Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஜக உதிர்த்த அச்சச்சோ, அம்மம்மா பொன்மொழிகள்!

மோடி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆயிடுச்சு. அவருடைய ஆட்சி சிறப்பை ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை.

பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும், ஆதரவாளர்களும் அவ்வப்போது உதிர்க்கிற தத்துவ முத்துக்களை அப்படியே கேட்ச் பண்ணாலே போதும். இதோ, இதுவரை அவர்கள் உதிர்த்த அச்சச்சோ, அம்மம்மா பொன்மொழிகள்!

'கதை சொல்லி' மாதிரி 'கருத்து சொல்லி'யாகவே திரிந்துகொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத். வந்த புதுசுல 'முஸ்லீமா இருந்தாலும் சரி, கிறிஸ்தவராக இருந்தாலும் சரி. எல்லோரும் இந்துக்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்றணும். ஏன்னா, இந்தியா ஒரு இந்துநாடு' என ஆரம்பித்தார். தொடர்ந்து, பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக குரல் கொடுத்த மோகன், 'பொண்ணுங்க வீட்டுல இருந்தா பிரச்னை கிடையாது. எதுக்கும்மா வெளியே வந்துக்கிட்டு?' என முழங்கினார். அப்படியே காந்தி மேட்டருக்கு வந்து, 'கோட்சே, காந்தியைக் கொல்லாமல், ஜவஹர்லால் நேருவைக் கொன்றிருக்க வேண்டும்' என கமெண்ட் அடித்தார்.

அதோட விடலையே? 'அந்தம்மா சேவை செஞ்சதே மதம் மாத்துறதுக்குத்தான்' என அன்னை தெரசாவைக் கிளறினார். 'இந்துப் பெண்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க'னு செண்டிமென்ட் சீன் போட்டார். 'வேற மதத்துப் பசங்களை லவ் பண்ற இந்துப் பொண்ணுங்க சரியா வளர்க்கப்படலைனு அர்த்தம்' என ஆராய்ச்சிக் கட்டுரை வாசிச்சார். அவ்வளவு ஏன்? 'பாகிஸ்தானே இந்து நாடாதானே இருந்துச்சு. நம்ம பீஷ்மரெல்லாம் பல வருடம் அங்கதான்யா சுத்திக்கிட்டு இருந்தாரு. அதனால, அதை இந்து நாடாக மாத்திடுங்க. அப்போதான் அங்கே அமைதி திரும்பும்'னு அட்ராசக்கை அறிக்கை விட்டார். இத்தனை விஷயங்களைச் சொன்ன இந்த வில்லேஜ் விஞ்ஞானி சமீபத்தில் கண்டுபிடிச்ச விஷயம் என்ன தெரியுமா? மாட்டுக்கறி திங்கிறதுனாலதான் பூகம்பம் வருதாம்!

'நீங்க ஸ்ட்ரெய்ட்டா மூக்கைத் தொட்டீங்களா? நான் தலையைச் சுத்தித் தொடுறேன்' சபதத்துடன் அடுத்து வருவது சாக்‌ஷி மகராஜ். உத்தரப்பிரதேசத்தின் உன்னோவ் தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான இவர், ''ராகுல்காந்தி மாட்டுக்கறி தின்னுட்டு கேதார்நாத் போனதாலதான் நேபாளத்துல பூமி பொளந்துச்சு'' என்பது  சமீபத்தில் விட்ட அடடே ஸ்டேட்டஸ். அப்படியே கொஞ்சம் திரும்பி, 'திரெளபதிக்குத் துன்பம் வந்தவுடனே ஓடிவந்து உதவிய கிருஷ்ணர் மாதிரி, நேபாளத்துக்கு ஹெல்ப் பண்ணியிருக்கார் மோடி. அவர் கிருஷ்ணரோட அவதாரம்' என மோடிக்குக் கொஞ்சம் 'ஜிங்ஜக்' தட்டினார். தவிர 'அதிக குழந்தைகளைப் பெத்துக்கோங்க' என இந்துப் பெண்களுக்கு 'நல்வழி' காட்டினார். அப்படியே 'குறைந்தபட்சம் நாலு குழந்தை. அதுல ராணுவத்துக்கு ஒண்ணு, கடவுளுக்குப் பணிவிடைகள் செய்ய ஒண்ணு, மிச்சம் இருக்கிற ரெண்டும் வீட்டைப் பார்த்துக்க. சரியா?' என இலவச டியூசனும் எடுத்திருக்கார். உனக்குதான் சாமி கொடுத்திருக்கணும் பாரத ரத்னா!

'அய்யய்யோ மோடி கிருஷ்ணர்னு சொல்லாதீங்க. அவர் ராமபிரானோட அவதாரம்'னு அரைதூக்கத்துல இருந்து அவசர அவசரமா கண் முழிச்சிருக்காங்க மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி. ''ராமரோட ஆட்சி வேணுமா, முறை தவறிப் பிறந்தவங்க ஆட்சிவேணுமா?'னு இவர் உளறிக்கொட்டிய வார்த்தைகளைப் பிடிச்சுவெச்சு நாடாளுமன்றத்தில் நடந்தது களேபரம். 'அந்தம்மாவைப் பதவியில இருந்து தூக்குங்க' என அனைத்துக் கட்சிகளிலும் கோஷம் போட்டுக்கொண்டிருக்க, 'கோஷம் போட்டவங்களுக்கு நல்ல புத்தி கொடுங்க சாமி!' என பக்திப் பாடலோடு பஜனை செய்து போராட்டம் நடத்தினார்கள் சாத்வியின் ஆதரவாளர்கள். ஓஹோன்னானாம்!

சாத்வி பிராச்சிங்கிற பெண் சாமியாரோ '' 'கான்' நடிகர்களையெல்லாம் புறக்கணிக்கணும்"னு புறப்பட்டாங்க. ஷாரூக் கான், அமீர் கான், சல்மான் கான் இவங்கெல்லாம் கலாசாரத்தை கலைச்சு கலைச்சு விளையாடுறாங்களாம். அதனால, இவங்க நடிச்ச எந்தப் படத்தையும் தயவுசெஞ்சு பார்த்துடாதீங்கனு இளைஞர்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறாராம் பிராச்சி!

அடுத்த ஆடு ஸாரி... அடுத்த பி.ஜே.பி எம்.பி ஆதித்யானாத். ''ஒரு இந்துப் பெண்ணை முஸ்லீமா மாத்துனா, நாம  நூறு முஸ்லீம் பொண்ணுங்களை இந்துவா மாத்தணும்'னு வெறித்தனமா மைக் பிடித்தவர். 'காசி விஸ்வநாதர் கோயிலை இடிச்சுத் தள்ளிட்டுதான் மசூதியைக் கட்டுனார் ஒளரங்கசீப். எனக்கு மட்டும் அனுமதி கொடுத்தா அத்தனை மசூதியிலும் பிள்ளையார், கெளரி, நந்தி சிலைகளை வைப்பேன்'னும் திமிறினார். இதே வெறியோடுதான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவைப் பார்த்து, 'உங்க கொள்கையெல்லாம் முஸ்லீம் மக்களைத் திருப்திப்படுத்துற மாதிரியே இருக்கு. அதனால, நீங்க பாகிஸ்தான்ல குடியேறிக்குங்க!'' என ஹவுஸ் ஓனர் வாடகைக்கு குடியிருப்பவரிடம் பேசுவதுபோல காமெடி செய்தார்.

இத்தனை நாள் படத்துல 'புகையிலை புற்றுநோய் உண்டாக்கும்'னு படம் பார்த்துப் பாடம் படிச்ச நம்மகிட்டயே 'யாரு சொன்னா? அதெல்லாம் ஒருத்தணும் நிரூபிக்கலை. புகையிலையால கேன்சர் வராது' என்றார் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் திலீப் காந்தி. அடுத்த சில நாள்ல ரூம்போட்டு யோசிட்டு வந்த ஷாம் சரண்குப்தாங்கிற பி.ஜே.பி. புள்ளியோ, 'இப்போ சக்கரை நோய்க்கு சக்கரைதான் காரணம்ங்கிறதால அதைத் தடை பண்ண முடியுமா?'னு கேட்டார். அசாமைச் சேர்ந்த ராம் பிரசாந்த் சர்மாங்கிற இன்னொரு பி.ஜே.பி. புள்ளி கூற விளையும் கருத்து என்னன்னா, 'டெய்லி சரக்கைப் போட்டு 60 சிகரெட் குடிச்சாலும் ஒண்ணுமே ஆகாது!'ங்குறார்.

இது தவிர, 'தாஜ்மஹால் இந்துக்கோவில் தெரியும்ல?'னு உத்தரப் பிரதேச பி.ஜே.பி தலைவர் காந்த் பாஜ்பாய் சொல்றார். 'மோடியை ஆதரிக்காதவங்க ஒழுங்கு மரியாதையா பாகிஸ்தான் கெளம்பிடுங்க'னு மிரட்டல் விடுக்கிறார் பி.ஜே.பி எம்.பி. கிரிராஜ் சிங்.

டெல்லியில் பாலியல் வன்முறை நடந்த சமயம், 'அந்தப் பொண்ணு 'அண்ணா'னு அழுதுகிட்டே அவங்க கால்ல விழுந்திருந்தா இப்படி நடந்திருக்குமா?'னு அசராம கேட்டார் சாமியார் ஆசாராம் பாபு.

என்ன சார் நடக்குது இங்க???

- கே.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close