Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீசால் நெருங்க முடியாத செம்மரக் கடத்தல் 'டான்'!

ந்திராவில் செம்மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டி அதை வெளிநாடுகளில் விற்று பல கோடிகளை சம்பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆந்திரா, தமிழகத்தில் அதிகம். இந்தக்கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளிகள் அரசியல்வாதி, தொழிலதிபர், விஐ.பி என்ற போர்வையில் வலம் வருகிறார்கள்.

சொகுசு கார்களிலும், உல்லாச வாழ்க்கைகளும் இவர்களுக்குப் பஞ்சமில்லை. அதே நேரத்தில் மரங்களை வெட்ட தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லும் அப்பாவித் தொழிலாளர்களை கடத்தல்காரர்கள் என்று கூறி நடவடிக்கை எடுப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறது ஆந்திர காவல்துறை.

சமீபத்தில் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றது செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட வந்தால் சுடுவோம் என்ற எச்சரிக்கையையும் ஆந்திர காவல்துறை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள செம்மரக் கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க ஆந்திர காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஆந்திர, தமிழக காவல்துறையில் பதிவாகி உள்ள செம்மரக் கடத்தல் கும்பல் மீதான வழக்குகளை தூசித்தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர சிறைகளில் உள்ள செம்மரக் கடத்தல்காரர்களிடமும் விசாரணை நடத்தி பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்குள் ஆந்திர காவல்துறை நுழைந்துள்ளது.

ஆந்திர காவல்துறையின் ஹிட் லிஸ்டில் முதல் நபராக இருப்பவர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு புள்ளி.  இதுகுறித்து ஆந்திர காவல்துறை உயரதிகாரி கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த செம்மரக் கடத்தல் புள்ளியை 'டான்' என்றே கடத்தல் கும்பல் வட்டாரம் அழைக்கிறது. பத்து ஆண்டுக்கு முன்பு சாதாரண நபராக இருந்த அந்தப் புள்ளி இப்போது பல கோடிக்கு அதிபதி. பணம் வந்ததும் ஒரு அரசியல் கட்சியில் அடைக்கலம் அடைந்துவிட்டதால் அவரை காவல்துறையினரால் நெருங்க முடிய வில்லை.

காவல்துறையில் அவருக்கு ஏராளமான இன்பார்மர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு எளிதாக ஆந்திராவிலிருந்து செம்மரங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுகிறார்.  தமிழக காவல்துறையில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளில் சிலருடன் அவருக்கு நெருக்கம் அதிகம். அந்த அதிகாரிகளின் தயவில் தான் பல வழக்குகளிலிருந்து அவர் தப்பித்துள்ளார்.

இதற்காக அதிகாரிகளுக்கு பல கோடிகளை செலவிட்டும் இருக்கிறார். ஐ.பி.எஸ் அதிகாரிகளை விட கடத்தல் புள்ளியுடன் அதிக தொடர்பில் இருந்து வருகிறார், இப்போது சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவர்.

கட்சி பேதமின்றி எந்த கட்சி டோனேஷன் கேட்டாலும் அள்ளி கொடுக்கும் வள்ளலான அவர், பிரதிபலனாக அந்த அரசியல் பிரமுகர்களும் கடத்தலுக்கு பல வகைகளில் உதவிகளை செய்து இருக்கிறார்கள். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும், இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அமைச்சருக்கு அன்பு பரிசாக விலை உயர்ந்த காரை கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

கடத்தல் தொழிலில் கோடிகள் புரண்டதால் சில ஆண்டுக்கு முன்பு சினிமா தயாரிப்பில் அவர் இறங்கி இருக்கிறார். வெளிநாடுகளிலும் படத்தின் சூட்டிங் நடந்துள்ளது. இந்த படத்தில் கௌரவ வேடத்திலும் நடித்து இருக்கிறார். இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த நேர்மையான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, அந்த கடத்தல் டானை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டார்.

அந்த சமயத்தில் காவல் நிலைய ரைட்டராக இருந்த இப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு விவரங்களை முன்கூட்டியே கடத்தல் புள்ளியிடம் சொல்லி தப்ப வைத்துவிட்டார். இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதனால் பட தயாரிப்பும் அப்படியே நின்று விட்டது. இந்த முறை அந்த கடத்தல் புள்ளியை எப்படியும் கைது செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆந்திர காவல்துறை மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது.

இதனால் கடத்தல் புள்ளிக்கு யார், யார் உதவி செய்கிறார்களோ அவர்களை எல்லாம் கூண்டோடு கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக கடத்தல் புள்ளியின் பண்ணை வீடு, சென்னை சாலி கிராமம், வடபழனி, ஆவடி, மாதவரத்தில் உள்ள வீடுகள் மற்றும் கெஸ்ட் ஹவுஸ்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் ரகசியமாக கண்காணித்து வருகிறோம். இதற்கிடையில் அந்த கடத்தல் புள்ளி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல ரகசியமாக திட்டமிட்டுள்ள தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் விமான நிலையங்களிலும் உஷார்படுத்தியுள்ளோம். இந்த கடத்தல் புள்ளி சிக்கினால் தமிழக முன்னாள் அமைச்சரும் சிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
 
- க்ரைம் புலி
 


 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ