Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பூகம்பம் ஏன்...? புத்தர் சொன்ன விளக்கம்!

பூகம்பம்...மனிதனை எப்போதும் எந்தக் காலத்திலும் நடுங்க வைக்கும் இயற்கைச் சீற்றம். இயற்கையின், பஞ்ச பூதங்களின் குணத்தோடு  நடத்திய, நடத்தி வரும் உயிர்ப்பான போரட்டங்கள்  மூலம் மனித சமுதாயம் வாழ்ந்து வருகிறது என்பது யதார்த்தமான உண்மை.

ஆதி காலம் தொட்டே மனிதனை அச்சுறுத்தி வரும் நிலம், நீர், காற்று உள்ளிட்ட இயற்கை சக்திகள் அவனை பல காலமாக தூங்கவிடாமல் செய்து வருகின்றன.அவற்றின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், தன்னை தற்காத்துக் கொள்ளவும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள்.

அதே சமயம் யாவற்றையும் தாண்டி மனித சமூகம் தற்போது, மண்ணையும் விண்ணையும் அதீத ஆற்றலால் அடக்கி வைத்து ஆண்டுவருகிறது. ஆனாலும் அவ்வப்போது அடிக்கும் கனமழை,பெரும்புயல்,எரிமலை சீற்றம், நிலநடுக்கம் என்னும் பூகம்பம் ஆகியவற்றுக்கு மனித சமூகம் கொத்துக் கொத்தாய் மரணிப்பது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி, உலகின் உயரமான மலை நாடுகளில் முதன்மையான நாடான நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. 80 லட்சம் மக்களை கடுமையாகப் பாதித்து,அவர்களின் இருப்பிடங்களைப் பறித்து, உணவில்லாமல் இன்று வரை அலையச் செய்து பரிதவிக்கவிட்ட கொடூர நிலநடுக்கம் அது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆகப் பதிவாகிய நேபாள நிலநடுக்கம், 7,000 பேரின் உயிரைப் பறித்து, பல ஆயிரம் பேரைப் படுகாயப்படுத்தி அமைதியாகி இருக்கிறது. இதன் தாக்குதலுக்கு இந்தியாவின் பீகார் மாநிலமும், திபெத் நாடும், பாகிஸ்தானின் ஒரு பகுதியும்,சீனாவின் ஒரு பகுதியும் ஆளானது. கணிசமான சேதமும் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி உலகமே நடுங்கிய இந்த பூகம்பம், ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்ட நாடுகளின் புவியியல் ஆய்வாளர்களின் தூக்கத்தைப் பறித்தது. பல நாடுகளின் நிலவியல் ஆய்வாளர்கள் நேபாள நிலநடுக்கத்தின் காரணங்களை துல்லியமாக தற்போது ஆய்ந்து வருகிறார்கள்.முடிவுகளையும் தெரிவித்துள்ளார்கள்.மலை நாடான நேபாளத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள நிலத் தட்டுகள் ஒன்றோடு ஒன்று கடுமையாக மோதிக் கொண்டதின் விளைவாக பூமியின் மேல் பகுதி நடுங்கியுள்ளது.அதில் அமைந்துள்ள அனைத்துப் பொருட்களும் ஆடி அமைதி கண்டுள்ளன.

ஆனால் மனிதனின் அனைத்து படைப்புகளும்,குடியிருப்புகள்,வாகனங்கள்,சாலைகள்,உணவு விளைவிக்கும் விளை நிலங்கள் என்று அனைத்தும் சீரழிந்து நாசமாயின.சொல்லொணா துன்பத்தில் நேபாள மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.நிலநடுக்கம் நிகழ்ந்து 10 நாட்கள் கடந்தும் இன்னமும் இயல்பு வாழ்க்கை மீளாமல் பிணங்களின் வாடையோடுயும், மீண்டும் நிலநடுக்கம் எப்போதும் வரும் என்ற பீதியோடும் கழிகிறது மலை நாட்டு மக்களின் அன்றாட பொழுதுகள்.

நேபாளத்தின் அண்டை நாடுகளான இந்தியா,பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட 34 உலக நாடுகள் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினாலும் மலை நாட்டின் துன்பம் மலை போலவே உயர்ந்து நிற்கிறது. எல்லாவகையிலும் புரட்டிப் போட்டுவிட்டு பூமி சாந்தியடைந்து கிடக்கிறது. ஆனால் இது மேலோட்டமான அமைதி என்பதை அந்நாட்டின் வரலாறு மெய்ப்பிக்கிறது. 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை நேபாளத்தை நிலநடுக்கம் கபளீகரம் செய்யும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.அதனை இந்த நிகழ்வும் உறுதிப்படுத்தியுள்ளது.

உலகின் அமைதியை, மனித சமுதாயத்தின் ஒற்றுமையை வலியுறுத்திய கனவு கண்ட மாபெரும் ஞானியான கௌதம புத்தர், 2,500  ஆண்டுகளுக்கு முன்பாகவே கொடிய இயற்கைச் சீற்றமான நிலநடுக்கத்தைக் குறித்தும் விவரித்து இருக்கிறார். அது ஏன் உண்டாகிறது என்றும் புத்தர் ஞான உபதேசம் வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்று மனிதனின் பேராசை துன்பத்தை வெளிச்சமிட்டு காட்டிய புத்தர், நிலவியல் அறிவும் பெற்று இருந்தார் என்பது அவரின் போதனைகள் காட்டுகின்றன. 

புத்தரின் காலத்தில், வடகிழக்கு இந்தியாவில் கொடிய அடக்குமுறை நிலவியது. குறிப்பாக மகதம், கோசலம் என்றழைக்கப்பட்ட நாடுகளில் பழங்குடி சமுதாயம் அழிக்கப்பட்டது. இப்படிப்பட்ட குழப்பமிகுந்த சூழலில் பேராசை, வெறித்தனமான காம இச்சை, கீழ்த்தரமான பேராசை, பொதுச் சொத்துகளைச் சூறையாடுதல், அதிக வரிப்பளு, ஊதாரித்தனம், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்றவை மக்களின் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரைத் தோற்றுவித்தன. இதனால் மனம் வெறுத்த கௌதம புத்தர் இவற்றை சமூகத்திலிருந்து அகற்ற விரும்பியே சிந்தித்து மடங்களைத் தோற்றுவித்தார். அங்கு, அவரின் வழிவந்த பிட்சுக்கள் வாழும் பெளத்த சங்கங்களில் அமைதி தவழ்ந்தது. மகிழ்ச்சி நிறைந்த பழங்குடியினரின் கூட்டு வாழ்க்கை போல் இருந்தது. அந்த மடங்களில்  தனிச்சொத்து இல்லை. இருக்கும் அனைவரிடமும் முழு அளவில் சமத்துவமும், ஜனநாயகமும் நிலவின. இச்சங்கங்கள் ஏற்றத் தாழ்வு நிறைந்த அந்தக் கால வர்க்க சமுதாயத்தில், வர்க்கமற்ற சமுதாயமாக, இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலையின் ஆன்மாவாகவும் இருந்தன என்றால் அது மிகையில்லை.

இந்த நிலையில், புத்தரின் சீடர் ஆனந்தா அவரிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். `நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?` என்று சீடர் ஆனந்தா கேட்க, அதற்கு புத்தர், மிக முக்கியமான 8 காரணங்களைப் பதிலாக நவில்கிறார். 'காற்று அசைவது போல நீரோட்டம் நடப்பது போல பூமியும் அசைகிறது இது இயற்கையின் நிகழ்வே' என்கிறார்.

ஒரு குழந்தை பிறக்கும் பொழுது என்ன மாற்றங்கள் தாயினிடத்து நிகழுமோ, அதைப்போல பூமியின் உள் மாற்றங்கள் வெளிப்புறத்தில் விளைவுகளை உண்டாக்கும் என்று கூறி, சீடரின் சந்தேகத்தை தீர்க்கிறார் புத்தர்.

நேற்று புத்தரின் பிறந்த தினம். புத்த பூர்ணிமா என்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்தியாவின் பீகார் உள்ளிட்ட புத்த தேசங்களில் புத்த பூர்ணிமா நிகழ்ச்சிகள் நிறைய நடந்தன.

ஆனால் இந்த ஆண்டு பூகம்பம்  தந்த அழிவின் சுவடோடு புத்தரின் பிறந்த நாள் கடைபிடிக்கப்பட்டது என்பது சோகத்தின் சோகமே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close