Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4 ஆண்டு கால அதிமுக ஆட்சி: சாதனையா... வேதனையா..?

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கு கிடைத்திட்ட திட்டங்கள், பயன்கள் என்ன என்ற கேள்வி பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது.

கடந்த 2011 ஆம் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமர்ந்த போது உள்ளூர் தமிழர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் வெளிநாடுவாழ் தமிழர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில்  மின்வெட்டு பிரச்னை தொடங்கி, நில அபகரிப்பு பிரச்னை, மீனவர்கள் பிரச்னை வரை பல்வேறு பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு இல்லாத நிலை காணப்பட்டது.

ஆனால் ஆடசிக்கு வந்து  4 ஆண்டுகள் நிறைவடைந்து சந்தித்துள்ள வேளையில் மக்களின் மனம் அறிந்து அதிமுக ஆட்சி நடந்ததா இல்லையா என்று அனைத்துத் தரப்பினரின் மனதில் எழத் தொடங்கிவிட்டது. 

2011 ல் மே மாதத்தில் தமிழக முதல்வராக ஆட்சியில் ஜெயலலிதா அமர்ந்தபோது கிடைத்த வரவேற்பு அடுத்த சில மாதங்களில் மக்களிடம் இருந்து அகன்று விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.முக்கியமாக பதவியில் இருக்கும்போதே ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்து கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா இல்லையா என்ற புலம்பல்கள் அடங்கிய பாடில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து, பெங்களூரு  பரப்பன அக்ரகார சிறைக்குள் ஜெயலலிதா அடைக்கப்பட்ட பின்னர், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.அவரை முதல்வராக அரசு இணையதளமும் அவரின் கட்சியினரும் இன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை பல நிகழ்வுகள் காட்டுகின்றன.    

2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்து நடைமுறைக்கு வந்தும் வராமலும் நிறைய திட்டங்கள் உள்ளதால் அனைத்துத் தரப்பினருமே அதிருப்தி அடைந்துள்ளனர்.

உதாரணமாக, ," வேளாண் கருவிகள் இலவசமாக வழங்கப்படும். வேளாண் இடு பொருள்கள், தரமான விதைகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். ஆன்-லைன் வர்த்தகர்களால் திட்டமிட்டு ஏற்றப்படும் விலைவாசி உயர்வு தடுக்கப்பட்டு, அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் விலைவாசியும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்று தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டனவா என்பது விவாதத்தை எழுப்பியுள்ளது.

மேலும், "அனைத்து விவசாய விளை பொருள்களுக்கும் விலை நிர்ணயிக்கப்படும். வறுமைக் கோட்டிற்குக்  கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட, மூன்று சென்ட் இடம் அளிக்கப்படும்.கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அவதிப்படும் கடனாளிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும் " என்ற வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கல்வியில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும் எனக்கூறி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.ஆனால் இன்றும் இலக்கு நிர்ணயித்தது போல முழுமையாக வழங்கப்படவில்லை. தனியார் பள்ளிகளின் கல்வி தரத்திற்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது அப்படியே நிற்கிறது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க தனி சிறப்பு நடவடிக்கைகள் என்று ஜெயலலிதா கூறியதும் ஒரு கனவு போல மறைந்து போய்விட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்கள் பட்டியல் ஆயிரங்களில் நீண்டு கொண்டே செல்கிறது.இதற்காக  வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை தடுக்க, தற்காப்பு கலை (மார்ஷியல் ஆர்ட்) பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில், 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது பரணில் கிடக்கிறது.

அறிவித்து 4 ஆண்டுகள் முடியும் நிலையிலும் இதுபோன்ற சில திட்டங்களை நிறைவேற்ற இன்னும் எந்த முயற்சியும் அதிமுக அரசு எடுக்கவில்லை என்பது கவலையளிக்கும் ஒன்றாகும்.

அதே போல அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்குத் திட்டம் 2023. இது அறிவிக்கப்படும் போது,பொருளாதார நிபுணர்கள் மகிழ்ந்து வரவேற்றனர். தமிழகத்தை 2023-க்குள் சிங்கப்பூராக மாற்றும் கனவுடன் 2011-12-ம் நிதி ஆண்டில்  ஜெயலலிதா அறிவித்தார். வெளிநாடுகளின் அதிக முதலீடுகள், தனிநபர் வருமான உயர்வு என இமாலய இலக்குகளை கண்முன் நிறுத்தும் இந்த திட்டம் இப்போது ஏட்டளவிலேயே நின்று போயுள்ளது.
 
கடந்த 2011ஆம் ஆண்டு  நிலவரப்படி சுமார் 73 ஆயிரம் ரூபாயாக இருந்த தனிநபர் ஆண்டு வருமானம் வரும் 2023 ஆம் ஆண்டில்  நான்கரை லட்சமாக உயரும் என்கிறது தொலைநோக்குத் திட்டம். அதற்கு மாநிலத்தின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 11 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் முளைவிடாமலே இருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
 
தமிழகத்தில், நோக்கியா தொழிற்சாலை,  அதைப் பின்தொடர்ந்து ஃபாக்ஸ்கான் ஆலைகள்  மூடப்பட்டன. பெருந்துறை ஆலைத் திட்டத்தை கோககோலா நிறுவனமே கைகழுவியது. ஃபோர்டு வாகன நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை தமிழகத்தில் அமைக்காமல் குஜராத்தை தேர்வு செய்துள்ளது.  வாகன நிறுவனங்களான இசுசூ, ப்பூஜோ ஆகியவை ஆந்திரா மாநிலத்தில் தொங்கப்பட உள்ளன.

சென்னையில் ஆலை உள்ள செயின்ட் கோபின் கண்ணாடி நிறுவனம், தனது அடுத்த ஆலையை ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்க ராஜஸ்தானை தேர்வு செய்தது. போதிய மின்உற்பத்தி இல்லாதது, துறைமுகத்தை எளிதில் அடைய முடியாமல் மதுரவாயில் - துறைமுக மேலடுக்கு சாலை திட்டத்தின் முடக்கம் ஆகியவை தொழில் துறையை தமிழகம் குறித்து மாற்றி யோசிக்க வைத்துள்ளது. தமிழகத்திற்கு வர உள்ள திட்டங்கள் எல்லாம் இப்படி பல்வேறு காரணங்களால் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன.
 
இத்தகைய சூழ்நிலையில், தொலை நோக்கு திட்டத்துக்கேற்ப வளர்ச்சி இல்லாத நிலையில், கடைசி ஓராண்டில் மட்டும்  தொழில் வளர்ச்சி வேகம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக தமிழக அரசில் நிலவிய மந்த நிலை, அரசியல் ஸ்திரமின்மை, அரசு அனுமதிகளில் தாமதம் என நீளும் குழப்பங்களால்,  சென்னையைக்  கைவிட்டு, 55 கிலோ மீட்டரில் உள்ள ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் அடைக்கலமாகி வருகின்றன பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள்.
 
இத்தனைக்கு இடையிலும் 2013-14-ல் 7.29 சதவிகித வளர்ச்சியை எட்டியதாக தமிழக அரசின் புள்ளிவிவரம் கூறும் நிலையில், தொலைநோக்கு திட்டம் தொலைவிலேயே நிற்கிறது என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

மொத்தத்தில் நான்கு ஆண்டு முடிவில் அதிமுக ஆட்சி வாக்களித்த மக்களுக்கு நன்மைகள் அளித்து சாதனை படைத்ததா அல்லது வேதனை தந்துள்ளதா என்பது இன்னும் சில மாதங்கள் கடந்து 2016 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளிக்க உள்ள தீர்ப்பில் தெரிந்துவிடும்.

  

  - தேவராஜன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close