Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிர் பலியை தடுக்க களத்தில் இறங்கியது ரயில்வே!

க்கள் தொகை பெருக்கத்தால் சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன.
 

சென்னை நகரத்தை விட்டு 100 கி.மீட்டர் தொலைவில் குடியிருந்தாலும், கல்வி, வேலை உள்ளிட்ட தேவைகளுக்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு தினமும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் வரப்பிரசாதமாக மின்சார ரயில்கள் உள்ளன. இதில் பெரும்பாலான பயணிகள் சீசன் டிக்கெட் மூலம் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் சென்னை கடற்கரை ரயில் நிலையம் ஆகியவற்றில் எந்நேரமும் கடும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் ரயில் நிலையங்களையொட்டி உள்ள இடங்கள் வேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன. மின்சார ரயில்களின் பயன்பாடு அதிகம் என்பதால் புறநகரப்பகுதிகளில் அமைந்துள்ள ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இந்த புறநகர் ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும், மின்சார ரயில்களுக்கும் தனித்தனியாக தண்டவாளங்கள் உள்ளன. ரயில் நிலையங்களுக்கு வரும் மக்கள் தண்டவாளங்களை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் மீது ஏறி, இறங்க பலர் சிரமப்படுவதால் தண்டவாளங்களை கடக்கின்றனர். அப்போது மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், மின்சார ரயில்களிலும் மோதி பலியானவர்களின் எண்ணிக்கை ஆண்டுந்தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு 14,973 பேரும், 2012ல் 16,336 பேரும், 2013ல் 19,997 பேரும், 2014 அக்டோபர் மாதம் வரை 18,735 பேரும் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி பலியாகி இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்காக ஆளில்லாத ரயில்வே கேட்களில் ஊழியர்கள் நியமிப்பது, மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இருப்பினும் பயணிகள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் ரயில் மோதி பலியாகும் சம்பவங்களை முழுமையாக தடுக்க முடியவில்லை.

இதுகுறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே துறையும், ரயில்வே காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தண்டவாளத்தை கடந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை. ரயில்கள் கடந்து செல்ல கேட் மூடப்பட்டு இருந்தும் அவசரம் காரணமாக இருசக்கர வாகனத்திலும், நடந்தும் மக்கள் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். இந்த சமயங்களில் தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.
 

மேலும் ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது வாசலில் தொங்கிக் கொண்டு செல்லும் போதும் சிலர் தவறி விழும் போது உயிர் இழப்பு ஏற்படுகிறது. இதைத்தவிர தற்கொலை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு விலைமதிப்பு மிக்க உயிரை ரயில்களுக்கு காவு கொடுப்பதை தடுக்க ரயில்வே ஊழியர்களைக் கொண்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுக்கும் முயற்சியில் ரயில்வே துறை, காவல்துறை களமிறங்கி இருக்கிறது.

பொது சேவையில் விருப்பமுள்ள ரயில்வே ஊழியர்களைக் கொண்டு  தண்டவாளத்தை பயணிகள் கடப்பதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை பயணிகள் கடந்து செல்வதை தடுக்கும் பயணியில் தினந்தோறும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த ரயில்வே ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் ஒவ்வொரு பிளாட்பாரங்களிலும் நின்று கொண்டு தண்டவாளத்தை கடப்பவர்களை தடுக்கின்றனர். அதையும் மீறி கடக்க முயற்சிக்கும் பயணிகளுக்கு விசில் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர். கைகளில் லத்தியோடு இந்த பணியில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள் பிளாட்பாரங்களில் பம்பரமாக வலம் வருகின்றனர். இதனால் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடப்பது தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் மேம்பாலம் வழியாகவே செல்கின்றனர். இதுபோன்று ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால் ரயில் மோதி உயிர்பலி ஏற்படுவதை தடுக்கலாம். தண்டவாளத்தை கடப்பதை தடுப்பது பல பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் அதற்கு பின்னால் உள்ள நல்ல விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், "அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த நடைமுறையை கொண்டு வரவுள்ளோம். விருப்பமுள்ள ரயில்வே ஊழியர்களைக் கொண்டு இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் தண்டவாளத்தை கடப்பதை தடுப்பது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிபவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பது, பயணிகளுக்கு உதவுவதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். அதே நேரத்தில் டிக்கெட் பரிசோதனை செய்ய இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. பெரம்பூர் ரயில் நிலையத்தில் இந்த பணி வெற்றிக்கரமாக நடந்து வருகிறது" என்றனர்.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ