Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘என் பிள்ளை நடக்கணும்!’’- ஓர் அன்னையின் பிரார்த்தனை!

ஜெயசுதா நெப்போலியன் ‘அன்னையர் தின’ சிறப்புப் பேட்டி!

‘‘எல்லோரையும் போலத்தான் என் மூத்த பிள்ளையும் ஆரோக்கியமாக பிறந்து, நார்மலான குழந்தையாக வளர்ந்தான்... ஸ்கூல் போக ஆரம்பிச்சான். நான்தான் தினமும் கொண்டுபோய் விட்டுக் கூட்டிட்டு வருவேன். நாலரை வயசில்தான் எனக்கு அந்த வித்தியாசம் தெரிஞ்சது... அவன் நடை, மத்த குழந்தைங்க மாதிரி நார்மலா இல்லைங்கிறதை உணர்ந்தேன்... நடக்கிறப்போ ஏதோ ஒரு அசாதாரணம் தெரிஞ்சுகிட்டே இருந்துச்சு. என் கணவர்கிட்ட சொன்னதோடு, மனசுக்குள்ள அதைப் போட்டுக் குழம்பிக்கிட்டே இருந்தேன்’’ & மென்மையாக, இயல்பாகப் பேசத் தொடங்குகிறார் ஜெயசுதா. பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியனின் மனைவி. தன் மகனுக்காகவே அமெரிக்காவில் போய் செட்டில்லாகிவிட்டது இவர்கள் குடும்பம்.


‘அன்னையர் தின’ சிறப்புப் பேட்டிக்காக அங்கிருந்து நம்மிடம் தொலைபேசியில் உரையாடிய ஜெயசுதாவின் வார்த்தைகளில், தன் பிள்ளையின் நோயைத் தெரிந்துகொண்ட முதல் கணத்து வலியையும் வருத்தத்தையும் மீறி, மகனை மகிழ்ச்சியோடு வாழவைக்கவேண்டுமென்ற உத்வேகமும் நம்பிக்கையும் அதிகம் தெறித்தது.அவர் நிறுத்திய அந்த சில கணங்களில், அவரைப் பற்றிச் சில துளிகள்...

திருச்சியில் பிறந்து வளர்ந்தவர் ஜெயசுதா. கல்லூரியில் 2&ம் ஆண்டு படிக்கும்போது திருமணம். அதன்பிறகு படிப்பை நிறுத்திவிட்டு, குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்டார். ஆனாலும், இரு குழந்தைகளுக்குப் பிறகு, பாதியில் விட்ட தன் பட்டப்படிப்பை முடித்ததோடு, எம்.பி.ஏ. பட்டமும் பெற்று, சென்னையில் நெப்போலியன் தொடங்கிய சாஃப்ட்வேர் தொழிலில், நிதி மேலாண்மையில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர். மூத்த மகன் தனுஷ்; இளையவர் குணால். இருவரும் யு.எஸ்.ஸில் டென்னிஃபீ மாநிலத்தில் நாஷ்வெல் நகருக்கருகே உள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

‘‘அவனுக்கு நடக்கிறதுல ஏதோ சிரமம்னு புரிஞ்சப்போ, ஒரு பிஸியோதெரபிஸ்ட்டைத்தான் முதல்ல கன்சல்ட் பண்ணினோம். அவர் நியூராலஜிஸ்ட்டைப் பார்க்கச் சொன்னார். நியூரோ டாக்டர்தான், தனுஷுக்கு வந்திருக்கிறது ‘மஸ்குலர் டிஸ்ட்ரெபி’ என்கிற தசைச் சிதைவு நோய்னு டயக்னைஸ் செய்தார். தசைகளைச் சிதைக்கும் இந்த நோய் வந்தால் முதல்ல கால்களைத்தான் தாக்கும். நடை தடுமாறுதல்தான் இதுக்கான முதல் அறிகுறி. எங்களுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷம் கழிச்சுப் பிறந்த பிள்ளை தனுஷ்... ரொம்ப ‘ப்ரெஷியஸ் சைல்ட்’! அவனை இந்த நோய் தாக்கியிருக்குன்னு தெரிஞ்சபோது, நானும் என் கணவரும் அப்படியே உடைஞ்சு, நொறுங்கிப் போனோம். ‘என்ன பண்ணலாம்... என்ன செய்து என் குழந்தையைக் காப்பாத்தலாம்?’னு மனசு பரபரன்னு அலைபாய்ஞ்சு, தவிச்சது... இன்டர்நெட்ல ‘மஸ்குலர் டிஸ்ட்ரெபி’ பத்தித் தேடி விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். ‘இதுதான்... இன்னதுதான்’னு தெளிவா தெரிஞ்ச பிறகு, முதல் வேலையா அழறதை நிறுத்தினேன்.‘வந்தது வந்தாச்சு... இனி என்ன செய்யணும்னுதான் பார்க்கணும்... அதுதான் முக்கியம்! மனசை திடப்படுத்திக்கிட்டு, இந்த நோய்க்கான சிறப்பான மருத்துவத்தைக் கொடுக்குறதும் அவனை சந்தோஷமா வெச்சுக்கறதும்தான் எங்களோட முதல் கடமை’ன்னு எங்களை நாங்களே தேத்திக்கிட்டு, செயல்பட ஆரம்பிச்சோம். அதுக்குள், தனுஷுக்கு தசைகளுக்கான பயாப்ஸி அது, இதுன்னு எல்லா டெஸ்ட்டும் செய்து, தசைகளை வலுப்படுத்துறதுக்கான ஸ்டீராய்டு மருந்து கொடுக்க ஆரம்பிச்சாச்சு. ஸ்டீராய்டையும் பிஸியோதெரபியையும் தவிர அதுக்கு வேற சிகிச்சை கிடையாது.
‘இத்தனை கோடி பேர் இருக்கும்போது, நமக்கு இந்த மாதிரி குழந்தையை கடவுள் கொடுத்திருக்கிறார்னா, இந்தக் கடமைக்காக நம்மை அவர் தேர்வு செய்திருக்கார்னுதானே அர்த்தம்? அதுக்காக நீ பெருமைப்படணும்... அந்தக் கடமையை நீ சிறப்பாகச் செய்யணும்!’ & இதுதான் நான் எனக்குள்ளே அடிக்கடி சொல்லி, என்னை வலிமைப்படுத்திக்கிட்ட வாசகம். எந்த நொடியிலும் அலுத்துக்கறதே இல்லை. என் பிள்ளைங்க சந்தோஷம் தான் என் முதல் ப்ரையாரிடி! அவனுடைய ஒவ்வொரு விஷயத்தையும் பரீட்சார்த்தமா பண்ணிப் பண்ணிப் பார்த்துத்தான் நிறையக் கத்துக்கிட்டோம். எங்களைப் பக்குவப்படுத்திக்கிட்டோம்.

தொடர்ந்து ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சான் தனுஷ்... ஸ்கூல்லயும் அவன் நிலையைப் புரிஞ்சுக்கிட்டு, நல்லா சப்போர்ட் பண்ணினாங்க. தொடர்ந்து ஸ்டீராய்டு சாப்பிடறதால, உடம்பு வெயிட் போடுதேன்னு இடையில் கொஞ்ச நாள் நிறுத்திப் பார்த்தோம். ஆனா, அவனோட தசைகள் வலு இல்லாம, கொழ கொழன்னு ஆயிடுச்சு. அதனால திரும்பவும் ஸ்டீராய்டு ஆரம்பிச்சு, இப்ப வரை அதுதான் கொடுத்திட்டிருக்கோம். இது மாதிரி நோய்களுக்கு, ஸ்டீராய்டு மருந்து கொடுத்திட்டிருக்கிறவங்க, டாக்டர் அட்வைஸ் இல்லாம அதை நிறுத்தக் கூடாது.ஒரு கட்டத்தில், தனுஷுக்கு நடையே நின்னு போய் வீல் சேருக்கு வந்துட்டான். அப்போதான் திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமத்தில் இந்த நோய்க்காக ராமசாமின்னு ஒரு வைத்தியர் செய்ற ‘மயோபதி சிகிச்சை’ பத்திக் கேள்விப்பட்டு அங்கே போனோம். அங்கேயே ரெண்டு வருஷம் தங்கினோம். குழந்தைகளை அவங்க உயரம், எடைக்குத் தகுந்த மரச் சட்டங்களில் படுக்க வெச்சு, துணியால் இறுக்கிக் கட்டுப் போடுற ‘கட்டு வைத்தியம்’ அது. முதன்முதல்ல கட்டுக் கட்டும்போது, வலி பயங்கரமா இருக்கும். அவன் கஷ்டப்படுறதை என்னால பார்க்கவே முடியல. ‘இந்த வைத்தியமே வேணாம்’னு விட்டுடலாம்னு நினைச்சப்போ, என் பையன்தான் என்னை சமாதானப்படுத்தினான்.

‘‘இல்ல அம்மா... ட்ரை பண்ணலாம். நான் தாங்கிக்கிறேன். நான் நடக்க ஆரம்பிச்சிட்டா நல்லதுதானே?’’ன்னு அவன் சொன்ன வார்த்தைகள்தான் எங்களை அங்கே தொடர்ந்து இருக்க வெச்சது. நடை நின்னு போய் ரெண்டு வருஷம் ஆன குழந்தைகளை எல்லாம் கட்டு வைத்தியம் மூலமா அந்த வைத்தியர் நடக்க வெச்சதை நாங்க நேரிலேயே பார்த்தோம். ஆனா, தனுஷுக்கு நடை நின்னு போய் நாலு வருஷம் கழிச்சுத்தான் நாங்க போனோம். ‘பிரேஸ்’ (நடைக்கான சப்போர்ட்டிவ் சிஸ்டம்) போட்டு ஒரு மைல் தூரம் வரை நடப்பான்.

கொஞ்ச நாட்கள்ல அவனே, ‘‘அம்மா... எனக்கு நடை நின்னு நாலு வருஷம் ஆயிடுச்சுல்ல... அதனால என்னை நடக்க வைக்கிறது கஷ்டம்னு நினைக்கிறேன்’’னு பிராக்டிகலா, புரிஞ்சுகிட்டு சொன்னபோது, என் குழந்தையின் பக்குவத்தை நினைச்சு பெருமை ஒருபக்கம்; ‘நடக்க வைக்க முடியலயே’ன்னு துயரம் இன்னொரு பக்கம்! அப்போ அவனுக்கு 13 வயசு. தன் நோயைப் பத்தி முழுமையாகத் தெரிஞ்சுகிட்டு, தன் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு, எந்தத் தன்னிரக்கமும் இல்லாமல் எங்களை சந்தோஷமாக வெச்சுக்கிறதுக்கு முயற்சி பண்ணும் அவனோட முதிர்ச்சியைப் பார்த்து எனக்கே ஆச்சர்யமா இருக்கும்’’ & சிறிய இடைவெளி விட்டு அவரே தொடர்கிறார்.‘‘அவனுக்கு இந்த நோய் இருக்கிறது தெரிஞ்சதிலிருந்தே, அவனோட சந்தோஷத்துக்காக நாங்க அடிக்கடி ‘அவுட்டிங்’ போக ஆரம்பிச்சோம். வெளியூர் பயணங்கள், வித்தியாசமான உணவுகளைச் சாப்பிடறது எல்லாம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். சென்னையில் இருந்தப்போ, விடுமுறைக்கு அடிக்கடி அமெரிக்கா வருவோம். அப்போதெல்லாம், இந்த மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இங்கே இருக்கிற வசதிகளையும் அவங்களுக்குக் கொடுக்கப்படற முக்கியத்துவத்தையும் பார்த்துத்தான், தனுஷுக்காக யு.எஸ்.ஸில் செட்டில் ஆயிடறதுன்னு முடிவு பண்ணினோம். இங்கே யாருமே அவங்களை வித்தியாசமா பார்க்க மாட்டாங்க; நடத்த மாட்டாங்க. எல்லோரையும் போல அவங்களையும் சாதாரண மனிதனா நடத்துவாங்க. அந்த ஒரு விஷயமே தம்பிக்கும் எங்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுபோல ஸ்கூலிலும் நிறைய வசதிகள்... தனுஷால் ரொம்ப நேரம் எழுத முடியாது. அவன் சொல்லச் சொல்ல எழுதுறதுக்கும் மத்த விஷயங்களில் உதவுறதுக்கும் ‘ஹெல்ப்பர்’ இருக்காங்க. காலையில் எழுந்து பல் தேய்ச்சு, குளிக்க வெச்சு, சாப்பாடு ஊட்டி... எல்லா ஆக்டிவிடீஸும் நான்தான் செய்வேன். அவனோட வீல்சேரை அவனே இயக்கி, லிஃப்ட்ல, ராம்ப்ல எல்லாம் போயிடுவான். ஸ்கூலுக்குப் போற வேன்ல கூட, அவனோட சேரில் உக்காந்தபடியே உள்ளே ஏறி ஃபிக்ஸ் ஆகிக்கிற மாதிரி வசதி இருக்கு. அதனால, ஒவ்வொரு முறையும் தூக்கித் தூக்கி வீல்சேரில் வைக்கற சிரமம்ஈல்லை. காலையில் 7 மணிக்குக் கொண்டுபோய் டிராப் பண்ணுவேன். 11 மணிக்கு லன்ச் கொண்டுபோய் ஊட்டிவிட்டு வருவேன். திரும்ப 2.30 மணிக்குகூட்டிட்டு வருவேன். அதுக்கப்புறம் பிசியோதெரபி, ஸ்விம்மிங், டிராயிங் கிளாஸ், ஹோம்வொர்க்ஸ்னு அவனுக்கான பயிற்சிகளில் நேரம் சரியா இருக்கும்.

இப்போ தனுஷ் 11&ம் வகுப்புப் படிக்கிறான். அடுத்த வருஷம் ஸ்கூல் ஃபைனல். அப்புறம் காலேஜ்ல சேர்க்கணும். சின்னப்பையன் குணால் இப்போ மிடில் ஸ்கூல். குணாலுக்கு விவரம் தெரிய ஆரம்பிசதிலிருந்தே அவனிடம் மூத்தவனைப் பத்தி, அவனோட உடல் பிரச்னையைப் பத்தி விளக்கி, ‘‘நீதான் அண்ணனைப் பார்த்துக்கணும்’’னு சொல்லிச் சொல்லி வளர்த்ததால, அது அவனுக்குள்ளே நல்லா பதிஞ்சு போயிடுச்சு. அண்ணனுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பான். அண்ணன் மனசுக்குள்ள சங்கடப்பட்டுடக் கூடாதேன்னு, தன்னோட சந்தோஷங்களைக் கூட விட்டுத் தருவான். உதாரணத்துக்கு, ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு தான் மட்டும் போனா அண்ணா ஃபீல் பண்ணுவானோ என்னவோன்னு, தனுஷை விட்டுட்டு தனியா எங்கேயுமே போகமாட்டான். ஃப்ரெண்ட்ஸை எல்லாம் எங்க வீட்டுக்கு வரவழைச்சு, அண்ணனையும் சேர்த்து விளையாடுவான். அதுக்காக சண்டை வராமலும் இருக்காது. ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குவாங்க. அப்புறம் சேர்ந்துக்குவாங்க. குணால் மாதிரி தம்பி கிடைக்கிறதுக்கு தனுஷுக்குக் கிடைச்ச வரம்!’’ & இதைச் சொல்லும்போது, அந்தத் தாயின் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.

திடீரென சுதாவின் குரல் கம்முகிறது.

‘‘எங்க எல்லாரையும் விட, தனுஷூக்கு அவனோட நிலைமை ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா, ‘அம்மா மனசு கஷ்டப்படுமே’ன்னு எதையும் காட்டிக்க மாட்டான். அவனுக்கு நான்தான் எல்லாமே! ‘நீங்கதாம்மா எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்டு’னு அடிக்கடி சொல்வான். அவனோட சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் என்கிட்டதான் பகிர்ந்துக்குவான். நாங்களும் அவனுக்கு சந்தோஷம் தர்றதை மட்டும்தான் செய்துட்டு இருக்கோம். எந்த சாதாரணக் குழந்தையோடும் அவனை ஒப்பிடறதில்ல! அந்த விஷயத்தில், ஒரு சிறப்புக் குழந்தையின் தாயாக, என் மனசை 100 சதவிகிதம் ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். எல்லாத்தையும் பாஸிட்டிவ் ஆங்கிள்ல பார்க்கப் பழகிக்கிட்டேன். ஒரு சதவிகிதம் கூட எதிர்மறை எண்ணத்தை வரவிடறதில்லை!

ஆனா ஒரே ஒரு விஷயம் எனக்குள்ள ஏக்கத்தை வரவழைக்கும்... தனுஷ்கிட்டே விளையாட்டா பேசிக்கிட்டிருக்கப்போ, ‘‘கடவுள் உன்கிட்ட நேரில் வந்தால், என்ன வரம் கேட்பீங்க?’’&ன்னு கேட்பான்.

‘‘ ‘என் பிள்ளை நடக்கணும்’னு கேட்பேன்’’னு சொல்வேன்...

‘‘நானும் அதைத்தாம்மா கேட்பேன்... நான் நடக்கணும்னு!’’&னு கண்கள் நிறைய ஆசையோடு சொல்வான் என் குழந்தை!
‘‘நீ நடப்பே கண்ணு... நீ நடக்கணும்...! நிச்சயம் ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து நீயே எழுந்து நடந்து வருவே பாரு!’’&ன்னு சொல்வேன்.
‘கடவுளே...! என் பிள்ளையோட இந்த ஆசையை நிறைவேத்தி வெச்சிடேன்!’னு என் மனசு இறைவன்கிட்ட இறைஞ்சும். என் ஆயுளின் ஒவ்வொரு விநாடியும் அதைத்தான் அனிச்சையாகச் செய்துக்கிட்டிருக்கு என் உயிரும் உணர்வும்!’’

சுதா சொல்லி முடிக்கும்போது, அவர் இறக்கி வைத்த பாரமும் பிரார்த்தனையும் நம் நெஞ்சில் ஏறி அமர்ந்துகொள்ள... அந்த விநாடி முதல் தனுஷுக்காகப் பிரார்த்திக்கிறது நம் மனமும்!

ஆண்டவன் இருக்க முடியாத இடத்தில் அன்னை இருக்கிறாள்!

- பிரேமா நாராயணன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close