Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுக்கான பட்டாம் பூச்சிகள் திருவிழா...!

திருவான்மியூரில்  இயங்கிவரும் 'பனுவல்' புத்தக நிலையம், புத்தக வெளியீட்டு விழாக்கள், புத்தகங்கள் பற்றிய விமர்சன கூட்டங்கள், எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு, ஆவணப் படங்கள், குறும்படங்கள், திரைப்படங்களை திரையிட்டு அவற்றைப் பற்றிய கலந்துரையாடல்கள், சிறுகதைகளை நாடகமாக்குதல் என்று இலக்கியம், சினிமா, அரசியல் சார்ந்த பல நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இதனை நடத்திவரும் அமுதரசன், முகுந்தன், சரவணன் ஆகியோர்  சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து வருபவர்கள். வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்களை புத்தகங்கள், சினிமாக்கள், இலக்கிய கூட்டங்கள்தான் நண்பர்களாக்கியது. பின்னர்  நண்பர்கள் சிந்தனையில் உதித்ததுதான் 'பனுவல்' புத்தக நிலையம்.

நேரடியாக புத்தகங்களை விற்பனை செய்துவருவதோடு  'பனுவல்' புத்தக நிலையம் கதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு படைப்புகள், குழந்தைகளுக்கான படைப்புகள் என்று தமிழின் பெரும்பாலான முக்கியமான பதிப்பகங்களின் புத்தகங்களை இரண்டு வருடத்திற்கு முன்பு வரை இணையத் தின் வாயிலாகத்தான் விற்பனை செய்து வந்தது.

தற்போது, முதன்முறையாக குழந்தைகளுக்கான 'பட்டாம்  பூச்சிகள்  திருவிழா' என்ற தலைப்பில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வரை, குழந்தைகளுக்கான படைப்பு ஊக்க நிகழ்வினை தொடங்கி உள்ளனர்.

எட்டு முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வு, புத்தகங்கள் வாசிப்பு, ஓவியங்கள், பேச்சு என்று அவர்களின் பன்முகங்களையும், படைப்பாற்றலையும் வெளிக்கொண்டு வரவே இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். விழாவின் முதல் நிகழ்வாக கடந்த சனிக்கிழமை ஓவிய கண்காட்சியையும், 'ஸ்பிரிட்டடு அவே'' என்ற அனிமேஷன் திரைப்படத்தையும் தொடங்கி வைத்தார் இயக்குநர் ராம்.

"இன்று, இயற்கை, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகளைப் பற்றி நாம் புத்தகங்கள் வழியேதான் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். சென்னைப்  போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு இன்றைய சூழலில் இம்மாதிரியான விழாக்கள் கண்டிப்பாகத் தேவை.

அனைவரும் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, குழந்தைகளை பயணம் போக விடுங்கள்" என்று தனது பள்ளி வாழ்க்கைப் பற்றிய நிகழ்வுகளை அசைப்போட்டுக் கொண்டே குழந்தைகளோடு குழந்தைகளாய்  அமர்ந்து பேசினார் இயக்குநர் ராம்.

களிப்பூட்டும் கணிதம், களிமண் பொம்மை செய்தல், பூவுலகும் பூச்சிகளும், ஓவியம்-வண்ணம்-குழந்தை கள், கதைகள், கதை பேசலாம், வானொலியும் குழந்தைகளும், முகமூடி தயாரிப்பு, புத்தகம் தயாரித்தல், விளையாட்டா ஜெயிக்கலாம், அடையாரில் கடல், உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் பற்றி பேசுதல், சினிமா தெரிந்து கொள்வோம், சென்னையின் மரங்கள், கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்'  சிறுகதையை நாடகமக்குதல், பாடல்கள் பயிற்சி என ஆகஸ்ட் 22ம் தேதி வரை, சனி ஞாயிறுகளில், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உட்பட  அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்ற ஆளுமைகள் நேரடியாக வந்து, குழந்தைகளோடு பேசி பயிற்சி பட்டறை நடத்த உள்ளனர்.

இதில் கட்டணம் செலுத்தி பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.

இதில் கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்' சிறுகதையை, நாடகமாக்குதல் நிகழ்வை பெரிய அளவில் நடத்த உள்ளனர். இதனைத்தொடர்ந்து வாரந்தோறும், மாதாமாதம் உலக திரைப்படங்களையும், மாற்று சினிமாக்களையும் திரையிட்டு அதுபற்றிய விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடத்த  'பனுவல் பிலிம் சொசைட்டி' என்ற அமைப்பையும் புதிதாய் தொடங்கி உள்ளனர்.

குழந்தைகளுக்கான புதிய உலகை திறக்க முயற்சிக்கும் இந்த இளைஞர்களை நாமும் பாராட்டுவோமே!

- கு.முத்துராஜா

(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ