Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முகமூடி மனிதர்கள்!

ரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள். ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. இதன்காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை பகிரங்கமாக வெளிக்காட்டுவதில்லை. முகமூடி மனிதர்களைப் போல ரகசியமாக வாழ்கின்றனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் ரகசிய வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த ரகசிய வாழ்க்கை வாழ்பவர்கள், உங்கள் பக்கத்து வீடுகளிலும் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை நம்மிடம் சொன்னார் சமூக ஆர்வலர் பொன்சேகர்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "சென்னையை பொறுத்தவரைக்கும் பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. அதோடு ஒரே இடத்தில் நிரந்தரமாக பலர் குடியிருப்பதும் இல்லை. ஓரினச்சேர்க்கையாளர்கள் இயற்கைக்கு மாறான உறவை நாடுவதால் சமூகத்தில் எதிர்ப்பும் உள்ளது. அதே சமயத்தில் இந்த உறவை ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

படித்தவர்கள், பாமரர்கள் என பேதமின்றி ஒவ்வொருவரின் உணர்வு, விருப்பம் அடிப்படையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழ்கிறார்கள். இதில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். முன்பெல்லாம் சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் அல்லது பெண்கள் ஒரே வீட்டில் குடியிருந்தால் அவர்களை இந்த சமுதாயம் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. ஆனால், இன்றையக் காலக்கட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர் குறித்த செய்திகள் வெளிவுலகத்துக்கு தெரிவதால் ஒரே அறையில் வாழும் ஆண்கள், பெண்கள் மீது மக்களின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. செக்ஸ் வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் மனவிருப்பத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. ஆனால் ஓரினச்சேர்க்கையை மேலை நாட்டு கலாச்சாரம் என்று இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உள்ளன. மனபுரிதல் இருந்தால் மட்டுமே இத்தகைய மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியும்" என்றார்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக செயல்படும் 'சகோதரன்' என்ற அமைப்பின் பொது மேலாளர் ஜெயா கூறுகையில், "ஆணை விரும்பும் ஆண் (ஹோமோசெக்ஸ் அல்லது கே), பெண்ணை விரும்பும் பெண் (லெஸ்பியன்), இருபாலின உறவை விரும்புவோர் (பைசெக்ஸ்யுவல்), திருநங்கைகள் (டிரான்ஸ்ஜென்டர்) ஆகியோர் எல்.ஜி.பி.டி என்று அழைக்கப்படுகிறார்கள். இத்தகையவர்களின் எண்ணிக்கை உலகில் 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஆணை விரும்பும் ஆண்கள் 2 சதவிகிதத்தினர். பெண்ணை விரும்பும் பெண்கள் குறித்த கணக்கெடுப்பு இல்லை. ஆனால் லெஸ்பியன்களின் எண்ணிக்கை குறைவு.

சகோதரன் அமைப்பில் மத்திய சென்னையில் 2,800 பேரும், வடசென்னையில் 1,200 பேரும் என 4,000 ஆணை விரும்பும் ஆண் என்ற 'கே' ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் தங்களை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டவர்கள். ஆனால் சமுதாயத்துக்குப் பயந்து பலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆணை விரும்பும் ஆண்கள் இருப்பதாக விவரங்கள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 'கே' என்ற ஓரினச்சேர்க்கையாளர் தம்பதியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றேன். இந்த நிகழ்ச்சி 4 நாட்கள் நடந்தன.

முதல் நாள் அமைதியான நடைப்பயணம், யோகா, குடும்பத்தினர் கலந்துரையாடல் ஆகியவை நடந்தது. இரண்டாவது நாள் ஒரு மணமகனின் குழந்தை பருவம் தொடங்கி இளைமைப்பருவ வரையிலான புகைப்படங்கள் திரையிடப்பட்டன. மூன்றாவது நாள் மற்றொரு மணமகனின் புகைப்பட காட்சிகள் திரையிடப்பட்டன. தொடர்ந்து இந்த இரண்டு மணமகன்களும் எப்படி காதல் வயப்பட்டார்கள் என்பதும் பகிரப்பட்டது. நான்காவது நாள் திருமண நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்காவில் சில மாகாணத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்கு தடை உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவிலும், தமிழகத்திலும் ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளியில் தெரிந்தால் அவர்களை மக்கள் கேவலமாக பார்க்கிறார்கள். அவர்களைக் குறித்த புரிதல் மக்களிடையே இல்லை. திருநங்கைகள் என்றால் பாவம், பரிதாபமாக பார்க்கப்படுகிறார்கள்.

சில ஆண்டுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர் சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். ஓரினச்சேர்க்கையாளர் குறித்து ஒவ்வொருவராக பேசினார்கள். அப்போது குறுக்கிட்ட எஸ்.பி அந்தஸ்தில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி, 'ஓரினச்சேர்க்கையாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்' என்று ஆத்திரத்தில் கூறினார். இது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால், அந்த காவல்துறை அதிகாரியின் தனிப்பட்ட கருத்தை வெளியிட்டதற்காக மேடையிலேயே அவரை நான் பாராட்டினேன். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர் மீதுள்ள ஆத்திரத்தை பலர் வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த புரிதல் ஒவ்வொருக்கும் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் குறித்த விவரங்கள் வெளியுலகிற்கு தெரியவரும்" என்றார்.

இந்த முகமூடி மனிதர்களை புரிய எத்தனை ஆண்டுகளாகுமோ?

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ