Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 கோடி ஏழைகள் பட்டினி... அரசு கிடங்குகளில் வீணாகிய தானியம் 40 ஆயிரம் டன்!

ருபுறம் நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகள் பட்டினியால் வாடிக்கொண்டு இருக்க, மறுபுறம் பருவமழை சரிவர பெய்யாவிட்டால் இன்னொரு வறட்சி ஆண்டை சந்திக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்,  இவை எதையும்  பொருட்படுத்தாமல் இந்திய உணவுக் கிடங்குகளில் காட்டப்படும் அலட்சியங்கள் மற்றும் பொறுப்பற்ற தன்மை காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 40 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணாகிப்போன அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்கள், அரசு குடோன்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. நியாய விலைக்கடைகள் மற்றும் பொதுச் சந்தையில் விற்பனை செய்வதற்காக, தேவைக்கு ஏற்ப இந்த உணவு தானியங்கள் மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் உணவு தானியங்கள், குறிப்பாக Food corporation of India  எனப்படும் இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளில் திறந்தவெளியில் அலட்சியமாக கொட்டி வைக்கப்பட்டு,   மழையாலும், எலிகளாலும், இன்ன பிற காரணங்களாலும் அழுகி நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் புழுத்துப்போய் வீணாவதாக கடந்த பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு உள்ளது. 

இவ்வாறு உணவுக் கழக கிடங்குகளில் உணவு தானியங்கள் வீணாகிப்போவதற்கு பதிலாக, இந்த நாட்டில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் பட்டினியால் வாடும் ஏழைகளுக்காவது அதனை வழங்க வேண்டும் எனக்  கோரி, சிவில் உரிமைக்கான மக்கள் யூனியன் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

கடந்த 2010 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக்வர்மா ஆகியோரைக் கொண்ட அமர்வு ,  வீணாகும் உணவு தானியங்களை, ஏழைகளுக்கு குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

"உணவு தானியங்கள் குடோன்களில் புளுத்துப்போவதையோ, கடலில் கொட்டி அழிப்பதையோ அல்லது எலிகளுக்கு அதை உணவாக்குவதையோ அனுமதிக்க முடியாது. வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பசியில் வாடும் ஏழைகளுக்கான தானிய ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும்.

ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்டு 20, 2001) இது தொடர்பாக தெளிவான உத்தரவை இந்த நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது. திட்டங்களை மட்டும் அரசு தீட்டினால் போதாது. அதை முறையாக செயல்படுத்தாவிட்டால் அதனால் எந்த பயனும் இல்லை. பசியால் வாடுகிறவர்களுக்கு உணவு போய்ச் சேருவதுதான் முக்கியம். விவசாயிகளின் நலனுக்காகவும், வறட்சிகாலத் தேவைக்காகவும் தானியங்களை கொள்முதல் செய்து சேமித்து வைக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இந்த தானியங்கள் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். போதிய சேமிப்பு கிடங்குகள் இல்லாவிட்டால், மீதமுள்ள தானியங்களையாவது வீணாக்காமல் அவற்றை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்க வேண்டும்" என அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

மேலும், " சமீபத்தில் ( 2010) எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் உள்ள மக்கள் தொகையான 117.61 கோடியில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 7 கோடியாக அதிகரித்து உள்ளது. எனவே கடந்த 1991-ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் இல்லாமல் தற்போதைய கணக்கெடுப்பின்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ஒதுக்கீட்டை ஏன் அதிகரிக்கக்கூடாது? இதுகுறித்து மத்திய அரசின் வக்கீல் தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 55 ஆயிரத்து 121 டன் கோதுமை வீணாகி உள்ளது. இந்திய உணவு கழக கிடங்குகளில் வீணாகிப்போன மேலும் 12 ஆயிரத்து 418 டன் தானியங்கள் இதில் அடங்காது.

இந்த வழக்கில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யும்படி அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு பல மாநிலங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை.  26 மாநிலங்களில் 13 மாநிலங்கள் மட்டுமே இதுவரை பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன. 9 மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து ஏழைகளுக்காக கூடுதல் தானியங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்துள்ளன" என்றும் அப்போது உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மேற்கூறிய உத்தரவை பிறப்பித்து ஆண்டுகள் 5 ஆண்டாகிவிட்டபோதிலும், நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. இன்னமும் இந்திய உணவுக்கழக கிடங்குகளில் உணவு தானியங்கள் வீணாகிக் கொண்டுதான் இருக்கின்றனவே தவிர, அவை ஏழைகளை சென்றடைந்தபாடில்லை.

இது தொடர்பாக ஆங்கில ஏடு ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 40 ஆயிரம் டன்னுக்கு மேலான உணவு தானியங்கள் இந்திய உணவுக்கழக கிடங்குகளில் வீணாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள்தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், தானியங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்துக்கொள்வதற்கான வசதிகள் சரிவர இல்லாததும், சிறு சிறு திருட்டுகள், போக்குவரத்தில் ஏற்படும் இழப்புகள் போன்றவையே உணவு தானியங்கள் வீணாவதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் வீணாகிப்போன உணவுதானியங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2010 - 11 ஆம் ஆண்டில் இருந்து 2013 - 14 ஆண்டு வரை 27,000 டன் அரிசி மற்றும் 26,000 டன் கோதுமை உட்பட 56,000 டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் வீணாகிப்போனதாக உணவு தானிய கொள்முதல் மற்றும் விநியோத்திற்கு பொறுப்பான இந்திய உணவுக்கழகம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளது.

அதே சமயம் இவ்வாறு உணவு தானியங்கள் வீணாகிப்போனதற்கு உணவு தானியங்களை இருப்பு வைப்பதற்கான போதுமான வசதி இல்லாததும், அதனை முறையாக கையாளததுமே நேரடியான காரணம் என சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ள இந்திய உணவுக்கழகம், வீணாகிப்போன உணவு தானியங்களின் பண மதிப்பு எவ்வளவு தொகை என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டது.

உணவு தானியங்கள் அதிகம் வீணாகும் மாநிலங்களில் ஒடிசாதான் 7,108 டன்னுடன் ( 2014 - 15 ) முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட புயலே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் 6,120 டன், ( செப்டம்பர் 2014 ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் ), ஆந்திரா 2,262 டன், கர்நாடகா 747 டன் என உணவு தானியங்கள் வீணாகி உள்ளன. இதில்  2013 - 14 ல் மேற்குவங்கத்தில் 12,539 டன் உணவு தானியங்களும், பீகாரில் 3,909 டன் உணவு தானியங்களும் வீணாகி உள்ளதாக இந்திய உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம்பேர், அதாவது ஒரு கோடியே 94 லட்சம் பேர் ( ஏறக்குறைய 2 கோடி பேர் )  )  உள்ளதாக ஐ.நா. வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கும் நிலையில், இந்திய உணவுக்கழகத்தின் மத்திய தொகுப்பில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி 568.34 லட்சம் டன் உணவு தானியங்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவு தானியங்களையாவது உரிய முறையில் பாதுகாக்கவும், தேவைக்கு அதிகம் என மதிப்பிடப்படும் உணவு தானியங்களை பசியால் வாடும் ஏழைகளுக்கு வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மோடி தலைமையிலான மத்திய அரசாவது முன்வரவேண்டும்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ