Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா தீர்ப்பு: அதிமுகவுடன் பா.ஜ. கூட்டணி?

மிழக அரசியலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வாரம்தோறும் நடந்து வந்தாலும், இன்று நடந்த ஒரு நிகழ்வு அரசியலின் போக்கை மாற்றி போட்டிருப்பதாக தோன்றுகிறது.

வருகிற 2016 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரலில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.முன் எப்போதும் இல்லாத வகையில் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது.அதில், வருமானத்தைவிட 10 சதவீதம் வரை சொத்துச்  சேர்த்திருந்தால் விடுவிக்கப்படலாம். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 சதவீதம் குறைவாகத்தான் சொத்து சேர்த்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். மேலும் ஜெயலலிதா வங்கி கடன்களை கீழமை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும்  கூறி,  நீதிபதி குமாரசாமி அவரை விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில்,ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் சிறைத்தண்டனை மற்றும் ரொக்க அபராதம் விதித்தும் அரசியலில் அதிர்ச்சியூட்டினார். பின்னர் சிறைவாசமிருந்த ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜாமீன் அளித்து விசாரணை நடத்தி இன்று அவரை விடுதலை செய்துள்ளது.கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அப்படியே தூக்கிப் பரணில் போட்டுவிட்டு விடுதலை என்ற புதிய `பொக்கே` கொடுத்து ஜெயலலிதாவை மீட்டு வந்திருக்கிறது. கடந்த 7 மாதங்களாக அதிமுகவை புரட்டிபோட்ட ஊழல் வழக்குப் புயல், ஒருவழியாகக் கரையை கடந்து   நிம்மதியை வரவைத்துள்ளது.

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அரசியல் களத்தில் கூட்டணி வைக்கவும் தனித்து தேர்தல் களம்  காணவும்  கட்சிகள் மும்முரமாக இயங்கிவந்தன.

நான்கைந்துமுறை ஆட்சியில் இருந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்து, தமிழகத்தின் எதிர்க்கட்சியாகவும் இடம்பெற முடியாமல்போன திமுக, வழக்கின் சிக்கலில் ஜெயலலிதா சிக்குண்டிருந்த மாதங்களில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி மக்களைக் கவர்ந்தது.ஜெயலலிதாவுக்குப் பதிலாக தமிழக முதல்வராகப் பொறுப்பில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அரசு தள்ளாடுவதாகவும், ஊழல்கள் மலிந்து  மக்களை துயரக்கடலில் தள்ளிவிட்டதாகவும் திமுக பல்வேறு அறிக்கைகள்வெளியிட்டுப்  போராட்டங்கள் நடத்தியது.

அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தினந்தோறும் அறிக்கைகள்,போராட்டங்கள் கடும் விமர்சனம் என்று அரசியல் களத்தில் விறுவிறுப்பைக் கூட்டினார்.அத்தோடு நில்லாமல் தமிழக அரசில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நோய் போல பீடித்துக் கிடக்கிறது என்றும், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் பட்டியல்கள் தயாரித்து ஆளுநரிடம் மனு அளித்தது பாமக. பல நேரங்களில் முதல்வர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்றும், ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்றும் அறிக்கைகள் பலவும் பாமகவில் இருந்து வெளியாகின.

எதிர்க்கட்சியாக அமர்ந்த தேமுதிக, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை  தக்கவைத்துக் கொள்வதிலும் அதன் தலைவரின் குண்டக்க மண்டக்க பேச்சுக்களிலும் மாட்டிக்கொண்டு தேய்ந்து கிடக்கிறது. இருந்தாலும் திடீரென்று திமுக,காங்கிரஸ்,பாஜக,இந்திய ஜனநாயகக் கட்சி,புதிய நீதிக்கட்சி என்று பல கட்சித் தலைவர்களைப் பார்த்துப் பேசி டெல்லிக்கு அழைத்துச்சென்று, பிரதமர் மோடியிடம் மாநிலன் நலன் குறித்து கோரிக்கை வைத்தார்.அவரின் இந்த ஒருங்கிணைக்கும் சக்தியை அனைத்துத் தரப்பினரும் பாரட்டினர்.  

நாட்டின் விடுதலைக்கு வித்திட்டு போராட்டம் பல கண்டு பிரிட்டிஷாரிடம்  இருந்து சுதந்திரத்தை வாங்கி தந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தைப் பொறுத்த வரை 1967 க்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தேய்ந்து தேய்ந்து, தற்போது மாவட்ட அமைப்பைப் போல சுருங்கிவிட்டநிலையில் இருந்தாலும்,கடந்த 7 மாதங்களில் அதன் புதிய தலைவர்  ஈவி கே எஸ் இளங்கோவன், தமிழக அரசு மீது ஊழல் பட்டியல் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று புகார் அளிக்கும் அளவுக்கு சக்திப் பெற வைத்தார்.    

கிடைத்த இடைவெளியில், காங்கிரஸ் தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்ட காரணத்தால் அக்கட்சியிலிருந்து விலகி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாகச் சேர்த்து  முழுசக்தியை வெளிப்படுத்தி களத்தில் நிற்கிறார் ஜி.கே.வாசன். இந்தக் கட்சிகளைத் தாண்டி பார்க்கையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வழக்கம் போல மக்கள் போராட்டத்தில் கவனம்  செலுத்துவதால் தேர்தல் அரசியலில்  முக்கியத்துவம் இழந்து நிற்கின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவின் அன்பைப் பெற்று இருந்தாலும், அதன் தற்போதைய விருப்பம் அதிமுக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் அரசியல் களத்தில் அந்த அளவுக்கு சுறுசுறுப்பைக் கூட்டாமல் இருக்கிறது.புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி திமுகவின் குட் புக்கில் இடம்பெற்று அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.

வைகோ தலைமையிலான மதிமுக, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களை முன்னின்று நடத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.அதிலும் காவிரி நீர்ப் பிரச்னை,மீதேன் பிரச்னை,பொட்டிபுரம் நியுட்ரினோ  ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்த்தது என்று பல்வேறு போராட்டங்கள் மாநிலம் தழுவிய அளவில் நடத்தி மற்ற கட்சிகளை மிரட்சி அடையத்தான் செய்து இருக்கிறார்.

இன்னும் நிறைய சிறிய அளவிலான கட்சிகள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டையும்,அதேபோல திமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட சிறிய கட்சிகளும் களத்தில் தேர்தல் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் 2016 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல்  நடக்கவுள்ளது. இன்னும் சில மாதங்களில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் நிலையை வடிவமைத்துக் கொண்டு, தங்களுக்குள் அணியை அமைத்து தேர்தல் களம் காணவேண்டிய சூழல் நிலவுகிறது.

தமிழகத்தின் தனிப்பெரும் மக்கள் செல்வாக்கை தன்னகத்தே வைத்து, திமுக மற்றும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளை கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல், 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், இடையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் என்று 3 தேர்தலில் வெற்றிகளைக்  குவித்து அதிமுக தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அதனால் அதிமுகவுடன் தற்போது உள்ள சிறுசிறு கட்சிகளை இயக்கங்களைத் தவிர வேறு கட்சிகள் இணைய சாத்தியமில்லை.

ஆனால் இன்று விடுதலைப் பெற்ற ஜெயலலிதாவுக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வாழ்த்துக்களைத்  தெரிவித்து ஒரு புதிய அரசியல் கணக்கைத் தொடங்கியிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் ஏற்பட்ட நட்டத்தை வரும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈடுகட்டி லாபம் பார்க்க அகில இந்திய பாஜக தலைமை விரும்புகிறது.அதற்கு இப்போதிருந்தே பணிகளை விரைவுப் படுத்தியிருக்கிறது. அண்மையில் கூட தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் தேமுதிக,பாமக ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திப்போம்.எங்களோடு இணைவது குறித்து ஜி.கே.வாசன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆக தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கையில், ஜெயலலிதா விடுதலையால் அதிமுகவின் பார்வை, பாஜக மீது கனிந்தால் இரண்டு கட்சிகளும் கரம் கோர்க்கலாம்.அப்படி நடந்தால் விஜயகாந்தின் தேமுதிக,ராமதாஸின் பாமக ஆகியவற்றின் அரசியல் இடம் மாறுபடலாம். ஆனால்,  அன்புமணியை   முதல்வர் வேட்பாளராக அறிவித்த நாள் முதல் இன்று வரை பாமக தனித்து நிற்கும் பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்றே கூறிவரும் டாக்டர் ராமதாஸ், வரும் நாட்களில் எப்படி செயல்படுவார் என்பதும் கவனிக்கத் தக்கது.

கட்சிகள் நிலை குறித்து  கணக்கிட்டு அணி பிரிப்பது சற்று சிரமமானாலும், வரும் நாட்களில் கூட்டணிகள் தெளிவாகும். கடந்த 7 மாதங்களாக,  'ஜெயலலிதா மீண்டும் சிறை சென்றுவிடுவார். அதனால் அரசியலில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுவிடும். அதை நாம் நிரப்பிவிடலாம்' என்றே திமுக,பாமக,தேமுதிக,காங்கிரஸ் ,பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் தங்களின் திட்ட நிரல்களை முன்  வைத்து செயல்பட்டு வந்தன. ஆனால் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்துள்ளதால்,மீண்டும் ஜெயலலிதா  தமிழக முதல்வராக அரியணையில் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா, தற்போது தனக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாக கூறி, வாக்குகளை அறுவடை செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால், மீண்டும் முதல்வர் பதவியை ஏற்ற ஒரு சில மாதங்களிலேயே, ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் மீண்டும் ஒரு புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது.             

 

- தேவராஜன்      

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close