Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே நிர்வாகத்தின் கனிவான கவனத்திற்கு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக புறநகர் மின்சார ரயில்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு மின்சார ரயில் நிலையங்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்த ரயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணிகளின் நிலைதான் ஐயோ பாவமாக உள்ளது. சில ரயில் நிலையங்களில் பிளாட்பார வசதிகள் இல்லை. இன்னும் சில ரயில் நிலையங்களில் பிளாட்பார நிழற்குடைகள் இல்லை. இதைவிட கேவலம் முக்கியப்பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் கூட கழிவறை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. அப்படியே கழிப்பறைகள் இருந்தாலும் அவை செயல்பாட்டில் இல்லாமல் பூட்டி கிடக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் இருந்தாலும், அங்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் பகல் கொள்ளையாக இருக்கும்.
 

பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சௌகரியமான பயணம் ஆகியவற்றை நிறைவாக கொடுப்பதாக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி மார்த்தட்டிக்கொள்கிறது. ஆனால் அது எந்த அளவு உண்மை என்பதை புறநகர் ரயில் நிலையங்களைப் பார்த்தால் தெரியும். சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட், சென்னை கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் கட்டண கழிவறைகள் உள்ளன. மற்ற பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிவறை வசதிகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவைகள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. இதனால் அவசரத்துக்கு ஒதுங்க கூட முடியாமல் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக முதியோர், பெண் பயணிகளின் நிலைமை பரிதாபம்.

ரயில் நிலையத்தையொட்டி உள்ள ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளை சிறுநீர் கழிக்க பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட இந்த அவலத்தை நேரிடையாக பார்க்கலாம். சொற்ப ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகளும் பராமரிப்பின்றி படுமோசமாக காணப்படுகின்றன.
 

ரயில் நிலைய வளாகத்திற்குள் சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது அறிவிப்பாக மட்டுமே உள்ளது. ஆனால், அதன்படி வழக்குப்பதிவு செய்தால் தினமும் பலர் சிக்கி ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்த நேரிடும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், அடுத்தக் கேள்வி ரயில் நிர்வாகத்திடம் கேட்கப்படும். அது என்னவென்றால்,  "எதற்காக அடிப்படை வசதிகளை பயணிகளுக்கு செய்து கொடுக்கவில்லை?" என்பதே அந்தக் கேள்வி. இதற்காக எதையும் கண்டும் காணாமல் போல ரயில்வே நிர்வாகம் செயல்படுகிறது. பயணிகள் தரப்பிலும் பலமுறை கோரிக்கை வைத்தும் அவை நிறைவேற்றப்படாததால் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ பழகி விட்டனர்.

இதுகுறித்து புறநகர் ரயிலில் தினமும் பயணிக்கும் ஒரு பெண் பெயரைக் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், “வேலைக்காக தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு மின்சார ரயிலில் சென்று கொண்டு இருந்தேன். திடீரென எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. இதனால் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி கழிவறைக்கு செல்லலாம் என்று நினைத்தேன். அதன்படி ரயில் நிலையத்தில் இறங்கி அங்குள்ள ஊழியர்களிடம் கழிவறை குறித்து கேட்டேன். அவர்கள் இங்கு அந்த வசதியில்லை என்று கூறினார்கள். பிறகு அடுத்த ரயிலில் ஏறி எழும்பூர் வந்தேன். அதுவரை நான் பட்ட அவஸ்தையை சொல்ல முடியாது. இதுதொடர்பாக புகார் புத்தகத்தில் குறிப்பிட்டேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னைப் போல எத்தனைப் பெண்கள் தினந்தோறும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியாது. பயணிகளுக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது ரயில்வே நிர்வாகம் செய்து தர முன்வர வேண்டும்" என்றார் வேதனையுடன்.
 

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், "புறநகர் ரயில் நிலையங்களில் கழிவறை வசதியில்லை என்ற புகார் எங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. கழிவறைகளை டென்டர் விடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே கழிவறைகள் மூடப்பட்டு கிடப்பதற்கு காரணம். சில இடங்களில் டெண்டர் எடுக்க ஆளில்லை. ரயில்வே நிர்வாகமே அதை பராமரிக்கலாம் என்றால் ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. தனியார் மூலம் கழிவறையை பராமரிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதிதாகவும் கழிவறைகள் கட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த 2006ஆம் ஆண்டு 74 புறநகர் ரயில் நிலையங்களில் கட்டண கழிவறைகளை கட்டி பராமரிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும் புறநகர் ரயில் நிலையங்களின் தூய்மைப்பணியை அந்தந்த வணிக மேலாளரிடமும் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது 40க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் நிலையங்களில் கழிவறை கட்டும்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்தப்பிறகு டெண்டர் விடப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு அவைகள் விடப்படும்” என்றார்.

பயணிகள் தரப்பில், "தினமும் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கூட பயணிகள் வேலை, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக சென்னைக்கு வருகின்றனர். மூன்று மணி நேரத்துக்கு மேல் பயண நேரமாகிறது.

புறநகர் மின்சார ரயில்களில் கழிவறை வசதியில்லை. இவ்வளவு நேரம் ரயிலில் வரும்போது குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது போல குடிநீர் வசதியும் பல ரயில் நிலையங்களில் இல்லை. ரயில் பயணிகள் நலச்சங்கங்கள் சார்பில் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பயணிகள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஆனால் வேலை, நேரமில்லாத காரணத்தால் பயணிகள் ஒருங்கிணைந்து போராடாதது ரயில்வே நிர்வாகத்துக்கு வசதியாக போய்விட்டது" என்றனர்.

ரயில் நிலையங்களில் ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு...!’ என்ற அறிவிப்பைப் போல  ‘ரயில்வே நிர்வாகத்தின் கனிவான கவனத்திற்கு..!’ என்று பயணிகளின் இந்த கோரிக்கை விடுக்கப்படுகிறது.

கவனத்தில் கொள்வார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...?

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ