Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முள்ளிவாய்க்கால்: அழுது தீர்ப்பதற்கே 6 ஆண்டுகள் காத்திருப்பு...!

லக அரசியல் வரலாற்றில் பாரம்பரியம் மிகுந்த தமிழ் இனம், ஆயுதங்களுக்குப் பலி கொடுக்கப்பட்டு இன்றோடு ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.

ஈழத் தமிழரென்றும், இலங்கைத் தமிழரென்றும், தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகள் என்றும் அழைக்கப்பட்ட மக்கள், கடல் தாயின் மடியில் கொடூர போர் ஆயுதங்களுக்கு இரையாக்கப்பட்ட கொடிய நாள் அது. அரசு மனித வேட்டையாடினால் எவ்வளவு  கொடுமை காட்சிகள் அரங்கேறுமோ அத்தனையையும் இம்மியும் பிசகாமல் ரத்தவெறி கொண்ட ராஜபக்சே அரசு  நிகழ்த்தி, தனது  மிருக குணத்திற்கு அங்கீகாரம் வழங்கிக்கொண்ட  கொடும் நிகழ்வுதான் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியின் தமிழினப் படுகொலை.

இந்த கொடூரத்திற்கு சிங்கள அரசு எந்த விதமான விளக்கம் கொடுத்தாலும் அது கொல்லப்பட்ட தமிழர்களின் மீதான இனவெறித் தாக்குதலாகவே இன்றும் தெரிகிறது. நிகழ்வு நடந்து 6 ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் கொலை வாய்க்காலாகவே தெரிகிறது.

சிங்கள அரசால் லட்சக் கணக்கான மக்கள், போராளிகள், பாதிரிமார்கள்  என்று   பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதைப் போல, உயிர் தப்பியவர்களின் உறவுகள், நிகழ்த்தப்பட்ட கொடுந்துன்பத்தின் வலியை அழுது அரற்ற கூட அனுமதியில்லாமல் இருந்த பெருந்துன்பம் ஈழத் தமிழனின் வாழ்வில் இருண்டுள்ளது.

இந்த நிலையில்,நேற்று முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலைக்கு இரையானவர்களின் உறவுகள்,படுகொலையில் இருந்து எஞ்சியவர்கள் கடல் மணலில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.எந்த இடத்தில் பிணமாக்கப்பட்டார்களோ அந்த இடத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக  அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடந்து இருக்கிறது.

நூற்றுக் கணக்கான மக்கள், முள்ளி வாய்க்காலின் மணற் பரப்பில் புதைக்கப்பட்ட உறவுகளின் சுவடுகளைத் தேடி பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய அழுது, தங்களின் இறுதி அஞ்சலியை விதைத்து இருக்கிறார்கள்.

மிகவும் வெளிப்படையாக தங்கள் நாட்டின் மக்கள் மீதே ஆயுதத் தாக்குதல் மூலம் கொன்றொழித்த ராஜபக்சே அரசு, 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்த ஆண்டுகளில் மே மாதம் 18 ஆம் தேதியை தீவிரவாதத்தின் வெற்றி நாளாகக் கொண்டாடி, தமிழர்களின் மனதை மேலும் மேலும் புண்ணாக்கி புளகாங்கிதம் அடைந்தது.

ஆனால் இப்போதைய மைத்திரி பால சிறிசேன அரசு   மே மாதம் 18 ஆம் தேதியை  நினைவேந்தல் நாளாக அனுசரிக்க அனுமதியளித்து, ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறுதலை விசிறியடித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உருத்திரபுரம் கத்தோலிக்க ஆலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. அதில் கடந்த 2009 மே 18ஆம்தேதி கொல்லப்பட்ட அருட் தந்தை சரத்ஜீவன் மற்றும் ஏனையோருக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் மட்டுமில்லாமல் வேறு பல மாவட்டங்களிருந்தும் வந்த அருட் தந்தைகளும் மற்றும் அனைத்து மதத்  தலைவர்களும் பங்கேற்றனர்.  முதல் முறையாக அந்த மக்கள், இறந்த தமது உறவுகளுக்கு மெழுகு வர்த்தி ஏற்றி, கதறி அழுது,  மலர் அஞ்சலி செலுத்தியது நெஞ்சைக் கனக்க வைக்கும் நிகழ்வாகும்.

இந்த சூழலிலும் இலங்கை அரசின் போலீசார் சுமார் 20பேர் நினைவேந்தலை கண்காணித்துக் காவல் கடமையாற்றினர். செய்தி சேகரிக்க வந்த வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களின் தகவல்களைத் திரட்டி கண்டிப்பு காட்டியுள்ளனர்.

பலியிடப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் வாய்விட்டு அழுது தங்களின் சோகத்தை ஆற்றிக்கொள்ளும் வாய்ப்பே, 6 ஆண்டுகள் கழித்துதான் கிடைத்துள்ளது.

முழுமையான சம உரிமைகள் வழங்கப்பட்டு  எந்த வகையிலும் துன்பங்களோ இழிவோ நேராமல் சொந்த மண்ணில் வாழும் தகுதியைப் பெற ஈழத்தமிழர்களுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

 - தேவராஜன்

 



 

எடிட்டர் சாய்ஸ்