Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பலாத்காரம் செய்தவனுடன் சமரசம்'- உயர் நீதிமன்ற தீர்ப்பு குற்றவாளியின் பக்கமா?

''என்ன அந்தப் பொண்ணை நீ கெடுத்திட்டியா... சரி, அவளையே நீ தாலி கட்டி பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு குடும்பம் நடத்து. அப்படியே கோவிலுக்கு ஆயிரத்தியோரு ரூபாய் அபராதத்தையும் கட்டிடு''

-தமிழ்ச் சினிமாக்கள் பலவற்றிலும் அரசமரத்தடி, ஆலமரத்தடி நாட்டமைகளின் இந்தத் தீர்ப்பை காலங்காலமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிஜத்திலும் பல கிராமங்களில் சத்தமில்லாமல் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'பாலியல் பலாத்காரம் செய்தவனுடன், தன்னுடைய மற்றும் பிறந்திருக்கும் குழந்தையின் எதிர்காலத்தைக் கருதி சம்பந்தபட்ட பெண் சமரச பேச்சு நடத்த வேண்டும்' என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், கடந்த 2009-ம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, கடலூர் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைதண்டனை, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மோகன். அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து டி.என்.ஏ. பரிசோதனையில் மோகன்தான் தந்தை என்று நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில், ‘அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவுகொண்டேன்' என மோகன் கூறியுள்ளார். இவருடைய மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், ‘பிறந்த குழந்தையின் எதிர்காலம் கருதி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மோகன் சமரச பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்' என்றபடி சமரச மையத்துக்கு பரிந்துரைத்திருப்பதோடு, அவருக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இத்தீர்ப்பு பற்றி சிலர் இங்கே தங்களின் கருத்துக்களை கொட்டுகிறார்கள்...

த. அழகப்பன்: (முன்னாள் அமர்வு உறுப்பினர், இளைஞர் நீதிகுழுமம். சென்னை).

''அனாதரவான சூழலில் நிற்கும் இப்பெண்ணிற்கு சமரச தீர்வு மையத்தின் மூலம் இப்பெண்ணின் சுதந்திரத்திற்கு இணக்கம் அளித்து, அமைதியான வழியில் சுமூகமான தீர்வு அமைய இது வழிவகுக்கிறது. பாதிப்புக்குள்ளான இந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் எதிர்கால மறுவாழ்வுக்கு, சமூக மைய நீரோட்டத்தில் கலந்துகொள்ளும் வழிமுறைகளின் மூலம் இப்பெண்ணிற்கு புதுவாழ்வு கிடைக்கும் வகையில் இந்த உத்தரவானது அமைந்துள்ளது. இது தீர்ப்பல்ல.. உத்தரவு மட்டுமே''.

பிரசன்னா: (பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவி, உயர் நீதிமன்றம், சென்னை)

''சினிமா தீர்ப்பு போலத்தான் இருக்கிறது இந்தத் தீர்ப்பு. அந்த பெண்ணின் தற்போதைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதை முதலில் ஆராய வேண்டும். குழந்தைக்காக மட்டுமே அவருடன் சேர்ந்த வாழ வேண்டும் என்றாலும், அடுத்த அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் ஆராய வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு சமரசம் பேசி அவளை சேர்த்து வாழவைப்பது எப்படி சரியாக இருக்கும்? ஒருவேளை தன்னை பலாத்காரம் செய்தவனை அவள் ஏற்றுக்கொண்டாலும், நிச்சயம் அது குழந்தையின் எதிர்காலத்துக்காக மட்டுமானதாகவே இருக்கும்.''

சுதா: (உயர் நீதிமன்ற வழக்கறிஞர், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர்)

''முதலில் ஒரு பெண்ணும், பையனும் காதலிக்கிறார்கள். பிறகு, இருவரும் நெருங்கிப் பழகி பெண் கர்ப்பமாகும் தருணத்தில் அந்தப் பையன் கைவிடுகிறான். அதன் பிறகுதான் வழக்கு வருகிறது. ஆனால், இப்படிப்பட்ட வழக்குகள் உடனே முடிவதில்லை. பல ஆண்டுகள் இழுபடும். உயர் நீதிமன்றத்தில் இருக்கும் மகளிர் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் இருக்கின்றன. இதில் 60% பேர் இதுபோல கைக்குழந்தையோடு வந்து நிற்கிறார்கள். பலாத்காரம் செய்த ஆண்கள், பாதிக்கப்பட்ட பெண் மூலமாகவே சமரச மனுவைத் தாக்கல் செய்ய வைத்து, வழக்கை திரும்பப் பெறச் செய்கிறார்கள். இதெல்லாம் ஒரு நாடகம் போல அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அதாவது, தன்னுடைய குழந்தையின் எதிர்காலம், குடும்ப வறுமை, குடும்பத்தாரின் ஆதரவின்மை, படிப்பறிவின்மை, சமூகச்சூழல் அதாவது சமூகத்தின் ஏச்சுப்பேச்சுகள் என பலதரப்பட்ட காரணத்தால், ஆண் பேசும் சமரசத்தில் விழுந்து, நீதியரசர் முன்னால், 'நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துகிட்டோம். என்னை நல்லா வெச்சு காப்பாத்துறார். எங்க குழந்தைக்காகவாவது அவரை மன்னிச்சுடுங்க’னு கேட்கும்போது, நீதிக்கும் அப்பாற்பட்டு, பெண்களுக்கான நலனுக்காக இதுபோன்ற தீர்ப்புகளை அளிக்கவேண்டிய சூழ்நிலையில் தீர்ப்பளிக்கிறார்கள் நீதியரசர்கள்.

நீதிமன்றம் மன்னித்து தீர்ப்பளித்தப்பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றோ... இன்னும் அந்த ஆணுடன்தான் வாழ்கிறாரா என்றோ... யாரும் பார்ப்பதில்லை. பெரும்பாலான வழக்குகளில் தீர்ப்பு வந்தபிறகு இரண்டொரு மாதங்கள் அந்தப் பெண்ணுடன் இருந்துவிட்டு, அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு சென்றுவிடுவதுதான் நடக்கிறது.

எனவே, இதுபோன்ற சமரசத் தீர்ப்பை என்னைப் போன்றோர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, அவளை வைத்தே மன்னிப்புக் கோரி மீண்டும் சுதந்திர புறாவாக திரியலாம் என்று நினைப்பவர்களுக்கு சாதகமாகத்தான் அமையும் இதுபோன்ற தீர்ப்பு!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இதேபோன்றதொரு வழக்கில், 'உன்னால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்டு, குழந்தையையும் நீ நன்றாக பார்த்துக் கொண்டிருப்பதில் சந்தோஷமே. ஆனால், பலாத்காரம் செய்த குற்றம் இல்லாமல் போய்விடாது. எனவே, அதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.''

மதிமாறன்: (எழுத்தாளர், பேச்சாளர்)

''கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புகளை கிராமங்களில் கூட ஏற்றுக் கொள்வதில்லை இப்போது. இத்தகைய சூழலில் வந்திருக்கும் இந்தத் தீர்ப்பை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். இது மோசமான தீர்ப்பு. 'ஜெயிலுக்குப் போயிட்டு வந்துட்ட, இனி உனக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டாங்க. இந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ' என்று நீதிபதியே சொல்வது போலத்தான் இருக்கிறது இந்தத் தீர்ப்பு. அதாவது, குற்றவாளியின் பக்கமே சட்டம் இருக்கிறது என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு காட்டுகிறது.

இன்று, பெண்கள் மீது பலவகையான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பெண்ணுக்கு அந்த ஆணைப் பிடிக்கவில்லை என்றால், அவளை கத்தியால் குத்துவது, ஆசிட் ஊத்துவது என்றெல்லாம் தண்டனை கொடுக்கிறான் ஆண். ஆசிட் வீச்சுக்கு பலியான காரைக்கால் வினோதினியின் வழக்கே இதற்கு சாட்சி.

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி போன்ற காராணங்களால் அந்தப் பெண் இந்த சமரச முடிவுக்கு வர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தத் தீர்ப்பு தவறானது என்பதே என்னுடைய கருத்து.''

-வே. கிருஷ்ணவேணி மாரியப்பன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close