Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்க்கிங்: கட்டண கொள்ளைக்கு கடிவாளம் போடப்படுமா?

சென்னையில் ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் லட்சத்தை தாண்டும். அதிலும் புறநகர மின்சார ரயில்கள் சென்னை மக்களுக்கு ஒருவரப்பிரசாதம்.

வீடுகளிலிருந்து இருசக்கர வாகனம் மூலம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதனால் ரயில், பேருந்து நிலையங்களின் அருகில் இருசக்கர வாகனம் பார்க்கிங் வசதிகள் உள்ளன. ரயில் நிலையங்களை பொறுத்தவரைக்கும் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் செயல்படுகின்றன. இதைத்தவிர தனியார் பார்க்கிங் இடங்களும் உள்ளன.
 

இத்தகைய பாக்கிங் இடங்களில், இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் பல்வேறு பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்கின்றனர். ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் இடங்களில் அதிகளவில் பெட்ரோல் திருட்டு நடக்கிறது. இதுகுறித்து யாரிடமும் முறையிட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். வாகன நிறுத்துமிட ஒப்பந்தகாரர், ஊழியர்களிடம் பெட்ரோல் திருட்டு குறித்து புகார் தெரிவித்தால் அதற்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார்கள். பெட்ரோல் திருட்டை தொடர்ந்து ஹெல்மெட் திருட்டும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கிறது. சில இடங்களில் இருச்சக்கர வாகனங்களின் உதிரிப்பாகங்களும் திருடப்படுகின்றன.

அடுத்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாகவும் சில இடங்களில் வசூலிக்கப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்டால் அடுத்த முறை வாகனத்தை அங்கு நிறுத்த அனுமதிப்பது கிடையாது. இதனால் பெரும்பாலானவர்கள் வேறுவழியின்றி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார்கள். வேலியே பயிரை மேய்ந்ததைப் போல திருட்டு சம்பவங்களில் சில வாகன காப்பகங்களை நடத்துபவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது.

இதுகுறித்து தேவை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், "வாகன காப்பகங்களில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இங்கு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு சொற்ப அளவிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதான் திருட்டுச் சம்பவங்களுக்கு முதல் காரணமாக இருக்கிறது. ஒரு வாகனத்திலிருந்து 100 மில்லி லிட்டர் பெட்ரோல் திருடினால் போதும். இதுபோன்று காப்பகத்தில் உள்ள 50 வாகனத்தில் திருடினால் அதன்மூலம் தினமும் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை கிடைக்கிறது. சில காப்பகங்களில் உதிரிபாகங்களும் திருடப்படுகின்றன. ரயில் நிலையங்களில் உள்ள காப்பகங்களில் இதுபோன்ற தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டு அவர்களது அனுமதியை ரத்து செய்யலாம். ஆனால் தனியார் நடத்தும் காப்பகங்களில் தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க காலதாமதமாகிறது" என்றார்.

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட கார் பார்க்கிங் வசதியில்லை. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இந்த நிலைமை என்றால் மற்ற ரயில் நிலையங்களில் நிலைமையை சொல்லித் தெரிய தேவையில்லை.
 

திருட்டு வாகனங்கள்

இந்நிலையில், இருசக்கர வாகன காப்பகங்களில் திருட்டு வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், "சென்னை போன்ற நகரங்களில் இருசக்கர  வாகனம், கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. தினமும் இதுசம்பந்தமாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அதில் ஒன்று அல்லது இரண்டு வழக்குகளில் மட்டுமே திருடப்பட்ட வாகனங்கள் கண்டுப்பிடிக்கப்படுகின்றன. மற்றவைகள் சில மாதங்கள் கழித்து பைசல் செய்யப்பட்டு விடுகின்றன. இதில் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அதற்கான தொகையை பெற்றுக் கொள்கின்றன.

சென்னை மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் திருடப்படும் இருசக்கர வாகனங்கள், ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த இடம் பாதுகாப்பு என்பதால் அதை திருடர்கள் தேர்வு செய்கிறார்கள். அங்கேயே நிறுத்தப்படும் வாகனங்கள், சில நாட்களுக்குப் பிறகு ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டு அங்கு விற்கப்படுகின்றன. இல்லையெனில் சென்னையில் புதுப்பேட்டை போன்ற இடங்களில், இரு சக்கர வாகனங்களை அடையாளமே தெரியாதளவுக்கு கழற்றி, உதிரிபாகங்களாகவே விற்றுவிடுகின்றனர். காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக புகார் தெரிவித்தால் முதலில் எங்களது சந்தேக பார்வை, வாகன காப்பகங்கள் மற்றும் புதுப்பேட்டை பகுதியில்தான் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு கூட,  தமிழகத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள்,  வெளிமாநிலங்களுக்கு ரயிலில் கடத்தப்பட முயன்ற போது பிடிபட்டன. எனவே, வாகன காப்பகங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை கண்டிப்பாக அதை நடத்துபவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எதையும் கண்டுக்கொள்ளவதில்லை. நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களின் விவரங்களையும் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு வாகன காப்பகங்களை நடத்துபவர்கள் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் வாகன திருட்டைத் தடுக்க முடியும்" என்றார்.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ