Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளுக்கு, மானம் இருக்கிறது... அரசியல்வாதிகளே, உங்களுக்கு?

‘தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கிரிமினல்கள், கோழைகள். அவர்களுக்கு எதற்கு நாங்கள் உதவ வேண்டும்’ என திருவாய் மலர்ந்திருக்கிறார் அரியானா மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர் ஓ.பி.தன்கர்.

தங்கள் வியர்வை உப்பை உரமாக்கி, தண்ணீர் கிடைக்காத நிலையிலும் கண்ணீரால் பயிர் வளர்த்து, தேசத்தின் பசியைப் போக்கும் உழவர்களுக்கு அரசியல்வியாதிகள் கொடுக்கும் மரியாதை இதுதானா?

உழவர்களை பற்றிய அரசியல்வாதிகளின் பார்வை எப்படி இருக்கிறது என்பதற்கான ஒரு சோறு பதமாகத்தான் இதை பார்க்க முடிகிறது. தங்கள் உழைப்பால் ஒற்றை தானியத்தைக் கூட உற்பத்தி செய்ய முடியாத இந்த வாய்பேச்சு வீரர்களுக்கு, விவசாயிகளை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது.

அரசியல்வாதிகளே! உள்ளூர் வளங்களை வந்தவனுக்கெல்லாம் வாரிக்கொடுத்து விட்டு, உலக வங்கியிடம் ஒவ்வொருமுறையும் கடன் கேட்டு கையேந்தும் போதும், என்ன சொல்லி கடன் கேட்கிறோம் என எண்ணிப் பாருங்கள். 'இந்தியா ஒரு விவசாய நாடு. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத் தொழில் செய்பவர்கள்... அவர்களின் மேம்பாட்டுக்காக' என்று சொல்லித்தானே கடன் கேட்கிறீர்கள். அப்படி வாங்கும் கடனில் பாதிக்கும் மேல் நீங்கள் சுருட்டிக் கொள்வதால்தானே, சுனாமியில் சிக்கிய கட்டுமரமாகிக் கிடக்கிறது விவசாயம்.

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’
என்ற வள்ளுவனின் வார்த்தையை சரியாக புரிந்துக் கொள்ளாததன் விளைவுதான் இந்த தேசத்தின் இத்தனை அவலங்களுக்கும் காரணம்.

‘ஒரு கட்டடம் கட்ட கொத்தனார் வேலை தெரிந்திருக்க வேண்டும், வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் வேண்டும். மருத்துவம் பார்க்க படித்திருக்க வேண்டும்’ என ஒவ்வொரு பணிக்கும் ஒரு தகுதி தேவைப்படும் நேரத்தில், எந்த தகுதியும் இல்லாமல் ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூட முடியும் என்பது எந்த வகையில் ஏற்புடையது. 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்பவர் கல்வி அமைச்சர், சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் அளித்தவர் சட்டத்துறை அமைச்சர். நெல் எந்த மரத்தில் காய்க்கிறது எனக் கேட்பவர் விவசாய அமைச்சராக இருக்கும் கேலி கூத்துக்கள் அரங்கேறும் தேசத்தில், சாமானியனுக்கு என்ன நியாயம் கிடைத்துவிடப் போகிறது.

மாட்டு தீவனத்தில் ஊழல், உரங்களில் கலப்படம், போலி விதைகள் என கிரிமினல் வேலைகள் பார்த்து அப்பாவி விவசாயிகளை வதைக்கிறீர்கள். அவர்களின் உழைப்பு எனும் ரத்தத்தை அட்டை பூச்சிகளாக உறிஞ்சுகிறீர்கள். சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் நிலங்களை பறித்துக்கொள்கிறீர்கள். மானியங்களை சுருட்டிக்கொள்கிறீர்கள். இத்தனையையும் சகித்துக் கொண்டு உங்களுக்கு உழைத்துக் கொட்ட வேண்டும். இதை சகிக்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டால், கிரிமினல் என்று ஏசுவீர்கள். என்னே உங்கள் நியாயம்.

மாநிலங்களவை உறுப்பினர்களில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என்று எண்ணிப் பாருங்கள். ஒட்டுமொத்த அரசியல்வாதிகளில் கிரிமினல் குற்றங்களில் சிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிரிமினல் குற்றம் செய்தால்தான் அரசியல்வாதி என்ற தகுதியே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளை குற்றம் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

'தற்கொலை தவறான பாதைதான். என்றாலும் மானம் உள்ளவன் விவசாயி. அதனால்தான் தற்கொலை செய்து கொள்கிறான்' என்பார், மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார். ஆனால், உங்களுக்குத்தான் மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே கிடையாதே!

உங்கள் இம்சை தாங்காமல் தானே தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். இறந்த பிறகும் அவர்களை கிரிமினல் என குற்றம் சாட்ட எவ்வளவு குரூர மனம் வேண்டும். இந்த தேசத்தின் பாரம்பர்யத்தை, மக்களின் குணநலன்களை அறியாத, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட குள்ளநரி புத்தி படைத்த அரசியல்வாதிகளே.. காலம் இப்படியே சென்று விடாது.

‘‘ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர் உதையப்பர்
ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி
ஒப்பொப்பர் ஆகிடுவார். உணரப்பா நீ’’ என்ற பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

- ஆர். குமரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close