Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'செம்மர அரசியல்...அடப்பாவிகளா, இன்னுமா உங்களுக்குப் புத்தி வரல?!'

'செம்மரம் வெட்டுவதற்காக சென்ற 70 தமிழர்கள் கைது... அவர்கள் சென்ற இரண்டு பேருந்துகளும் பறி முதல்!' -கடந்த சில தினங்களுக்கு முன் இப்படியொரு செய்தியை தினத்தாளில் படித்ததும் பதறிப்போனேன். 'அடப்பாவிகளா, ஏற்கெனவே 20 பேரை சுட்டுக்கொன்ன பிறகுமா உங்களுக்கெல்லாம் புத்தி வரல..?' என்று அவர்களையெல்லாம் பார்த்துத் திட்டித் தீர்க்கத் தோன்றியது எனக்கு!

20 பேர் கொல்லப்பட்ட விஷயமே இவர்களுக்குக் தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்திருந்தும், 'வாழ வழியில்லை, இருந்தால் என்ன செத்தால் என்ன?' என்று விரக்தியின் விளிம்பிற்கு கூட சென்றிருக்கலாம். 'பணம் கிடைக்கிறது... இந்த வேலையைச் செய்துதான் பார்ப்போமே' என்று ஆசைப்பட்டுக்கூட கிளம்பிப் போயிருக்கலாம். எதுவாக இருந்தாலும் தவறுதான். ஆனால், இத்தகைய தவறுகள் திரும்பத் திரும்ப நடக்கின்றனவே, இதற்குக் காரணம் என்ன?

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தில் ஒரேயொரு கடிதத்தை மட்டும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கு அனுப்பிவிட்டு, கடமை முடிந்ததாக கையைக் கட்டிக் கொண்டுவிட்ட தமிழக அரசே, இதற்கு உன் பதில் என்ன?

செம்மரக்கட்டைக் கடத்தல் என்பது மாபெரும் மாஃபியா கும்பல் நடத்திக் கொண்டிருக்கும் உலகளாவிய கொள்ளை. இதில் ஆந்திரா, தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க, ஏன் அகில உலக கிரிமினல்களும் கைகோர்த்துள்ளனர். ஆந்திர, தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளும்கூட கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் செம்மரக்கடத்தல் விவகாரத்தில் நடந்த ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் சிக்கி, தற்போது தலைமறைவாக இருக்கும் தமிழக கலால்பிரிவு டி.எஸ்.பி தங்கவேலுவே இதற்கு உதார ணம். இவராவது போலீஸ் துறையில் பணியாற்றும் டி.எஸ்.பி. பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தக் கடத்த லுக்கு உடந்தையாக இருக்கிறார். ஆனால், ஒரு மாநிலத்தை ஆளும் அரசியல்வாதிகளே கடத்தலுக்கு, உடந்தையாக இருக்கிறார்கள் எனும்போது, யாரை நோக? ஆம், செம்மரங்களை நேரடியாக வெட்டி விற்க மத்திய வனத்துறை சட்டங்கள் தடையாக இருக்கின்றன.

ஆனால், செம்மரங்கள் மூலமாக கோடி கோடியாக பணம் கொட்டுகிறது. இதனால், ஆந்திராவில் ஆட்சி யைப் பிடிக்கும் அரசியல்வாதிகளே இந்தக் கடத்தலை ஊக்குவித்து, அதிலிருந்து குறிப்பிட்ட சதவிகித செம்மரக்கட்டைகளை மட்டும் கடத்தலின்போது பிடிபட்டதாகக் கணக்குக் காட்டி, பணத்தை அரசாங்க கஜானாவில் சேர்க்கிறார்கள்.

மீதி மரங்களுக்கு சலாம்போட்டு, உலகம் முழுக்க அனுப்பி வைத்து, அதன் மூலமாக கணிசமாக கமிஷன் பார்க்கிறார்கள். அரசாங்க கஜானாவில் சேர்ப்பதன் மூலமாக மக்களிடம் நல்ல பெயர். பணம் சேர்ப்பதன் மூலமாக கடத்தல்காரர்கள் மற்றும் மனைவி, மக்களிடம் நல்லபெயர். இதுதான் அந்த மாநில ஆளும் அரசியல்வாதிகளின் வாடிக்கையாக இருக்கிறது. இதில் சில கடத்தல்காரர்கள் தனி ஆவர்த்தனம் செய்யும் போது, போலீஸை வைத்து எதிர் நடவடிக்கை எனும் பெயரில் குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளும் வேலை நடக்கிறது. ஆனால், இதில் சிக்கிக் கொண்டு சாவது... கூலிக்காக செல்லும் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள்தான்.

20 தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்ட விஷயத்தில், 'அவர்கள் மரக்கடத்தலுக்குப் போய் மாட்டிக் கொண்டால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் தலையெழுத்து' என்று ஏதோ மூன்றாவது மனிதர் போல இந்த விஷயத்திலிருந்து தமிழக அரசு விலகி நிற்கிறது. இதற்கு மறைமுகக் காரணங்கள் எத்தனை யோ இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிடுவோம். உண்மையிலேயே கடத்தலுக்குத் துணைபோக விரும்பாத, நேர்மையைக் கடைபிடிக்கும் அரசு, தமிழக அரசு என்றே நம்புவோம். அப்பாவிகளை பல இடங் களில் கைது செய்து, சுட்டுக் கொன்று ஓரிடத்தில் பிணங்களை போட்டு வைத்திருந்தது ஆந்திர அரசு என்பதையும்கூட விட்டுவிடுவோம். மரக்கடத்தலின் போதுதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்றும்கூட நம்புவோம்.

சரி, இத்தனைக்கும் பிறகு இந்த தமிழக அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

பணத்தாசையாலும், பிழைக்க வேறு வழியில்லாததாலும் இப்படி விட்டில்பூச்சிகளாக சென்று கொண்டிருக்கும் தொழிலாளர்களை யெல்லாம் தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? அந்தப் பகுதி மக்களிடம் சென்று தீவிரமாக பிரசாரம் செய்து, 20 பேர் கொல்லப்பட்ட விஷயத்தை அவர்களின் மனங்களில் எல்லாம் பதியம்போட்டு மனதை மாற்றி உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டியிருக்க வேண்டாமா?

20 பேர் கொல்லப்பட்டபோது, ' வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இப்படி மரம் வெட்டச் செல்லும் மக்களை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை. கிராமங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது' என்றெல்லாம் செய்திகள் றெக்கைக் கட்டின. ஆனால், ஒரு துரும்பையும் எடுத்துப்போடவில்லை இந்த அரசு இயந்திரம் என்பதுதான் உண்மை. ஆம், ஒரு டி.எஸ்.பி.யே மரக்கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருக்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறை யினருக்கும் தெரிந்தேதான் இருக்கும். இப்படிப்பட்ட கருங்காலிகளை களையெடுக்கும் முயற்சியை முன்னெடுத்திருந்தாலே... அப்பாவிகள் பிழைப்புதேடி, பணத்தைத் தேடிப் போய் இப்படி சிக்கிக் கொண்டு சின்னாபின்னப் படமாட்டார்களே!  ஆனால், இன்றுவரை இதைச் செய்யவில்லை தமிழக அரசாங்கம்.

சொல்லப்போனால், இதையெல்லாம் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதே மடத்தனம். ஆம், மக்களைக் காப்பாற்ற வேண்டிய வேலையைச் செய்யவேண்டிய ஓர் அரசாங்கமே, ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடை களைத் திறந்து வைத்து, கிட்டத்தட்ட மாநிலத்தையே குடிகார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது. எந்த வகையிலாவது சம்பாதித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் வாங்கிக் குடித்தால் போதும்... அரசாங்க கஜானா நிரம்பினால் போதும்... இலவசத் திட்டங்களை வீசி ஓட்டுகளை அள்ளினால் போதும் என்றிருக்கும் அரசாங்கத்திடம் போய் இதையெல்லாம் எதிர்பார்ப்பது மடத்தனம்தானே!

செம்மரக்கடத்தலில் போலீஸ்!

என்ன கொடுமை, படிக்காத மக்கள், அடுத்தவேளை உணவுக்கு வக்கில்லாத மக்கள், படித்திருந்தும் வேலை கிடைக்காத கொடுமையால் மரக்கடத்தலுக்காக மரம் வெட்டச் செல்லும் மக்கள்... இவர்களையெல்லாம் சகித்துக் கொள்ளலாம். ஆனால், பல ஆயிரங்களை மாதம்தோறும் சம்பளமாக பெற்றுக் கொண்டிருக்கும் காவல்துறை டி.எஸ்.பி.யே மரக்கடத்திலில் ஈடுபட்டால், அதை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் வேலூர் பகுதியில் கொல்லப்பட்ட பா.ம.க பிரமுகர் சின்னப்பையன் என்பவரின் கோழிப்பண் ணையில்தான் மரக்கட்டைகளை பதுக்கி வைப்பார்களாம். இதில் ஏற்பட்ட மோதலில் அந்த பிரமுகர் கொல்லப்பட்டிருக்கிறார். அங்கிருந்த மரக்கட்டைகளை எடுத்துச் செல்வதற்கு சீருடையிலும், சீருடை இல்லாமலும் போலீஸ்காரர்களே உதவியாட்களாக வேலை செய்துள்ளனர். இதற்கு அந்த டி.எஸ்.பி உத்தரவு போட்டிருக்கிறாராம்.

'அடப்பாவிகளா, இன்னுமா புத்தி வரல?' என்று நம்மை நாமே திட்டிக் கொள்ள வேண்டியதுதான்!

- ஜூனியர் கோவணாண்டி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close