Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவிழும் சரக்கு ரயில்கள்... அதிகாரிகள் கோடிகளை அள்ளியது எப்படி?

திருச்சி பகுதிகளில் அடிக்கடி சரக்கு ரயில்கள் கவிழ்வது வாடிக்கையாகிவிட்டது. நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து உரம் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று திருச்சியில் தடம் புரண்டது.
 

 

சுமார் 20 பெட்டிகளில் உரம் ஏற்றி வந்த அந்த ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்போ அல்லது பலத்த சேதமோ ஏற்படவில்லை. திருச்சியின் குட்ஷெட் யார்டு அருகே குறித்த ரயில் வந்த போதே ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகித் தடம் புரண்டுள்ளன.
 
ரயில் ஓட்டுனர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தியதுடன், உயர் அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து வந்த திருச்சி ரயில்வே உதவி மேலாளர் மற்றும் ஊழியர்கள் எந்திரங்களின் உதவியுடன் பெட்டிகளை நிமிர்த்த முயன்றனர். 6 மணி நேர போராட்டத்திற்குபிறகு பெட்டிகள் தண்டவாளத்தின் மீது நிமிர்த்தப்பட்டதுடன் பின்னர்  உரிய இடத்தில் உர மூட்டைகளும் இறக்கப்பட்டன.

இதேபோல் கடந்த சில வருடங்களில் 5 முறைக்கும் மேல் ரயில் கவிழ்ந்துள்ளது. இப்படியிருக்கும் நிலையில் திருச்சி சரக்கு ரயில் போக்குவரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு படை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், திருச்சி குட்ஷெட்டில் எடை அளவிடும் கம்ப்யூட்டர்  அறைக்கு சீல் வைத்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். விசாரணையில், இந்த ஊழலுக்கும், சரக்கு ரயில்கள் திருச்சியில் அடிக்கடி கவிழ்வதற்கும் தொடர்பு உள்ளது அம்பலமாகி உள்ளது. அனுமதிக்கப்பட்ட மற்றும் பில்லில் குறிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றப்பட்டு வரும் சரக்குகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தங்களுக்கு வசூலித்துக்கொண்ட அதிகாரிகளின் தகிடுதத்தங்களால்தான், அதிக பாரம் தாங்காமல் சரக்கு ரயில்கள் அடிக்கடி திருச்சியில் தடம் புரள்வது வாடிக்கையாகிவிட்டது என தெரியவந்துள்ளது.

திருச்சி குட்ஷெட் யார்டில் சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படும் நிலக்கரி, அரிசி, நெல் மூட்டைகள், சிமெண்டு மூட்டைகள் உள்ளிட்டவைகளை எடையிடுவதற்காக நவீன கம்ப்யூட்டர்  எடை அளவிடும் கருவி உள்ளது. குட்ஷெட் யார்டில் தண்டவாளத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது இக்கருவி. இதன் அருகே தனியாக சிறிய அறை உள்ளது. இந்த அறையில் கம்ப்யூட்டர் மூலம் எடை கணக்கிடப்படும்.
 

 

சரக்கு ரயில்கள் இந்த கருவியுள்ள தண்டவாளத்தின் வழியாக கடந்து செல்லும்போது அந்த தனி அறையில் உள்ள  கம்ப்யூட்டரில் எடை தெரியும். இதனை ரயில்வே ஊழியர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். எடை கருவியை தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் பொருத்தினர். பராமரிப்பு பணியையும் அவர்கள் மேற்கொண்டனர். எடை கணக்கிடும் பணியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டனர்.
 
திருச்சி கோட்டத்தில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து தனியார் நிறுவனங்கள் நிலக்கரி இறக்குமதி செய்து சரக்கு ரயில்களில் கொண்டு செல்வார்கள். இதேபோல திருச்சி வழியாகவும் சென்னை, கரூர், மதுரை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சரக்கு ரயில்கள் மூலம் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
 
இந்த ரயில்களில் சரக்குகள் ஏற்றி வரும்போது ஏற்கனவே எடையிடப்பட்ட அளவு குறிக்கப்பட்டிருக்கும். இருப்பினும் திருச்சி வழியாக கடந்து செல்லும் போது குட்ஷெட் யார்டில் எடை கணக்கிடப்பட்டு அளவிடப்படும். இந்த நிலையில் சரக்கு ரயில் போக்குவரத்தில் நாடு முழுவதும் முறைகேடு நடந்திருப்பதாக சமீபத்தில் பெரும் புகார் எழுந்தது. இதன்பிறகு நடந்த விசாரணையில் திருச்சியிலும் சரக்கு ரயில் போக்குவரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைகேடுகள் தொடர்பாக திருச்சி குட்ஷெட் யார்டில் உள்ள எடை அளவிடும் கம்ப்யூட்டர்  அறைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர், "திருச்சி குட்ஷெட் யார்டில் எடை அளவிடும் கருவியில் எடையை குறைத்து காட்டும் அளவில் கம்ப்யூட்டர் பில் மென்பொருளை பொருத்தி உள்ளனர். இதனால் அளவுக்கு அதிகமாக எடை இருந்தாலும் குறிப்பிட்ட அளவு எடையை மட்டும் காட்டி பதிவு செய்து உள்ளது. இதில் காரைக்காலில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதில்தான் அதிக முறைகேடு நடந்துள்ளது.
 
தனியார் நிறுவனத்தினர் மொத்தம் 2 ஆயிரம் டன் எடையுள்ள நிலக்கரிகளை கொண்டு செல்வதாக ரயில்வே நிர்வாகத்தினரிடம் தெரிவித்து விடுவார்கள். இதற்கு கட்டண தொகை, கொண்டு செல்லப்படும் தூரத்திற்கு கட்டணம் ஆகியவை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால் வாகனங்களில் ஏற்றும்போது கூடுதலான சரக்குகளை ஏற்றி விடுகின்றனர். இதனை வரும் வழியில் சோதனை செய்து கணக்கிடும்போது கூடுதல் தொகை வசூலிக்க வேண்டும். ஆனால் கூடுதல் எடை இருந்தாலும் குறிப்பிட்ட அளவே எடையை காட்டி உள்ளது.  எடை மட்டும் குறைவாக பதிவு செய்துவிட்டு சில அதிகாரிகள் இதில் கொள்ளை கொள்ளையாய் பணத்தை கொள்ளையடித்தனர்.

பலவருடங்களாக  நடக்கும் இந்த முறைகேட்டில் அரசுக்கு பல கோடி இழப்பு. கூடவே எடையை குறைத்து காட்டுவதால் அதிக எடையோடு சரக்கு வந்திருப்பதால் பல முறை சரக்கு வாகனங்கள் கவிந்துள்ளது. இதனால் திருச்சி ரயில்வே கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதையெல்லாம் சிபிஐ அதிகாரிகள் அப்படியே எடுத்துள்ளனர். ஊழல் அதிகாரிகள் தப்பவே முடியாது" என்றனர்.

எடை அளவிடும் கம்ப்யூட்டர்  அறைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்த பின்னர் தற்போது சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் எடையிடப்படவில்லை. மாறாக காரைக்கால் துறைமுகத்தில் இருந்து வரும்போதே கணக்கிடப்படுகிறது. இதேபோல மற்ற பகுதிகளிலும் இருந்து வரும்போது முழுமையாக அளவிடப்பட்டு வருகிறது. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
 
சென்னையில் இருந்து வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழு துரிதமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடவே சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். விரைவில் இந்த முறைகேட்டில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது தெரியவரும். கைது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

-சி.ஆனந்த குமார்

படங்கள்:
தே.தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ