Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரகமா...கெரகமா...?- களங்கப்படுத்தப்படும் கரகாட்டக் கலை!

மாபெரும் கபடிப் போட்டி, கோலாகல கிரிக்கெட் போட்டி, கோ கோ போட்டி, என பட்டிதொட்டிகளில் எல்லாம் கூட விளையாட்டு போட்டிகள் அதகளப்படுத்திக்கொண்டிருக்க, திருச்சி காஜாமலை பகுதிவாசிகள் வித்தியாசமாக கரகாட்டப்போட்டிக்கு திருச்சி மாநகர் முழுவதும் பேனர் வைத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் ஆட்டோவில் அறிவிப்பு செய்தும் ரணகளப்படுத்தி விட்டனர்.

நாட்டுப்புறக்கலையை ஊக்குவிக்கும் இந்த செயலை பாராட்டாமல் இருக்கக் கூடாது என போஸ்டரில் சொன்ன தேதியை குறித்து வைத்துக் கொண்டோம்.

திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் பகுதியில் நடந்த கரகாட்டத்தைக் காண எங்கெங்கிருந்தெல்லாமோ ரசிகர்கள் ஆஜராகியிருந்ததாக அறிந்தோம். இந்தக் காலத்தில் கரகாட்டத்திற்கு இப்படியொரு வரவேற்பா? என வியந்தபடியே நாமும் ஆஜரானோம்.

திருச்சி -  மதுரை சாலை அருகே உள்ள காஜாமலை காளியம்மன் கோவில் மைதானம் இளைஞர்கள், முதியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் நிரம்பி வழிந்தது. 'அரைகுறை ஆடையுடன் 7 ஜோடிகள் மைதானத்துக்கு வர அமர்க்களமாக துவங்கியது 'கரகாட்டம்(?)'.  கரகாட்டக்கலைஞர்கள் களத்திற்கு வந்தபின்தான் ரசிகர்கள் திரண்டுவந்ததன் காரணம் தெரிந்தது. அரை குறை ஆடை,  இரட்டை அர்த்த வசனங்கள், அதற்கேற்ற அசிங்கமான உடல்மொழி என ரசிகர்களை திணறடித்தனர் அந்த “கலைஞர்கள்'.

ஜோடிகள் ஒவ்வொருவரின் நடன அசைவுகளும், பேச்சுக்களும் முகம் சுளிக்கவைக்கும் அளவு இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. பார்வையாளர்களின் கைதட்டலுக்கு ஏற்ப கலைஞர்கள் தங்கள் திறமையை அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் இம்மாதிரியான நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? என சந்தேகம் கிளப்பியவர்கள் கூட,  மைதானத்தில் மணிக்கணக்காக கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். போட்டியின் இறுதியில் 'முதல்' பரிசு(?) திருச்சி நித்யா- கோவிந்தன் ஜோடிக்கு கிடைத்தது.

ஆனாலும் பார்வையாளர்கள் பாராட்டும்படி நடனமாடி உற்சாகப்படுத்திய மற்ற ஜோடிகளுக்கும் விழாக் குழவினர் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் நடக்கும் கோவில் விழா மற்றும் உறவுகள் கூடி மகிழும் தருணங்களில் கரகாட்டம், காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவர். கலைகளின் பிறப்பிடமான தமிழகத்தில் அம் மாதிரி நிகழ்ச்சிகள் மக்களின் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் கலைகள் மூலம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தது. இன்றோ அது வெறும் மட்டமான ரசனைக்குரிய ஒன்றாகிவிட்டது.

கலைகளை வளர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. கலைகள் என்ற பெயரில் இம்மாதிரி அசிங்கங் களை அரங்கேற்றாமல் இருந்தாலே தமிழக பாரம்பரிய கலைகள் வளர்ச்சி பெறும்.

திருச்சியில் நடந்த இந்த நிகழ்ச்சியை கேள்வியுற்ற அப்பகுதியை சேர்ந்த வேறு சில கரகாட்டக்கலைஞர்கள், “வயிற்றுப்பிழைப்பிற்கு ஆயிரம் வழி இருக்கிறது. தங்கள் வருமானத்திற்காக இப்படி பாரம்பரிய கலையை அவமதிப்பதும் அதன் புகழை கெடுப்பதையும் அரசு எப்படி அனுமதிக்கிறதோ?' என வருத்தம் தெரிவித்தனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் கரகாட்டக்கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்ட அவர்கள் யாரும் ஆட்டத்தில் பிரதானமாக கரகத்தை வைத்து ஆடவில்லை என்பதுதான்.

இதுகுறித்து நடனமாடிய ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர், “ நாங்களும்  முறையாக கரகம் பயின்ற கலைஞர்கள்தான்.  ஆனால் கரகாட்டக்கலைக்கு இன்று மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை. கரகாட்டத்தின் அத்தனை நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தினாலும் எத்தனை பேர் ஆர்வமுடன் பார்ப்பார்கள். எங்களுக்கு கரகத்தை தவிர வேறு தெரியாது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களும், தங்கள் நிகழ்ச்சி வெற்றிபெறுவதற்காக எங்களை இம்மாதிரி வசனம் பேசவும், நடனமாடவும் வற்புறுத்துகின்றனர். வேறு தொழில் தெரியாதததால் நாங்கள் அதற்கு உடன்பட வேண்டியதாகிறது.

மற்றபடி கரகாட்டத்தை அவமதிப்பதாக இதை எடுத்துக்கொள்ளக்கூடாது. கலைகளின் மீதான சமூகத்தின் அக்கறையும் ரசனையும் குறைந்துபோய்விட்டதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்றார் சோகத்துடன்.

யாரை குற்றம் சொல்ல?

-சி.ஆனந்தகுமார்

படங்கள்;
என்.ஜி.மணிகண்டன் 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ