Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர்ல சுகவனம் ஜெயிக்கலையா?'

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போலதான் 2002 ல் நடந்த ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலும். இப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்து, பின்னர் மேல்முறையீட்டில் விடுதலையானதைப்போன்றுதான், 2001 ஆம் ஆண்டிலும் டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்து, பின்னர் மேல்முறையீட்டில் விடுதலையாகி 2002 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

தற்போதையை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் தவிர்த்து, திமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் எதுவும் களமிறங்காததால் தொகுதி 'ஆப்போனன்டே' இல்லாமல் சோலோவாக தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கின்றனர் அதிமுகவினர்.

ஆனால் அப்போது ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கவில்லை என்பதால், நிலைமை வேறுமாதிரி இருந்தது. அப்போதைய கள நிலவரத்துடன், 3.2.2002 தேதியிட்ட  ஆனந்த விகடன் இதழில் வெளியான கட்டுரை இங்கே....


கரகாட்டம், நையாண்டி மேளம்தான் பாக்கி! சித்திரைத் திருவிழா மாதிரி களைகட்டி விட்டது ஆண்டிப்பட்டி. சரசரவென டாடா சுமோக்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு அலைபாய, கட்சிக் கரைவேட்டிகளும் மைக் செட்டுகளுமாக வெள்ளையும் சொள்ளையுமாகப் பளீரடிக்கிறது ஆண்டிப்பட்டி!

பிப்ரவரி 21-ம் தேதி நடக்கப்போகும் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியலுக்கும் ஒரு தெளிவைத் தரப்போகிறது.

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன், ராஜினாமா செய்ததில் இருந்தே அந்தத் தொகுதிக்கு ஒரு ஹீரோயின்(!) இமேஜ் கிடைத்துவிட்டது! மொத்த அரசாங்க இயந்திரமும் ஒரு ரெட் மார்க் செய்துகொண்டு, ஆண்டிப்பட்டியை ஸ்பெஷலாக கவனிக்கத் தொடங்கியது. குண்டும் குழியுமான சாலைகள் சமதளமாயின. திரும்பிய பக்கமெல்லாம் சமுதாயக் கூடங்கள், நிழற்குடைகள், நவீனக் கழிப்பிடங்கள், சத்துணவுக்கூடங்கள் எனப் பளிச் சுண்ணாம்பில் கான்கிரீட் கட்டடங்கள் முளைத்தன. 'நூறு கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று எதிர்க்கட்சிகள் வயிற்றிலடித்துக் கொண்டன. சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் என எல்லாத் தடைகளையும் தாண்டி இதோ, அ.தி.மு.க. வேட்பாளராகி விட்டார் ஜெயலலிதா!

ஆண்டிப்பட்டி அருகில் தேனி என்.ஆர்.டி நகரில் ஜெயலலிதா தங்குவதற்கென ஒரு பங்களா தயாராக இருக்கிறது. சிங்கப்பூரிலிருக்கும் ராமானுஜம் என்பவரின் பங்களா அது. அங்கு ஜெயலலிதா தங்கினால், அவரது எதிர்வீட்டுக்காரர் டைரக்டர் பாரதிராஜா.

"ஜெயலலிதாவுக்கு ராசி எண் ஒன்பது. அதற்கேற்ற மாதிரியே எல்லாத்தையும் செய்திருக்காங்க. ஆண்டிப்பட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து எட்டாயிரத்து இருநூற்றுப் பதினைந்து பேர். கூட்டிப் பார்த்தா ஒன்பது வருது. போன தேர்தல்ல இருநூற்று நாற்பத்தாறு வாக்குச்சாவடிகளாக இருந்ததை, இப்போ இருநூற்று பதினாறாகக் குறைச்சுட்டாங்க... அதுக்கும் கூட்டுத்தொகை ஒன்பது வரணும்கறதுக்காக..." என்று கூறி வருகிறது தி.மு.க.வாட்டாரம்.

முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், நாயுடு, நாடார், பிள்ளை எனப் பல சாதிப் பிரிவு மக்கள் இந்தத் தொகுதிக்குள் இருந்தாலும், முக்குலத்தோர் வோட்டுக்களைக் குறிவைத்தே அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் களமிறங்கி உள்ளன. முக்குலத்தோர் வோட்டுகள் முழுமையாக ஜெயலலிதாவுக்குப் போய்விட்டாமல் இருக்க, தி.மு.க. பெருமளவுக்கு டாக்டர் சேதுராமனை நம்பியுள்ளது. 'நம் இனத்துக்காரரான முதல்வர் பன்னீர்செல்வம், அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், இரட்டை இலைக்கு முக்குலத்தோர் வோட்டுப் போடக் கூடாது' என்று பிரசாரம் செய்து வருகிறார் டாக்டர் சேதுராமன். அவரிடமிருந்து பிரிந்துபோன வாண்டையார் குரூப், 'நம் சாதிக்கே முதல்வர் பதவியைத் தூக்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா. அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எனவே, இரட்டை இலைக்கு வோட்டுப் போடுங்கள்' என்று பதில் சொல்லி வருகிறது. இந்த இருவரின் பிரசாரம் மட்டும்தான் இப்போதைய சுவாரஸ்யம்!

அமைதிப் பிரசாரத்தில் நிற்கிறது தி.மு.க.! "நான் ஒன்றும் பெரிய நிலச்சுவாந்தார் அல்ல. நான் ஆண்டிப்பட்டி மண்ணின் மைந்தன்..." என்று பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார் தி.மு.க.வேட்பாளர் வைகை சேகர்.

போயஸ் தோட்டத்தை எதிர்ப்பது வைகைபுதூர் கிராமத்தில் உள்ள ஒரு குடிசை வீடு என்பது ஆச்சரியம்.

"நான் படிச்சது எல்லாம் ராயப்பன் பட்டி பள்ளியில்தான். ஏழாம் வகுப்பு படிக்கும்போது, பெரியகுளம் சட்டமன்றத் தேர்தல்ல தி.மு.க.-வின் பிரசார மைக்கைப் பிடித்து, 'உங்கள் வோட்டு உதயசூரியனுக்கே' என்று சொல்வேன். அப்பவே ஆரம்பிச்சாச்சு அரசியல்!" என்று சிரிக்கிறார் சேகர். மதுரை தியாகராயர் கல்லூரியில் பி.ஏ. படித்தவர்.

"கடனாளியான என்னை நம்பி தலைவர் கலைஞர் இந்தப் பொறுப்பை ஒப்படைச்சிருக்கார். அவர் நம்பிக்கையைக் காப்பாத்திக் காட்டுவேன்!" என்கிறார் வைகை சேகர்.

"ஜெயலலிதாவை எதிர்த்து எப்படி சமாளிக்கப் போறீங்க?"

"ஆண்டிப்பட்டி சனமெல்லாம் எனக்கு உறவுதான். பிரச்னைன்னு வந்துட்டா ஒண்ணா சேர்ந்துடுவோம். எல்லாரும் ஒண்ணாவும் சேர்ந்தாச்சு. ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர்ல சுகவனம் ஜெயிக்கலையா? அதுமாதிரி நானும் ஜெயிப்பேன்!" என்று அடித்துச் சொல்கிறார்.

"நீ அமைதியா என்னோட வந்தா போதும். நான் உன்னை ஜெயிக்க வைக்கிறேன்..." என வைகை சேகருக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லி வரும் அழகிரி, தினமும் மதுரையில் இருந்து அதிகாலையே ஆண்டிபட்டி வந்துவிடுகிறார்! பால்பண்ணை நடத்திச் சில லட்சங்கள் வரை கடனில் இருக்கும் சேகருக்கு, இப்போது அழகிரிதான் குரு.

வேட்பாளர் யார் என்று அறிவிப்பு வருவதற்கு முன்பே அ.தி.மு.க தரப்பு, தொகுதி முழுக்கப் பளிச்செனக் கண்ணில்படும் எல்லாச் சுவர்களிலும் அம்மா படத்தை வரைந்து வைத்து, மற்ற கட்சியினருக்குக், கொஞ்சம் கூட இடமில்லாமல் செய்து கொண்டிருக்க, ஒரு நாள் இரவு...

வைகை அணை விருந்தினர் மாளிகைச் சுவர் முழுவதும் 'கலைஞர் வாழ்க! உதயசூரியனுக்கு வோட்டுப் போடுங்கள்' என்று யாரோ எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நான்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கி இருக்கும்போதுதான் இப்படியொரு சம்பவம் நடந்தது. 'யாரு இப்படிப் பண்ணினதுன்னு கண்டுபிடிச்சு, உடனே நடவடிக்கை எடுங்க' என்று போலீஸுக்கு உத்தரவு போட்டார்களாம் அமைச்சர்கள். ஆனால், கடைசி வரை ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!

அப்படியொரு காரியத்தை அமைதியாகச் செய்துவிட்டு வந்தவர், வேறு யாருமல்ல  - வைகை சேகர்தான்!

செம தில்லான உடன்பிறப்பைத்தான் களத்தில் சந்திக்கிறார் ஜெயலலிதா!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close