Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயி தற்கொலை: யார் பொறுப்பு?

நீண்ட இடைவெளிக்கு பிறகு விவசாயம் தொடர்பாக ஒரு மிகப்பெரிய விவசாய அலை அடித்து ஓய்ந்திருக்கிறது. அதுவும் ஒரு உயிர் இழப்புக்கு பிறகு. எப்போதும் விவசாயம் பற்றிய செய்திகள் சென்சேஷன் ஆவது மிக அரிதுதான். தினந்தோறும் பங்குசந்தையை கவனிக்கும் அளவுக்குக்கூட நம் ஆட்சியாளர்கள் விவசாயத்தை கவனிப்பதில்லை. ‘இந்தியா ஒரு விவசாய நாடு’ என்று சொல்கிறார்கள்.

உண்மையில் இந்தியா இன்றும் ஒரு விவசாய நாடே, அதில் மாற்று கருத்து இல்லை. மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த வேலைகளைதான் செய்து வருகிறார்கள். இன்று அதிக வேலைவாய்ப்பை கொடுக்கும் துறைகளில் விவசாயமும் ஒன்று. உழவில் தொடங்கி உங்கள் தட்டில் விழும் சோறு வரை இருக்கும் வேலைகள் அனைத்தும் விவசாயம் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் நாம்தான் விவசாயிகளாக இல்லை. விவசாயம் செய்பவர்களை மதிப்பதுமில்லை.

இந்த அரசுகள் விவசாயத்துக்கு எதிராக கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தச் சொல்லி, பல மாநிலங்களி லிருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி தினந்தோறும் படையெடுத்தபடியேதான் இருக்கிறார்கள். டெல்லி பிளாட்பாரங்களில் உறங்கி, சாலைகளில் நின்று போராடி, அமைச்சர்களை சந்தித்து மனு  கொடுக்கிறார்கள்.

அப்படி கொடுக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன? இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. இத் தனை மாநிலங்களிலும் விவசாயம் சம்பந்தமாக ஏதோவொரு பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மாநில அரசுகள் கண்டுகொள்ளாததாலேயே, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லாத பிரச்னைகளை மனு வாக எழுதி டெல்லியில் இருக்கும் மத்திய அமைச்சர்களிடம் வந்து கொடுக்கிறார்கள்.

பல நூறு, பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து வரும் விவசாயிகள் கொடுத்த மனுவின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்ன? இதை பற்றி என்றைக்காவது நாடாளுமன்றத்திலோ, மாநிலங்களவைகளி லோ பேசியதுண்டா? சட்டி ஏந்தினார்கள், நாமம் போட்டார்கள், அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள், சாலை மறியல் செய்தார்கள். எதுவுமே எடுபடவில்லை.

தற்போது தற்கொலை போராட்டம் நடத்துகிறார்கள். இந்தியா முழுவதும் ஆங்காங்கே வயல்களில் செத்துக் கொண்டிருந்தார்கள். இனிமேல் பொது இடங்களில் உயிர் துறக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான பரிந்துரையில் கையெழுத்திடக்கூடாதென்று ஜனாதிபதியிடம் மனு தந்தார்கள் விவசாயிகள்.

மறுநாளே நீட்டிப்பதற்கான கையெழுத்தை இடுகிறார் ஜனாதிபதி. இதுதான் டெல்லி அரசியல் களம். தற்கொலைக்கு எந்த கட்சியும் முன்வந்து பொறுப்பேற்காமல் நீங்கள்தான் காரணம், நீங்கள்தான் காரணம் என்று வசைமாறி பொழிகின்றன. ஆம்ஆத்மி கட்சிக்காரர்கள் ஒத்துழைக்காததாலேயே தற்கொலை நடந்தேறியிருக்கிறது என்கிறார்கள் டெல்லி போலீசார்.

தற்கொலை போல் வேடிக்கை காட்டவே விவசாயி மரத்தில் ஏறியிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டு கிறார்கள். எல்லோரும் அதை ஒரு சம்பவமாகவோ, நிகழ்வாகவோ பார்க்கிறார்களே ஒழியே அதற்கான அடிப்படையை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

விவசாயி தற்கொலை குறித்து நடிகர் ஷாருக்கான் பேச்சில் வெளிப்பட்ட உணர்வுகூட, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சில் வெளிப்படவில்லை. இந்தியாவில் விவசாய நிலங்கள் பெருமளவில் அழிந்து வரு வதை கண்கூடாக பார்த்து வருகிறோம். மேலும் அழியும் நிலைக்கு கொண்டுச் செல்லும் நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டத்தை ஏன் கொண்டு வரவேண்டும். கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் பெய்த மழைக்கு பயிர்கள் எல்லாம் நாசமாயின. ஒரு பகுதியில் பயிர்கள் அழிந்தால் அந்த பகுதி வேளாண் அதிகாரி பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் நடைமுறை.

ஆனால் விவசாயி பிரச்னைக்கு அவராகவே வந்து போராடி அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய நிலை இந்தி யாவில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று. இறந்த கஜேந்திர சிங் என்ற விவசாயிக்கு 17 ஏக்கர் நிலம் இருக் கிறது. பெரியளவில் நிலம் வைத்திருப்பவருக்கே இந்த நிலை என்றால், சிறு, குறு விவசாயிகளின் நிலை என்னவாக இருக்கும். ஒரு விவசாயிக்கு ஓர் ஆண்டில் எவ்வளவு வருமானம் வருகிறது, எப்போதெல்லாம் இழப்பு ஏற்படுகிறது, எப்போதெல்லாம் வறட்சி வருகிறது, விவசாய வருமானத்தை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற ஆய்வை அரசுகள் ஏன் செய்ய முன்வருவதில்லை.

வயிற்றுக்கு உணவில்லாமல் இறப்பது ஒரு வகையென்றால், அந்த வயிற்றுக்கு உணவை உற்பத்தி செய் பவன் தற்கொலை செய்து கொள்வது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. பல விவசாயிகள் தங்கள் கோபத் தையும், ஆதங்கத்தையும் எங்கு சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். ஏழைச் சொல் அம்பலம் ஏறாது.. இங்கே விவசாயிகள் கோரிக்கையும் அப்படித்தான் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் விவசாயியின் தற்கொலையை பற்றி பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் பிரச்னை களை தீர்ப்பதற்கு அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பதவியேற்று இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் பிரதம அமைச்சரே? விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்னை உள்ளன என்பது தெரியும். இதற்கு தீர்வு என்னவென்று கேட்கிறீர்? இந்தியாவில் மற்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்போது, விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காதா என்ன? இன்னொன்று, மாநில அரசுகள் இருக்கிறது. அது பெயரளவுக்குத்தான் எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் பணத்தை எப்படி 'கையாள்வது' என்பதில் காட்டும் ஆர்வத்தை, மக்கள் நல திட்டங்களுக்கு செலவழிக்க தயாராக இல்லை. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற முதுமொழிக்கு ஏற்ப மக்களை காரணம் காட்டி இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் காண்பது எந்நாளோ?

- மாட்டுக்காரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close