Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு மரம் நட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கு சமம்...!

''மருந்தாகித் தப்பா மரத்தாற்றல் செல்வம் பெருந்தகை யான்கண் படின்’’ என்கிறது குறள். பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம், தன் அனைத்து பாகங்களையும்
மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பானதாகும்’’ என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’, ‘விண்ணின் மழைத்துளி மன்ணின் உயிர்த்துளி’, ‘இயற்கையைக் காப்போம்’ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் சில ஆண்டுகளாகவே ஓங்கி ஒலித்துக் கொண்டு வருகிறது. புவி வெப்பமடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான் என்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்கத்தான் மரங்களை வளர்க்க வேண்டுமென்பது கட்டாய கடமையாகியுள்ளது.

‘‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’’ என்ற நிலை மாறி ‘‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’’ என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். இயற்கையை பாதுகாக்கும் முதல் காரணியான மரங்களை இல்லாமல், இன்றிருக்கும் நிலையே தொடர்ந்து நீடித்தால் ‘இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும்’ என்ற ஆய்வின் கூற்று நம்மை எச்சரிக்கை செய்கிறது.
இதை மனதில் வைத்து மரக்கன்றுகளை உருவாக்கி இலவசமாக வழங்கி வரும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ‘பள்ளி ஆசிரியர்‘ அறிவழகன், ‘சிற்பி‘ துரைராஜ் மற்றும் ‘டெய்லர்‘ சண்முகம் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

இதுகுறித்து திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சிற்பி துரைராஜிடம் பேசினோம். ''நண்பர் சண்முகத்தோடு மாசத்துல நாலு நாள் சதுரகிரி மலைக்குப் போயிடுவேன். மலைப்பாதையில் நடந்து போகும்போது வித்தியாசமான மரங்களைப் பார்ப்போம். கடும் வெயில் காலத்துல போனாக் கூட மரங்களின் நிழலும், குளுமையும் மனசை இதமாக்கும். மலைக்குப் போறதே மூலிகை மரங்களின் மூலமா கிடைக்குற சுத்தமான காற்றைச் சுவாசிக்கத்தான். ஒரு கட்டத்துல நாமளே மரங்களை நட்டு வளர்த்தால் என்னான்னு தோணுச்சு. வனத்துறை மூலமா வேம்பு, புங்கை, நாவல், ஆல், அரசு மரக்கன்றுகள வாங்கி நட்டு வந்தோம். நூறு... ஐம்பதுன்னு கன்றுகள் வாங்கிடுவோம்.

திருப்பரங்குன்றம் மலையில் இருக்குற சரவணப் பொய்கை, 6 வருஷத்துக்கு முன்னால கழிப்பிடமா இருந்தது. அதை கோவிலில் தெரியப்படுத்தி சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்தோம். இதுதான் நாங்கள் நட்ட முதல் மரங்கள். பிறகு, மதுரை திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சிவகாசி, திருச்சி, மணப்பாறைன்னு சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் மரங்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறோம். மரம் நடுறது, தண்ணீர் ஊத்துற வேலைகளையெல்லாம் அதிகாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணியோட முடிச்சுக்கிட்டு வேலைவெட்டிக்குப் போயிடுவோம்.

 

எந்தெந்த ஊருக்கெல்லாம் சிற்பம், கோவில் மண்டப வேலைகளுக்குப் போறேனோ, அந்தந்த ஊர்களில் மரத்தை கொண்டு போயி, தண்ணி ஊத்துவேன். என் வேலை முடிஞ்ச பிறகு பராமரிக்க, அதே ஊருல பெரியவர்கள், மாணவர்கள் என ஆர்வமுள்ள யாரையாச்சும் உருவாக்கிட்டு வந்துடுவேன். எங்க ரெண்டு பேரோட வீடுமே வாடகை வீடுதான். நூறு, ஐநூறுன்னு மரக்கன்றுகளை வீட்டுல ஸ்டாக் வைக்கிறதுனால, வீட்டு சொந்தக்காரருக்குப் பிடிக்காம இதுவரை ஆறு வீட்டை காலி பண்ணிட்டோம். அப்புறம் இதை கேள்விட்ட ஜோதி என்கிறவங்க மரக்கன்றுகளை வெச்சிக்க இடம் கொடுத்தாங்க. எங்களால முடியாத நேரம் அவங்களே தண்ணீர் ஊத்தியும் பக்குவமாப் பாத்துக்குவாங்க’’ என்று துரைராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சண்முகம் பேச ஆரம்பித்தார்.

‘‘நாங்க ரெண்டு பேருமே அன்னாடங்காட்சிகள் தான். எப்பவும் வேலை இருந்துக்கிட்டே இருக்கும்னு சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு 40 ரூபாய் வீதம் மாதம் 1,200 ரூபாய் சேமித்து அந்த காசுலதான் மரம் நட்டுகிட்டு இருக்கோம். 2006லிருந்து 2010 ஆண்டுக்குள்ள வனத்துறை மூலமாத்தான் மரங்கள் வாங்கி நடவு செய்துட்டு இருந்தோம். மரக்கன்றுகளின் தேவை அதிகமா இருந்தது. கையில காசு குறைவு. பிறகுதான் நாமளே மரக்கன்று உருவாக்கினால் என்னான்னு யோசனை தோணுச்சு. அப்போ திருநகரில் உள்ள அறிவழகன் சாரோட தொடர்பு கிடைச்சுது. நம்ம வீட்டுல தண்ணீர் இருக்கு, போதுமான இடமும் இருக்கு நாமளே மரக்கன்று வளர்த்து நடலாம்னு உரிமையா சொன்னாரு. இதுவரை 25 ஆயிரம் மரங்கள் நட்டு வளர்த்துள்ளோம். யார் மரக்கன்றுகள் கேட்டாலும் இலவசமா கொடுக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

ஆசிரியர் அறிவழகன் கூறும்போது, "இந்த வாழ்க்கையில் ஜோசியம்.. ஜோசியம்னு சிலர், பணம்.. பணம்னு சிலர், மது.. மதுன்னு சிலர் என்று ஏதோவொரு தேவைக்காக அலைந்து கொண்டே இருக்கிறார்கள். தன் குழந்தைகளுக்காக வீடு, வாசல், படிப்பு ஏற்படுத்திக் கொடுக்குறார்கள். இதுக்கெல்லாம் ஒரு விலை கொடுத்தால் கிடைச்சுடும். ஆனா, எந்த விலை கொடுத்தாலும் கிடைக்காதது, சுத்தமான காற்றும், மழையும்தான். இந்த காற்றுக்கும், மழைக்கும் காரணமா இருப்பது மரங்கள்தான். ஒரு மரம் நட்டால், ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்குச் சமம்னு நினைக்கிறேன். நாம இறக்கிற வரைக்கும் நம்மள சுமக்குற பூமித்தாயுக்கு மரங்கள் நடுவதை தவிர, வேறு என்ன கைம்மாறு செய்துவிடமுடியும்..?" என்றார்.

இ.கார்த்திகேயன்

படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close