Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுகவில் குழப்பம்... திமுகவில் தடுமாற்றம்!

மிழக அரசியல் சூழல் பரபரப்பு காட்சிகளுடன் விறுவிறுப்பாகியுள்ளது.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பெற்றுள்ளதால் ஆளும் கட்சியான அதிமுக பெரும் உற்சாகம் அடைந்திருந்தாலும்,   அக்கட்சியின் தலைமையிடத்தில் அது இல்லை என்றே கூறப்படுகிறது.

சட்ட சிக்கல் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால்  தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிற்கு மறுதினமே,  தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றிருக்கக் கூடும்.ஆனால் அவ்விதம் நடக்காமல் முதலில் 17 ஆம் தேதி என்றும், பின்னர் 22 ஆம் தேதியில் அவர் முதல்வராகப் பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.

அதே நேரத்தில் இவ்வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டவர்களை விடுவித்து, கர்நாடக உயர்நீதிமன்ற  நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவை நாளை தான் கூடி ஆலோசித்து முடிவெடுக்க உள்ளது. இதன் காரணமாகத்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின்  பதவி ஏற்கும் விழா இன்னும் தள்ளிப் போனது.

குழப்பம் அதிமுக

ஒருபுறம் தொண்டர்கள் நினைத்தது நடக்கும் என்று ஜெயலலிதா அறிக்கை விட்டாலும், அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எல்லாமே திரைமறைவு ரகசியமாகவே நடைபெற்று வருகின்றன.

நேற்று மாலை கூட, ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கும்  விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு  ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் மற்றும் தலைமைச்  செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் ஜித்தேந்திரநாத், போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.  அப்போது வரும்  22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப் பட்டிருக்கிறது.

ஆனாலும் மேல்முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவெடுத்துவிட்டால், ஜெயலலிதா பதவியேற்பது தொடர்பான முடிவில் மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

தடுமாறும் திமுக

அதிமுகவின் நிலை இப்படி இருக்கிறது என்றால் திமுகவின் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.பல்வேறு தடுமாற்றங்களுடனும் வித விதமான ஆலோசனைகளுடனும் திமுக அரசியல் களத்தில் தடுமாறுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பெரும் பங்காற்றி அவருக்கு சட்ட ரீதியிலான தண்டனை பெற்றுத் தர மிகுந்த போராட்டம் நடத்தியது.ஆனால் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்துள்ளதால் பெரும் கலக்கமே திமுகவுக்கு ஏற்பட்டுள்ளதை அண்மைக்கால அரசியல் சந்திப்புகள் உறுதிப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாகத்தான் மேல்முறையீடு செய்யுங்கள் என்று கர்நாடக அரசை திமுக தலைவர் கருணாநிதி  விடாது வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் நாற்காலியில் வந்து அமர்ந்துவிட்டால், அது தங்களுக்கு அரசியல் ரீதியாக பின்னடவை ஏற்படுத்தி விடும் என்பதால்தான், 22 ஆம் தேதி நெருங்க நெருங்க கருணாநிதி பதற்றமடைய தொடங்கி உள்ளார். அதேபோன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ் போன்ற தலைவர்களும் இதே மன நிலையில்தான் உள்ளனர். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதற்கொண்டு எதிரும் புதிருமாக இருந்து வரும் கட்சிகள்  திமுக மற்றும் பாமக. ஆனால் தற்போது திமுகவின் பொருளாளர் ஸ்டாலின், பாமகவின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி,மற்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை இல்லம் தேடி நேரில் சந்தித்தார். தனது சகோதரர் மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தே ஸ்டாலின் இந்தச் சந்திப்புகளை நடத்தினார் என்று விளக்கம் தரப்பட்டாலும், அரசியலில் இன்னொரு விளக்கம் தரப்படுகிறது.

வடநாட்டு அரசியல் தலைவர்கள் கட்சி மாச்சரியம் இல்லாமல் விழாக்களில் கலந்து கொள்வார்கள்; தமிழகத்தில் அந்த மாதிரியில்லை அதனை ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள். இது ஓரளவுக்கு ஏற்புடையதுதான் என்றாலும், இந்த சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று சொன்னால், அதனை திமுகவினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பல்வேறு அறிக்கைகளின் ஊழல் கட்சி திமுக என்றும் தமிழகத்தைச் சீரழித்ததில் திமுகவுக்கும் பங்குண்டு என்று ராமதாசும், அன்புமணியும் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வருபவர்கள். அதில் ஒரு படி மேலே போய் அன்புமணி,  திமுக மக்களுக்கு என்ன செய்தது என்று என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று ஸ்டாலினுக்கு  சவாலே விட்டார்.அதற்கு ஸ்டாலின் தகுதி உள்ளவர்களுடன்தான் விவாதிப்பேன் என்றார்.

இந்த மோதலுக்கு இடையேதான், ஸ்டாலின் திருமண அழைப்பிதழை பாமகவின் தலைமைக்குக் கொடுத்துள்ளார். இதன் பின்னணியில் அரசியல் காரணம் பவ்யமாக ஒளிந்துள்ளது. அதனால்தான் இருவரின் சந்திப்பிற்குப் பிறகு அன்புமணி `இந்த சந்திப்பால் கூட்டணி ஏற்படாது.திமுகவை எதிர்ப்பதில் பாமக பின்வாங்காது.எடுத்த அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருப்போம்` என்று தனது முக நூல் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா வழக்கில் திமுக எதிர்பார்க்காத தீர்ப்பு வந்துள்ளது என்பதால் அரசியலின் போக்கை எப்பாடுபட்டாவது மாற்றிக் காட்ட வேண்டும் என்று அக்கட்சித் தலைமை முடிவு செய்து காய்களை நகர்த்தி வருகிறது.

இதற்கான பலன்கள் எதிர்காலத்தின் கைகளில்தான் இருக்கிறது. தனது தலைமைக்கு பாமக தமிழக அரசியல் இயக்கங்களை அழைத்து வரும் காலத்தில்,ஸ்டாலின் நேரில் சென்று இருவரையும் சந்தித்து இருப்பது முக்கியத்துவமானதுதான் என்றாலும்,  அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுடன் இனி ஒருக்காலும் கூட்டணி இல்லை என்ற பாமகவின் நிலைப்பாடு மாறுமா என்பது வரும் நாட்கள்தான் விடை சொல்லும்.

இது ஒருபுறம் இருக்க அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து சில தினங்கள் ஆகிவிட்டபோதிலும், இன்னமும் ஆட்சியின் சாதனை குறித்த அரசு விளம்பரங்கள் ஏதும் நாளிதழ்களில் கண்ணில்படவில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வராக ஜெயலலிதா அமர்ந்த நாளில் இருந்து நாள்தோறும் அரசியல் நிகழ்வுகள், அரசு நிகழ்வுகள் செய்தித்தாள்களில் விளம்பரங்களாகப் பரபரக்கும். ஆட்சி அமைந்த நாளின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும்  சாதனை விளம்பரங்கள் செய்தி ஊடகங்களில் பெரும் பொருட்செலவில் செய்யப்படும்.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை விளம்பரங்கள் அரசு சார்பில் செய்யப்படவில்லை. இன்று அல்லது நாளை இதற்கான நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக ஆட்சியின் சாதனை குறித்து அரசு விளம்பரம் செய்ய தாமதம் ஆகியிருப்பது இதுவே முதல் முறை.

அதே சமயம் நாளை கர்நாடக அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதைப் பொறுத்தே அதிமுகவின் அரசியல் போக்கு அமையும். அதன் அடிப்படையிலேயே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் காய்நகர்த்தல்கள் இருக்கும்.

 

- தேவராஜன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ