயலலிதா வழக்கறிஞர் டீம் லீடர் செந்தில் எழுந்து, ஜெயலலிதா தரப்பின் அனைத்து எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தார். அதில் 1. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நால்வரின் தனித்தனி சொத்துப் பட்டியல் மற்றும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலுக்குமான ஒப்பீடு பட்டியல், 2. நால்வரின் வரவு, செலவு பட்டியல், 3. கட்டடங்களின் செலவு தொகை பட்டியல் என மூன்று அட்டவணைகளாக 177 பக்கங்களுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) சுருக்கமாக விளக்குங்கள்.

குமார்: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரி லத்திகாசரண் கோர்ட் உத்தரவுபடி விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஐ.ஜி&யான வி.சி.பெருமாள் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். அரசு எனக்கு உத்தரவிட்டதை அடுத்து எஃப்.ஐ.ஆர் போட்டதாகக் கூறினார். கோர்ட் உத்தரவுபடி ஒருவர் விசாரித்துக் கொண்டிருக்கும்போது எப்படி அரசு இன்னொருவரை நியமித்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய உத்தரவிட முடியும். லத்திகாசரண் 300 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தார். அந்த வாக்குமூலத்தையே இந்த வழக்கில் இணைத்திருப்பதால் அவர்களை இந்த வழக்கின் சாட்சியங்களாக கருதுவதே தவறானது. நீதிமன்றத்தையும், குற்றம் சாட்டப்பட்ட எங்களையும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்.

ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள கட்டடங்களை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை செய்தனர். வெளிமாநிலத்தில் ஒரு இடத்தை சோதனை செய்கிறபோது அங்குள்ள உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தகவல் கொடுக்கவில்லை. இப்படி தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர்.

ஊழல் தடுப்பு சட்டம் 13(1)இ படி ஜெயலலிதாவுக்கு சட்டரீதியாக கிடைத்த வருமானத்தை இதில் சேர்க்க முடியாது. ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கூறுகிறார்கள். அதற்கான ஆவணங்கள் எதையும் சமர்பிக்கவில்லை. வாய்மொழியாக அவர்கள் கூறுவதை ஏற்கக் கூடாது. நான்கு பேரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள் என்பதற்காக கூட்டுச்சதியில் ஈடுப்பட்டார்கள் என்பதும் தவறானது.

கட்டடங்களுக்குப் பயன்படுத்திய மார்பிள்ஸ், கிரானைட்ஸ் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு ஆன செலவையும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் மிகைப்படுத்தி காட்டி இருக்கிறார்கள். இதை கீழமை நீதிமன்றமும் ஒப்புக்கொண்டு 20% குறைத்துள்ளது. இது ஒரு புதிய வழக்காக இருக்கிறது. இதில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ள ஒட்டுமொத்த தொகையையும் நீக்க வேண்டும்.

சுதாகரனின் திருமணம் ஜெயலலிதா செய்யவில்லை. 29 லட்சம் மட்டுமே செலவு செய்தார். மற்ற செலவுகள் பெண் வீட்டாரும் அ.தி.மு.க நிர்வாகிகளும்தான் செய்தார்கள். ஆனால் ஊழல் தடுப்பு போலீஸார் அந்த செலவு முழுவதையும் ஜெயலலிதா கணக்கில் சேர்த்துள்ளனர். இதை நாங்கள் கீழ் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடம் எடுத்துக்கூறியும் ஏற்கவில்லை. நீங்களாவது பரிசீலிக்க வேண்டும். அதேபோல வியாபாரத்தின் மூலமும், கட்டட வாடகைகள் மூலமும், விவசாய நிலத்தின் மூலமும் வந்த வருமானத்தையும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் பதிவு செய்யவில்லை.

கூட்டு சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது

மணிசங்கர் (சசிகலா வழக்கறிஞர்): ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கி இருந்தாலும் அவரின் சொந்த வருமானத்தின் அடிப்படையில் தொழில் செய்து அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு பல நிறுவங்களைத் தொடங்கி சொத்துகளை வாங்கினார். இதில் ஜெயலலிதா எந்த விதத்திலும் முதலீடு செய்யவில்லை. அவரிடம் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை.

நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கி இருந்து தொழில் செய்ததாகச் சொல்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் கூட்டுச்சதியில் ஈடுபடவில்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

மணிசங்கர்: ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு முன்பு இருந்தே சசிகலா அவரின் வீட்டில் தங்கி இருந்தார். ஒரு வீட்டில் 2 பேர் தங்கி இருக்கக் கூடாது என்று எந்த சட்டத்தில் சொல்லப்படுகிறது? ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள் என்பதற்காக கூட்டுச்சதியில் ஈடுபட்டனர் என்று சொல்வதும் தவறானது.

பவானிசிங்: அவர்கள் கூட்டுச்சதியில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற 3 பேருக்கும் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. அதை நாளைக்குத் தாக்கல் செய்கிறேன்.

நீதிபதி: அரசு ஊழியர்கள் சொத்துக்களை வாங்குவதற்கு முன் அவர்களின் மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதேபோல பொது ஊழியராக இருக்கும் முதலமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் சொத்துகளை வாங்குவதற்கு முன்பு, முன் அனுமதி பெற வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?

பவானிசிங்: அப்படி வழிமுறைகள் எதுவும் இல்லை.

நீதிபதி: அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் சொத்துகள் வாங்கியது தவறு என்று சொல்ல முடியும்? இது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கா? இல்லை, முறைகேடு வழக்கா?

பவானிசிங்: இது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்த வழக்கு.
 
தீர்ப்பு எப்படி வந்தாலும் கம்பெனிகள் சொத்துகள் முடக்கப்படும்!

நீதிபதி: இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், விடுவிக்கப்பட்டாலும் இந்த வழக்கில் தொடர்புடைய கம்பெனிகளின் சொத்துகளை முடக்க இந்த நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது.

குலசேரன் (கம்பெனிகள் தரப்பு வழக்கறிஞர்): நாங்கள் அப்பாவிகள். இந்த கம்பெனிகள் அனைத்தும் எங்களுடைய சொந்த வருமானத்தால் தொடங்கப்பட்டது. எங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை.

நீதிபதி: இந்த வழக்கு தொடுக்கப்பட்டதில் இருந்து உங்கள் சொத்துகள் அனைத்தும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அப்போது உங்கள் சொத்துகளை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்?

குலசேரன்: நாங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், குற்றவாளியாகக் கருதப்படவில்லை.

நீதிபதி: 18 வருடங்களாக உங்களது சொத்துகள் ஜெயலலிதாவின் சொத்துகளாக காண்பிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இதுநாள் வரை இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரங்களையும் கொடுக்கவில்லை. அதனால் உங்கள் வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் சொத்துகளை முடக்க இந்த நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. (சு.சாமியின் வழக்கறிஞர் பவன சந்தர ஷெட்டியிடம்) இவ்வழக்கின் முதல் புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி எங்கே?

பவன சந்தர ஷெட்டி: நாளை புதன் கிழமை சுப்ரமணியன் சாமி நேரில் ஆஜராகி தனது எழுத்துபூர்வ வாதத்தைத் தாக்கல் செய்வார்.

நீதிபதி: நாளையோடு கடைசி நாள். நீங்கள் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்யாவிட்டாலும் நாளை இவ்வழக்கு முடித்து வைக்கப்படும்.

நீங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்தானே...

சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கின் 3ம் தரப்பு வாதியாக சேர்க்கப்பட்டு அவருடைய எழுத்துபூர்வ வாதத்தை சமர்பிக்க நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அதை அடுத்து 11ம் தேதி தன் வழக்கறிஞரோடு வந்திருந்த சுப்ரமணியன்சாமி 14 பக்க எழுத்துபூர்வ வாதத்தை நீதிபதி குமாரசாமியிடம் சமர்பித்தார்.

நீதிபதி: நீங்கள் உலகம் முழுக்கச் செல்லுகிறீர்கள். இதுபோன்ற ஊழல் தடுப்பு சட்டங்கள் இருக்கிறதா?

சு.சாமி: பெரும்பாலான நாடுகளில் ஊழல் தடுப்பு சட்டம் இருக்கிறது.

நீதிபதி: இங்கிலாந்தில் இருக்கிறதா?

சு.சாமி: லண்டனில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவில் இருக்கிறது.

நீதிபதி: எந்த சட்ட விதியின் கீழ் வருகிறது?

சு.சாமி: நான் வழக்கறிஞர் அல்ல.

நீதிபதி: நீங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்தானே?

சு.சாமி: (சிரிப்பு)

நீதிபதி: அரசு ஊழியர்கள் சொத்து வாங்க வேண்டும் என்றால், அவர்களின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சொத்துகள் வாங்க வேண்டும் என்ற விதிகள் உள்ளது. ஆனால், அரசு பொது ஊழியர்களாக பணியாற்றும் முதலமைச்சர்கள், மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ&கள் சொத்துகள் வாங்கும்போது யாரிடம் அனுமதி பெற வேண்டும். என்று ஏதாவது சட்ட விதிகள் சொல்லப்பட்டிருக்கிறதா? (என்று கூறி ஊழல் தடுப்பு சட்ட புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். சுப்பிரமணியன் சுவாமி படித்தார்.)

சு.சாமி: அரசு ஊழியர்களைப்போல் மாநில மந்திரிகள் முதலமைச்சர்களிடமும், மத்திய அமைச்சர்கள் பிரதமரிடமும், பிரதமர் ஜனாதிபதியிடமும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதேபோல தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சொத்து விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம்.

நீதிபதி: ஆனால் முதலமைச்சர்கள், மந்திரிகள் சொத்துகளை வாங்க முன் அனுமதி பெறுவது குறித்து சட்டத்தில் எதுவும் சொல்லவில்லையே?

சு.சாமி: அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது.

நீதிபதி: அதைக் காட்டுங்கள்.

சு.சாமி: 24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்தால் காட்டி வாதிடுகிறேன். 

நீதிபதி: உங்கள் எழுத்துபூர்வ வாதத்தைக் கொடுங்கள்.

சு.சாமி: இந்த எழுத்துபூர்வ வாதங்களை ரெடி செய்வதற்கு 1.60 லட்சம் செலவு செய்துள்ளேன். குற்றவாளிகள் 91-96 வரை வருமானவரி கட்டாமல் 98ல் வருமானவரி கட்டியதே குற்றத்தை ஒப்புக்கொள்ளுவதாகத்தான் அர்த்தம்.

நீதிபதி: அரசியல் ஒழுங்கு முறை சட்டம் இந்தியாவில் இருக்கிறதா?

சு.சாமி: பிசினஸ் கான்டெக்ட் சட்டத்தில் இருக்கிறது. (என்று கூறிவிட்டு விடைபெற்று சென்றார்.)

நீதிபதி: (குமாரைப் பார்த்து) இந்த எழுத்துபூர்வ வாதத்தின் மீது பதிலளிக்கிறீர்களா?

குமார்: 1/2 மணி நேரம் கால அவகாசம் வேண்டும்.

எப்படி, எப்படி? கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி?

சுப்பிரமணியின் சுவாமி தாக்கல் செய்த எழுத்துபூர்வ வாதம் இதுதான்....

ஜெயலலிதா முதல்வர் பதவியை துஷ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்ததால் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 1979 ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கடந்த 1985 - 86ம் ஆண்டு வருமானவரித் துறையில் தாக்கல் செய்த அறிக்கையில், தனக்கு எந்த வருமானமும் இல்லை என்று கூறி இருக்கிறார். 1984 -89 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 1988ம் ஆண்டு 9.2 லட்சம் செலவில் 4 கார்களும், 1.40 லட்சத்தில் ஒரு ஜீப்பும் வாங்கியுள்ளார். எந்த வருமானமும் இல்லை என்று 1985ல் தெரிவித்தவருக்கு, எப்படி எம்.பி-யாக இருந்த காலத்தில் மட்டும் வாகனம் வாங்க வருமானம் வந்தது?

1990ம் ஆண்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகிய 3 நிறுவனங்களைத் தொடங்கினார்கள். அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் எந்த பணப்பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஆனால், ஜெயலலிதா முதல்வரானதும் இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கூடுதலாக 29 நிறுவங்னகள் தொடங்கப்பட்டு அதில் சுதாகரன், இளவரசி பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

அந்த 29 நிறுவனங்களில் எந்தச் செயல்பாடும் இல்லாத நிலையில், அந்த நிறுவன வங்கிக் கணக்கில் மட்டும் கோடிக்கணக்கான அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றது. ஜெயலலிதா 1991ல் முதல்வராவதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்ட பங்களா புதுப்பிக்க தனி நபரிடம் 4 லட்சம் கடன் வாங்கிய ஜெயலலிதாவுக்கு, 1991-96 வரை அவர் முதல்வராக இருக்கும்போது கோடிக்கணக்கான பணம் எப்படி வந்தது?

1987-93ம் ஆண்டு வரை வருமானவரித் துறையில் குற்றவாளிகள் வரிகள் கட்டவில்லை. முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைப் பயன்படுத்தி மற்ற குற்றவாளிகள் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். குற்றவாளிகள் கூட்டுச்சதி செய்து வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்த்துள்ளதை கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தி உறுதி செய்துள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்!

இதையடுத்து சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்துக்கு பதில் எழுத்துபூர்வ வாதத்தை சமர்பிக்க வேண்டும் என ஜெ தரப்பு வழக்கறிஞர் குமாரும், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் நீதிபதி குமாரசாமியிடம் கேட்டார்கள். மதியம் 2.30 மணிக்கு சமர்ப்பியுங்கள் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால் அ.தி.மு.கவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பெருமளவு வந்திருந்தார்கள். இதனால், நீதிமன்றம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. சரியாக 2.30 மணிக்கு நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்தார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்துக்கு பதில் எழுத்துபூர்வ வாதத்தை 6 பக்கங்கள் தயாரித்து கொடுத்தார். அதில், சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதம் ஆதாரமற்ற வாதம் என்பதால் இந்த நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லியிருந்தார்.

 பவானிசிங் தன் பங்குக்கு 4 பக்கங்களில் உச்சநீதிமன்றம், பல மாநில உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எழுத்துபூர்வ வாதத்தைக் கொடுத்தார்.

அதையடுத்து நீதிபதி குமாரசாமி, ‘‘இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்துவிட்டதால் தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்’’ என்றார்.
 
தீர்ப்பை எதிர்நோக்கி ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

தொடர் நிறைவடைந்தது

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

 

'ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?' (ஜெ. வழக்கு விசாரணை - 23) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

'ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?' (ஜெ. வழக்கு விசாரணை - 22) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

'ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?' (ஜெ. வழக்கு விசாரணை - 21) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 நீதிபதியின் கேள்விகளும் பவானிசிங்கின் மௌனமும்! (ஜெ. வழக்கு விசாரணை - 20) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீதிபதியின் கேள்விகளும் பவானிசிங்கின் மௌனமும்! (ஜெ. வழக்கு விசாரணை - 19) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

நீதிபதியின் கேள்விகளும் பவானிசிங்கின் மௌனமும்! (ஜெ. வழக்கு விசாரணை - 18) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 17) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 16) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 15) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 14) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

சசிகலாவின் வருமானமும், செலவுகளும்! (ஜெ. வழக்கு விசாரணை - 13) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-12) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-11) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-10) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-9) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


நமது எம்.ஜி.ஆர் தொடங்க கருணாநிதிதான் காரணம்! (ஜெ. வழக்கு விசாரணை- 8) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் ஏன் முதல்வராக முடியவில்லை? (ஜெ. வழக்கு விசாரணை - 7) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம் (ஜெ. வழக்கு விசாரணை - 6) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்? (ஜெ. வழக்கு விசாரணை - 5) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

‘மேல்முறையீடு செய்ய ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?’ (ஜெ. வழக்கு விசாரணை - 4) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை -3) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்! ( ஜெ. வழக்கு விசாரணை -2) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1) ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ