Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புற்றுநோயை வென்ற இரும்பு மனுஷி மோஹனா!

இரவில் வரும் பல்வலி நம்மை  நிலைக்குலைய வைத்துவிடும். சாதாரண காய்ச்சல், நம்மை துவளச் செய்துவிடும். இதெல்லாம் ஒவ்வொருவரின் மனம் மற்றும் உடலின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுபடும் மனநிலை. மன உறுதியும், நேர்மறை சிந்தனையும், தன்னம்பிக்கையோடும் போராடி, புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்திருக்கிறார் இரும்பு மனுஷி மோஹனா.
 
38 ஆண்டு காலம் கல்லூரி பேராசியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி, ஒய்வு பெற்றவர் மோஹனா. தமிழக அறிவியல் இயக்கத்தின் தலைவர், அகில இந்திய அறிவியல் கூட்டமைபின் சமதா (ஆண்-பெண் சமத்துவம்) என்ற குழுவின்  தென் இந்தியா ஒருங்கிணைப்பாளர், CITU-வின் மாவட்ட துணை தலைவர் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர்.  இதுவரை 35 புத்தகங்களை எழுதியுள்ளார். அடிதட்டு மக்களுக்காகவும், சமூகத்தின் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்த மோஹனாவுக்கு, 62-வது வயதில்தான் புற்றுநோய்  தாக்கியிருப்பது தெரியவந்தது. புற்றுநோயுடன் போராடி, தற்போது பூரண குணமடைந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மோஹனா.

"இடது புற மார்பகத்தில் லேசாக கட்டி இருப்பதாக உணர்ந்தேன், ஆனால் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. சீரான உணவு முறை, நாள்தோறும் உடற்பயிற்சி என சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்பது எனது எண்ணம்.  சில மாதங்களுக்கு பிறகு, மார்பகத்தில் வலி அதிகரிக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில், எனக்கு புற்றுநோய் என சொல்லி அதுவும் மூன்றாவது நிலைக்கு முற்றிவிட்டது என்றார் மருத்துவர்.

'நான் சரியான வாழ்வியல் முறையைதானே பின்பற்றுகிறேன், எனது குடும்பத்தில் யாருக்கும் புற்றுநோய் வந்ததில்லையே" என்ற சந்தேகத்துடன் இரண்டாவது ஒபினியன் கேட்க, வேறொரு மருத்துவரை சந்தித்தேன்.  அவரும் எனக்குப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தார்.

மார்பகத்தில் இரண்டு செ.மீ அளவுக்கு கட்டி உள்ளது என்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்ய சொல்ல, நான் சிறிதும் தாமதிக்காமல் 'எப்போது சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்' என்றேன். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என் நண்பர்களின் துணையோடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஒருநாள் முழுவதும் ஐ.சி.யூவில் இருந்த பிறகு, நர்ஸ் எனக்கு பல் தேய்க்கவும், குளிப்பாட்டவும் வருவார்கள். எனக்கு அது பிடிக்காது, 'நானே செய்து கொள்கிறேன்' என்பேன். கழுத்திலிருந்து வயிறு வரை இடது புறம் முழுமையாக பேன்டேஜ் போட்டிருப்பதால் நர்ஸ் என்னை வற்புறுத்தி, 'நாங்கள் உங்களை சுத்தம் செய்கிறோம். இல்லையெனில் மருத்துவர்கள் எங்களை திட்டுவார்கள்' என்பார்கள். விருப்பமில்லாமல் ஒப்புக் கொண்டேன். மறுநாளே, நான் எழுந்து நடக்க தொடங்கிவிட்டேன். வெறும் தூங்கும்போது மட்டும்தான்  படுப்பேன். என் நேர்மறை எண்ணங்களாலும், தன்னம்பிக்கையாலும் எனக்கு வலிக்கவே கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதால் எனக்கு இன்றுவரை வலி என்பதே இல்லை. டெஸ்ட் செய்யும் போதும் கூட, லேசாக எறும்பு கடிப்பது போலதான் இருக்கும்.
 
கீமோதெரப்பி என்றாலே எல்லோருக்குமே ஒருவித பயம் உண்டு.  முதல் கீமோதெரப்பியின் போது, எனக்கு வலி இருந்தது அடுத்த முறை எனக்கு வலிக்கக் கூடாது என்ற எண்ணத்தை விதைத்தேன். அடுத்த  கீமோவின் போது எனக்கு வலியே இல்லை. மருத்துவர்கள் ஆச்சர்யப்பட்டு உங்களது நம்பிக்கையும், எண்ணமும்தான் உங்களுக்கு பக்க துணை என பாராட்டி, "ஐ எம் தி பெஸ்ட் பேஷண்ட்" என்றார்கள்.
 
முன்பு தரையில் மட்டும்தான் படுப்பேன். ஆனால், சிகிச்சை எடுத்த பிறகு, இறந்த செல்கள் கீழே உதிரும். அதை சாப்பிட எறும்புகள் படை படையாக வரும். கட்டுப்படுத்தவே முடியாது என்பதால் மெத்தையில் படுக்க தொடங்கினேன். கட்டிலில் இருந்து ஒய்வு எடுக்கும் போதும் கூட நான் 300 கட்டுரைகளை எழுதினேன். நான் நோயை கண்டு அஞ்சியதோ இல்லை. கீமோதெரப்பி மற்றும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளை போக்குவதற்காக 'தாய்ச்சீ' என்ற மார்ஷல் ஆர்ட் கற்றுக் கொண்டேன். ஒரு காலில் நின்று செய்யும் அந்த கலையை பயின்று எனது மாஸ்டரின் துணையோடு இன்று வரை தினமும் பயிற்சி செய்கிறேன். இந்த பயிற்சி செய்வதால் எனக்கு எலும்பு மெலிதல் பிரச்னை, சிகிச்சைகளால் ஏற்படும் பக்க விளைவுகள், வலி போன்றவை என்னிடம் நெருங்கியதே இல்லை" என்கிற மோஹனா, ஒருமாதத்தில் 4000 கி.மீ வரை பயணிக்கிறார்.  அறிவியல், எழுத்து, வேலைகளுக்கிடையே சமையல், குடும்ப பராமரிப்பு போன்ற அனைத்தையும் இவரே கவனிக்கிறார். தன் 94-வயது அம்மாவை கூடவே வைத்து பராமரிக்கிறார். 
 
நோயிலிருந்து குணமான பிறகு, உங்களின் வாழ்வியல் முறை எப்படி மாறியுள்ளது என்றதற்கு அவர் சொன்னது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

"என்னை அடையாளம் காணமுடியாத அளவுக்கு, எனது உடலும், முக தோற்றமும் மாற்றம் தெரிந்தாலும், என் மனம் மட்டும் இன்னும் துணிவாகவே உள்ளது. காலை 5 மணிக்கு எழுந்திருப்பேன். உடனே குளிப்பேன். பிறகு மாத்திரைகளை சாப்பிட்டு, சத்து மாவு கஞ்சி குடிப்பேன். 3 ரவுண்ட் ஜாக்கிங், 3 ரவுண்ட் வாக்கிங் செய்வேன். பிறகு 'தாய்ச்சீ' வகுப்புக்கு சென்று பயிற்சி செய்வேன்.  வீட்டுக்கு வந்ததும், காலை உணவாக தோசை அல்லது இட்லி தொட்டுக்க சாம்பார் எடுத்துக் கொள்வேன்.  தினமும் மூன்று வகையான காய்கறிகள் சாப்பிடுவேன்.  மதிய உணவில் ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு கீரை, தயிர், மோர், சாம்பார், பச்சடி போன்றவை இருக்கும். வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவேன். தினமும் கட்டாயம் வேக வைத்த பருப்போ, பயரோ சாப்பிடுவேன். எண்ணெய் உணவுகள், ஊறுகாய், ஆயத்த உணவுகளை தவிர்த்து விடுவேன். மாலையில் அவல் போன்ற நொறுக்கு தீனியை எடுத்துக் கொள்வேன். இரவில் சிறுதானிய களி, ரசம், பூண்டு, வெங்காயம் போன்றவை எனது அன்றாட உணவு பட்டியலில் இடம் பெறும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஜென்ரல் செக் அப் செய்து கொள்கிறேன்" என்கிற மோஹனாவுக்கு தற்போது 67 வயது.  இன்று தமிழகத்தின் பெண் வானியல் வல்லுநராக இருக்கிறார்.

ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட இவ்வளவு வேலை செய்வார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், மோஹனாவின் நேர்மறை எண்ணங்களும், மன தைரியமுமே, புற்றுநோய், இவரது வாழ்வில் இடம் தெரியாமல் போய்விட்டது. எதையும் நேர்மறை எண்ணங்களால் சாதிக்கலாம் என்பதற்கு மோஹனா சிறந்த உதாரணம்.
 
- ப்ரீத்தி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close