Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ. அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு? பதவி பறிப்பு பீதியில் அமைச்சர்கள்!

சென்னை: சொத்து வழக்கிலிருந்து விடுதலையானதை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெயலலிதா, தற்போதைய அமைச்சர்களில் பெரும்பாலானோரை கழட்டிவிட்டு விட்டு, செங்கோட்டையன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் பலரை அமைச்சரவையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை தீர்ப்பு நேற்று வெளியானதுமே, வருகிற வெள்ளிக்கிழமையன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறலாம் என்றும், அக்கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 17 ஆம் தேதியன்று முதலமைச்சராக பதவியேற்கலாம் என்றும் செய்திகள் வெளியாயின. ஆனால் இன்றுவரை தற்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ராஜினாமா எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஜெயலலிதா - பன்னீர் செல்வம் ஆலோசனை

இந்நிலையில் பன்னீர் செல்வம் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது ஜெயலலிதா முதல்வர் ஆவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா முதல்வரானால் அவர் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும். இந்த நிலையில் ஒரு மாநில அரசு 4 ஆண்டுகளை ஆட்சியில் பூர்த்தி செய்யாமல் இருந்தால் மட்டுமே, இடைத்தேர்தல் நடத்த வற்புறுத்த முடியும் என்றும், 4 ஆண்டுகளை கடந்து விட்டால் தேர்தல் நடத்த வற்புறுத்த முடியாது. கோரிக்கை மட்டும்தான் வைக்க முடியும் தேர்தல் ஆணைய வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் அதிமுக அரசின் ஆட்சி 4 ஆண்டுகளை கடக்க இன்னும் 11 நாட்களே உள்ளன. அதாவது வருகிர 23 ஆம் தேதியுடன் 4 ஆண்டு கால ஆட்சி நிறைவடைய உள்ளது. எனவே அதற்குள் ஏதாவது ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால்தான், 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்த வற்புறுத்த முடியும்.

எனவே அதற்கு ஏதுவாக எந்த தொகுதியில் போட்டியிடலாம், அதிமுக எம்.எல்.ஏ.க்களில் யாரை ராஜினாமா செய்ய வைக்கலாம் என்பது குறித்த ஆலோசனையும் அப்போது இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அண்மையில்தான் இடைத்தேர்தல் நடைபெற்றது என்பதால், தான் முன்னர் போட்டியிட்ட ஆண்டிப்பட்டி அல்லது வேறு ஏதாவது ஒரு தொகுதியை ஜெயலலிதா தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முன்கூட்டியே சட்டசபை தேர்தல்

இதனிடையே அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு காலம் உள்ளபோதிலும்,  முன்கூட்டியே தேர்தலை சந்திக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பினால் தமக்கு ஆதரவாக எழுந்துள்ள சாதகமான சூழல் தேர்தலில் தமக்கு வெற்றியை தேடித்தரும் என்று ஜெயலலிதா நம்புவதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரியாததால், தற்போதுள்ள 'இமேஜ்' உடன் முன்கூட்டியே தேர்தலை சந்திப்பதே சாதுரியமான நடவடிக்கை என்பதால், அதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

பன்னீர் செல்வம் ராஜினாமா எப்போது?

இந்நிலையில் இன்றைய ஆலோசனையை தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமையன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டவும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமையன்று பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை காலை பன்னீர் செல்வம் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வசதியாக தற்போது அமைச்சரவையில் இருக்கும் பெரும்பாலானவர்களை கழற்றி விட்டுவிட்டு, கட்சியின் பழைய தலைவர்கள் சிலரை, குறிப்பாக செங்கோட்டையன் போன்றவர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் தற்போதைய துணை சபாநாயகருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்றும், அவருக்குப்பதிலாக வேறொருவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக பலவீனமாக உள்ள சில தொகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் வகையில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் கிலி

இதனால் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்போது தங்களது பதவி தப்பிக்குமா? என்ற அச்சம் தற்போதைய அமைச்சர்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பீதியுடனேயே வலம் வருகிறார்கள்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ