Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இ-சேவை மையமா...இம்சை சேவை மையமா?

மிழகத்தில் 254 தாலுகா அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் உள்ளன. இதில் 18 மையங்கள் எல்காட் மூலமாகவும், மீதமுள்ளவைகள் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாகவும் செயல்படுகின்றன.

இந்த மையங்கள் மூலம் சாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர பெண் குழந்தை பாதுகாப்பு, திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். சேவைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 

தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் காத்துகிடப்பதை தடுக்கவும், கையூட்டு பெறுவதை தவிர்க்கவும்  இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இ-சேவை மையங்களிலும் மக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த மையங்களில் உள்ள குளறுபடியே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விண்ணப்பங்களை பதிவு செய்ய, கம்ப்யூட்டரில் இணையதள இணைப்பு (ஆன்-லைன் வசதி) சரிவர கிடைப்பதில்லை. இதனால் விண்ணப்பதாரர்கள் தினமும் அலைய வேண்டியதுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டிய சான்றிதழ்கள் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. இதற்கு இணையதள இணைப்பு பிரச்னை முக்கிய காரணமாக இருந்தாலும், கம்ப்யூட்டர் பற்றாக்குறை, ஊழியர்கள் பற்றாக்குறை என பல காரணங்களை பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கப்பட்டு விட்டன. மாணவர்களுக்குத் தேவையான வருமான, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டு இ-சேவை மையங்களில் ஏராளமானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் இ-சேவையில் உள்ள குளறுபடி காரணமாக சான்றிதழ் கிடைக்காமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இ-சேவை மையங்களில் உள்ள ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண சில மாவட்டங்களில் டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களின் முன்னுரிமை அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தால் பாதிக்கப்பட்ட சுரேஷ் கூறுகையில், "எனது குழந்தைக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த பின்னர் 100 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டார்கள். சாதி 'சான்றிதழ் விண்ணப்பிக்க நான் ஏன் பணம் தர வேண்டும்?' என்று கேட்டேன். அப்போது அங்கிருந்த பெண் ஊழியர், 'ஒவ்வொரு சான்றிதழுக்கும் பணம் வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதன்படி நாங்கள் பணம் வசூலிக்கிறோம்' என்றார்.

பள்ளியில் சாதி சான்றிதழ் கேட்பதால் 100 ரூபாய் ஆதங்கத்துடன் கொடுத்து விட்டேன். ஏழை, எளிய மக்களால் பணத்தை கொடுக்க முடியும். இ-சேவை என்ற பெயரில் ஏழைகளிடம் பணத்தை வசூலிக்கும் தமிழக அரசு, இனி பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் வாங்கினாலும் காசு கேட்கும்.

விண்ணப்பித்து ஒரு மாதங்களாகியும் இதுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சர்வர் பிரச்னை என்று சொல்கிறார்கள். முன்பெல்லாம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தால் ஒரு மாத காலத்துக்குள் சான்றிதழ் கிடைத்துவிடும். மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இ-சேவை மையங்களின் செயல்பாடு ஆமை வேகத்தில் உள்ளது. எனவே, அதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முன்பு போல அலுவலர்கள் மூலமாகவே சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

இதுகுறித்து வருவாய் துறை வட்டாரங்கள் கூறுகையில், "அனைத்து மாவட்டங்களிலும் சர்வர் பிரச்னையால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். சில மையங்களில் கூடுதலாக கம்ப்யூட்டர், ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் சான்றிதழ்களை வழங்க முடியும்" என்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் மையங்களுக்கு வந்து விண்ணப்பிக்க முடியாமல் பலர் ஏமாந்து செல்கின்றனர். சர்வர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இ-சேவையை இன்னும் விரைவுப்படுத்த அரசு இயந்திரம் முன்வர வேண்டும்.

-எஸ்.மகேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close