Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பறிக்கப்பட்ட பதக்கம் சாந்திக்கு திரும்ப கிடைக்குமா...? போராடும் சிருஷ்டி!

கோபி சங்கர்- மூன்றாம் பாலினத்தவருக்காக ‘சிருஷ்டி' மதுரை’ என்ற அமைப்பை நடத்தி வரும்கிறார். மனித இனத்தில் ஆண், பெண்ணைத் தவிர 25 வகைப் பாலினங்கள் இருப்பதாக ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தப் பாலினங்களுக்கு பால்நடுனர், இருனர், முழுனர், பாலிலி என்று பல பெயர்களை சூட்டியுள்ளார். இவரது முயற்சியால் தற்போது ஆண், பெண் தவிர இந்த 25 வகைப் பாலினங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் வசதி ஃபேஸ்புக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவர் சமீபத்தில் கையில் எடுத்திருப்பது புதுக்கோட்டை சாந்தி விவகாரத்தை...

தடகளப்போட்டியில் சாதனைகள் படைத்த சாந்தி, சர்வதேச அளவில் இழந்த அங்கீகாரத்தை திரும்ப பெற வேண்டியும், அவர் வழிகாட்டுதலில் தமிழகத்தில் பெரிய அளவிலான தடகள பயிற்சி மையத்தை துவக்கி ஏழை எளிய பிள்ளைகளை பெரிய வீரர்களாக்க வேண்டும் என்றும் ஏற்பாடுகளை செய்துவருகிறார்.

நாம் கோபிசங்கரிடம் பேசினோம்.

‘’மதுரை செல்லுரை சேர்ந்த நான் ராமகிருஷ்ண மடத்தில் துறவியாக பயிற்ச்சி எடுத்து வரும்போதுதான் சமூக விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்ததும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அழகியல் மற்றும் நுண்கலை பட்டப்படிப்பில் சேர முடிவெடுத்தேன். அங்கு விண்ணப்ப படிவத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்தது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த நான் என்னுடைய அடையாளத்தை மறைத்துப் படிப்பில் சேர விரும்பவில்லை. உடனே காரியத்தில் இறங்கினேன், பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்னை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நான், அது தொடர்பாக பல பல்கலைக்கழக கருத்தரங்குகளிலும் பேசியிருக்கிறேன். 2 வருடங்களுக்கு முன், கல்கத்தா அருகே ஒரு பல்கலைக்கழக கருத்தரங்கில் பங்கேற்றபோது, அங்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டது. கல்வி நிலையங்களில் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்னையை அந்த மாணவர்களிடம் தெரிவித்தேன்.

தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க 4 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வந்துவிட்ட நிலையை டெல்லி மாணவ பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினேன். 'நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள  பிரபலாமான மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்னமும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமை மறுக்கப்படுவது வேதனை தருகிறது' என முறையிட்டேன். அது மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. மாணவர் பேரவையினர் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண்ணைத் தவிர, பிறர் என்ற வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதனால், நான் மட்டுமின்றி நிறைய மாணவர்கள் தங்கள் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றவர்,

‘’என் போன்றவர்களின் உயர் கல்விக்கு தடையாக இருந்த மாற்றுப்பாலினர் என்ற அடையாளத்தை எந்த இடத்திலும் அங்கீகரிக்க வைக்க, என்னால் முடிந்தது. ஆனால், இதே பாலின பிரச்னைதான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த புதுக்கோட்டை சாந்தி சவுந்திரராஜனனின் வாழ்க்கையை சில காலங்களுக்கு முன்பு புரட்டி போட்டது. ஆசிய அளவிலான தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்ப்பெண்ணான சாந்தி, தேசிய அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சர்வதேச போட்டிகளில் 11 பதக்கங்களையும் வென்றார்.  2006ல் தோஹாவில் நடந்த ஆசிய அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற பிறகுதான், அவருக்கு பாலியல் அடையாளத்தில்  சர்ச்சை ஏற்பட்டது.

பாலினப் பரிசோதனை செய்த மருத்துவக்குழுவினர் அவரது உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாகக் கூறியதால், அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாதபடி தடையும் விதிக்கப்பட்டது.

அதற்குப்பின் அவர் பலவித நெருக்கடிகளுக்கும் அவமானத்துக்கும் உள்ளானார். மத்திய மாநில அரசு விளையாட்டு அமைப்புகள் அவரை கைவிட்டன. சாதனை படைத்தபோது தமிழக அரசு வழங்கிய ரூ.15 லட்சம் பரிசுத்தொகையை வைத்து தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் ஒரு தடகளப் பயிற்சி மையத்தைத் தொடங்கியவர், ஏழை, எளிய குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தார். ஆனால், வறுமை காரணமாக அந்த மையத்தை அவரால் நடத்த முடியாமல் போய்விட்டது. வெறுத்துப்போய் அவர் செங்கல் சூளையில் வேலை செய்தார். மனதளவில் நொறுங்கிப்போனார்.

ஆனால், இதேபோன்ற பிரச்னையில் சாந்தியைப்போலவே ஆப்ரிக்காவில் மோன்யோ என்ற பெண்ணிடம் பதக்கம் பறிக்கப்பட்டது. ஆனால், அந்த நாட்டை சேர்ந்தவர்கள், தொடர்ந்து போராடினார்கள். அந்த பெண்ணை தங்கள் நாட்டின் கவுரவமாக பார்த்தார்கள். பறிக்கப்பட்ட பதக்கத்தை திரும்ப வழங்கவில்லை என்றால், தங்கள் நாடு உலகில் எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளாது, தூதரக உறவு வைத்துக்கொள்ளாது என்று அந்த பெண்ணுக்காக நின்றார்கள்.  இதில் ஆதிக்க நாடுகளின் சதி உள்ளது என்று தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டார்கள். கடைசியில் அவருக்கு பதக்கம் திரும்ப வழங்கப்பட்டது. விளையாட விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. ஆனால், அதுபோல் சாந்திக்காக நம்நாட்டில் யாரும் குரல் கொடுக்கவில்லை. காரணம், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான்.

இதில் கேரள விளையாட்டு வீரர்களின் அரசியலும் இருக்கிறது. இன்று இந்தியாவில் செயல்படும் முக்கியமான விளையாட்டு பயிற்சி மையங்கள் கேரளாவில்தான் அதிகம் உள்ளன. மத்திய விளயாட்டு துறை உயரதிகாரிகளாக மலையாளிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். சாந்தி அங்கு சென்று முறையிட்டபோதேல்லாம் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.  இன்று பல நாடுகளில் விளையாட்டு கல்லூரிகளில் சாந்தியை பற்றி பாடம் வைத்திருக்கிறார்கள். பல விளையாட்டு கழகங்களில் சாந்தியின் படத்தை வைத்திருக்கிறார்கள். விக்கிப்பீடியாவில் தாய், சவுமி மொழியில் சாந்தியை பற்றி தகவல் உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு இடத்திலும் சாந்தியின் பெயர், அவரின் சாதனையை வரவிடாமல் செய்துள்ளனர். விளையாட்டின் மேல் கோபப்பட்டு கஷ்டமான கூலி வேலைகள் பலவற்றை பார்த்து வந்த சாந்தி, தன் வாழ்க்கை இப்படியே போய்விடக்கூடாதென்றும், தன்னுடைய விளையாட்டு நுணுக்கங்கள் மற்றவர்களுக்கு சென்று சேரவேண்டுமென்று பெங்களுர் பயிற்சி மையத்தில் தேர்வு எழுதி, தடகளப் பயிற்சியாளரானார்.

மத்திய விளையாட்டு ஆணையம், போனால் போகிறதென்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மத்திய விளையாட்டு மையத்தில் தற்காலிகப் பயிற்சியாளராக பணி கொடுத்திருக்கிறார்கள். மிகவும் குறைவான சம்பளம். சொந்த ஊரை விட்டு, இங்கு தங்கி பயிற்சி கொடுத்து வருகிறார். இந்த வேலையை நிரந்தரமாக்க சொல்லி பலமுறை கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வானதி சீனிவாசன் மூலமாக டெல்லியில் விளையாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டோம். சாந்திக்காக உதவுவதாக சொன்னார்கள். ஆனால், அங்குள்ள கேரளா அதிகாரிகள் இதற்கு தடையாக இருக்கிறார்கள். அதனால் ஒரு முடிவெடுத்து விட்டோம், பொதுமக்களிடம் சாந்தியின் பிரச்னையை விளக்கி, குறைந்தபட்சம் ஒரு ரூபாய் என்ற கணக்கில்  நன்கொடை வசூலிக்கப்போகிறோம். மொத்தம் இருபதுகோடி வேண்டும். அதை வைத்து தென் மாவட்டத்தில் சாந்தியின் தலைமையில் தடகளபயிற்சி மையம் துவக்க உள்ளோம். ஏழை,எளிய கிராமப்புற திறமைசாலிகளுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்து, சாந்தி பயிற்சி கொடுப்பார். அவரிடம் பறிக்கப்பட்ட பதக்கங்கள் அவரிடம் பயிற்சி எடுத்தவர்கள் மூலம் பெறப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்’’ என்றார்.

நாம் மயிலாடுதுறையில் இருக்கும் சாந்தியிடம் பேசினோம். 

‘’ஆமாம் சார், சிருஷ்டி அமைப்பு எனக்கு உதவுகிறார்கள். எனக்கு ஏற்பட்ட அநீதியை அவர்கள் எல்லோரிடமும் விளக்குகிறார்கள். தரமான பயிற்சி மையத்தை உருவாக்கவேண்டும். நான் இப்போதும் பல வீரர்களை உருவாக்கி வருகிறேன். மாநில, தேசிய அளவில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இவர்கள் மூலம் சர்வதேச தடகளப் போட்டியில் நிச்சயம் கோல்ட் ( Gold)  அடிப்பேன்’’ என்றார் சோகத்திற்கிடையிலும் தன்னம்பிக்கையுடன்.


-செ.சல்மான்

படங்கள் : பா.காளிமுத்து
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close