Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய தடகளத்தில் சாதித்தவர் வீடு இதுதான்... சத்துணவு சாப்பிட்டு தங்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்!

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய கிராண்ட் ஃபிரி தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் இலக்கினை 45.85 வினாடிகளில் அடைந்து திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அடைய அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம் ஏராளம்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டபந்தயம் ஆண்கள் பிரிவில் 16வருடங்களுக்கு இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெருமையை தேடி தந்தவரும் கூட. அந்த சமயத்தில் அவர் அளித்த உற்சாக பேட்டியுடன் கூடிய கட்டுரை  இங்கே....

ஏழ்மையான குடும்பம்


பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஆரோக்கிய ராஜீவ்வின் குடும்பம். சொந்தகிராமத்தில் குடியிருந்த குடிசை வீடும் இடிந்துபோக, வீடு கட்ட வசதியில்லாமல் பக்கத்து கிராமமான மணக்காலில் வாடகை வீடெடுத்து குடியிருக்கிறது. அந்த வீட்டின் சுவற்றில் ஆரோக்கிய ராஜீவ்வும், அவரது உடன்பிறப்புகளும் வாங்கிய பதக்கங்கள் ஆணியடித்து தொங்கவிடப்பட்டிருந்தது. அதன் அருகில் ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வாங்கிய ஆரோக்கிய ராஜீவ்வின் புகைப்படம் கலர் ஜெராக்ஸில் பளபளத்தது. இப்போது வாழ்த்துமாலைகளை சுமக்கும் ஆரோக்கிய ராஜீவ், இவற்றையெல்லாம் எளிதாக அடைந்துவிடவில்லை.

ஆரோக்கிய ராஜீவ்வின் அப்பா சௌந்தர்ராஜன் தனியார் கல்லூரி ஒன்றியில் டிரைவராக வேலை செய்தவர். தாய் லில்லி சந்திரா, பாசத்தை  மட்டுமே பிள்ளைகளுக்கு பரிமாறும் சராசரி தாய், தம்பி ரஞ்சித் நீளம் தாண்டும் வீரர், தங்கை எலிசபத் ராணி கைப்பந்து வீராங்கனையாக குடும்பமே விளையாட்டு வீரர்களால் நிறைந்தது.

விளையாட்டு வீரரான கதையை சொல்லுங்க என்றதும் சிரித்தபடி,''எங்கவீட்டுல நாங்க எல்லாம் பிளேயர்களானதற்கு  எங்கப்பா பண்ணுன டார்ச்சர்தான் காரணம் என அப்பாவை கைகாட்டியவர், உண்மைதாங்க. அப்பா ஒரு ஸ்போர்ட்ஸ் மேன், அவர் படிக்கும்போது மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் கலந்துக்கிட்டு நாளைந்து சர்டிபிகட்டை வாங்கிட்டார். அதைகாட்டி காட்டியே, என்னைப்போல நீங்களும் விளையாட்டுல ஜெயிக்கனும்னு  அடிக்கடி டார்ச்சர் பண்ணுவார். அவரு பண்ணின டார்ச்சர பொறுக்காமத்தான், விளையாட ஆரமிச்சேன்.  என அப்பாவை பார்த்து சிரித்தபடி பேச துவங்கினார்.

கை தூக்கி விட்ட பயிற்சியாளர்

முதன்முதல்ல எங்க கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் ஓடி பரிசு வாங்கினேன். அதுதான் என் முதல்பரிசு. அடுத்து லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் சேர்ந்து படிச்சேன்.  நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் போட்டிகளில் கலந்துகொண்டேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்னோட சீனியர்கள் விளையாடுவதை கவனிப்பேன். அதைபோல நானும் பிராக்டிஸ் பண்ணுவேன்.  போட்டிகள்ல கலந்துக்குவேன். ஆனால் நான் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தேன். இதுக்கும் அப்பா என்னை திட்டுவார். என்னுடைய ஆர்வத்தை பார்த்து எங்க கோச்சர் ராமச்சந்திரன், எனக்கு  பயிற்சி கொடுக்க ஆரமிச்சார். அவரை பார்க்கும்வரை எனக்கு ஷூ போட்டுக்கிட்டுதான் ஓடனும்னே தெரியாது.

பள்ளி கூட சத்துணவு பகிர்ந்தளித்த நண்பர்கள்

அவர்தான், ஒரு ஓட்டபந்தைய வீரனுக்கு உணவு ரொம்ப முக்கியம்னு அடிக்கடி சொல்லுவார். ஆனால் அவர் சொல்லுகிற உணவு எங்க வீட்டில் கிடைக்காது. அம்மா தினமும் ஒரு லிட்டர் பால் வாங்கி கொடுப்பாங்க. பள்ளிக்கூட நாட்களில் தினமும் சாயங்காலம் பிராக்டிஸ் இருக்கும். அதனால் மதியமே அதிகம் சாப்பிடுவேன்.

கொஞ்சம் நிறுத்தியவர், தினமும் மதியம்  பள்ளிக்கூடத்தில் போடும் சத்துணவு சாப்பாடுதான் எனக்கு சத்தான உணவு. அப்போ என்னோட நண்பர்களான,  நிர்மல் மத்தியானந்த், விஜயபாலன், மார்ஷல், கார்த்திக் இவங்களோடுதான்  மதியம் சாப்பிடுவேன். எனக்காக இவங்க எல்லோரும் கொஞ்சமாக சாப்பிட்டு, மச்சான் சாப்பிடுடான்னு எனக்கு கொடுத்திடுவாங்க. அந்தளவுக்கு அவனுங்க எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. அடுத்து பயிற்சி முடிச்சிட்டு சாயங்காலம் ஊரை சுற்றியிருந்த வாழை தோப்பு, கரும்பு தோட்டம்னு சுற்றி கிடைப்பதை சாப்பிடுவோம். அதுதான் எங்களுக்கு அடுத்த சத்தான  உணவு.

இந்நிலையில் என்னுடைய குடும்ப சூழலை புரிஞ்சிக்கிட்ட எங்க கோச் ராமச்சந்திரன் சார், அவருடை சொந்த காசுல சிறுதானிய உணவுகளை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லுவார். 50 ரூபாய்ல மாதம் எந்தளவுக்கு எனர்ஜி ஃபுட் சாப்பிடலாம்னு அவர்தான் கத்துகொடுத்தார். அதுமட்டுமில்லைங்க போட்டிகளில் கலந்துகொள்ள ஷூவாங்க காசில்லாமல் கோச்சருடைய பழைய ஷூவை போட்டுக்கிட்டு ஓடியிருக்கிறோம்.  அப்படி வாங்கிய ஷூவை திருப்பி தராமல் தேய்ந்துபோனதும் உண்டு.

எங்களை தங்கள் குழந்தையைபோல பார்த்து பார்த்து வளர்த்தார்.  இப்படியிருக்க  எனக்கு விளையாட்டில் இருந்த ஆர்வம், படிப்பில் வரல. புத்தகத்தை திறந்தாலே தூக்கம் தூக்கமாக வரும். அந்தளவுக்கு எனக்கு படிப்புக்கும் ரொம்ப தூரம். 10வது படிக்கும்போதிலிருந்து அடுத்தடுத்த கலந்துகொண்ட போட்டிகளில் ஜெயிச்சேன். +2வில் ஜஸ்ட் பாஸ்தான். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ வரலாறு சேர்ந்தேன்.

பட்டை தீட்டிய ராணுவம்

அங்கு எனக்கு சீனியராக இருந்த குமார் அண்ணன்,  நீ விளையாட்டில் ஜெயிக்கனும்னா வீட்டிலிருந்து பிராக்டிஸ் பண்ணினால் ஜெயிக்க முடியாது. உனக்கு திறமையிருக்கு, ராணுவத்துல சேர்ந்துடு. அங்க உனக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னார். அவர் சொன்னபடி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நீளம் தாண்டுதல், டிரிபில் பிரிவில் ஹவில்தார் பணிக்கு விண்ணப்பித்தேன்.

ஊட்டியிலுள்ள  இந்திய ராணுவத்திற்கான மதாராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் சுபேதராக பணியாற்றும் ராம்குமார் சார், என்னை தேர்ந்தெடுத்தார். அங்கு சேர்ந்தபிறகுதான் இத்தனைநாள், நான் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் ஒரு தடகள வீர்னின் உணவுக்கும்  உள்ள வித்தியாசத்தையே புரிஞ்சிக்கிட்டேன். அதிலிருந்து ராம்குமார் சார்தான் எனக்கு எல்லாம்.அவர்தான் என்னை, 400 மீட்டர். ஓட்டத்தின் மீது கவனம் செலுத்தினால் சூப்பரா வருவன்னு சொல்லி என்னை திசை திருப்பிவிட்டார். முதலில் நான் யோசித்தேன். பிறகு ஒத்துக்கொண்டேன். 2 வருசம் அங்கே பயிற்சி கொடுத்தாங்க. பிறகுதான் போட்டியில கலந்துகொள்ள அனுமதிச்சார்.

அடுத்த ஓரே வருசத்துல 400 மீ. ஓட்டத்தில் ஜெயிக்க ஆரம்பிச்சேன். முதலில் கடந்த 2012ல் சென்னையில் நடந்த தேசிய ஓபன் தடகளப் போட்டியில கலந்துக்கிட்டு தங்கம் வென்றேன். அடுத்து 2013ல் தாய்லாந்து மற்றும் இலங்கையில் நடந்த ஆகிய கிராண்ட்ப்ரீ போட்டிகள்ல இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம்  ஜெயிச்சேன். இப்படி அடுத்தடுத்து ஜெயிக்கவே என்னை  ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டியூட்டிற்கு என்னை மாற்றினார்கள். அங்கு கோச்சாக வந்தவர் முகமது குன்னு, என்னோட அடுத்தடுத்த பதக்க வெற்றிக்கு எனக்கு கிடைத்த பயிற்சியாளர்கள்தான் காரணம்.

ஆசிய போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கனும்னு பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்த நிலையில் காமன்வெல்த் போட்டி வந்தது. என்னோட போறாதகாலம் அதில் நான் சரியாக பெர்பார்ம் பண்ணல. இந்நிலையில் ஆசிய போட்டிக்கான இந்தியாவின் மெயின் டீம் செலக்ஸன் நடந்தது. அதில் நான் உட்பட 6 பேர் அதில் கலந்து கொள்ளனும். ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய காலில் தசை பிடிப்பு இருந்ததால் என்னால் ஓடமுடியல. ஏற்கனவே தனிநபர் சுற்றில் நாங்கள் செலக்ட் ஆகியிருந்தாலும், ஆனாலும் எங்கள்  டீம் வீரர்கள் சரியாக ஓடாததால இந்தியா மெயின் டீம் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தது.

ஒலிம்பிக்தான் ஒரே லட்சியம்

அடுத்தும் எனக்கு சோதனை காத்திருந்தது, ஆசிய விளையாட்டுபோட்டியில் கலந்துகொள்ள நான் தயாரானபோது என் வலதுகால் பின்னந்தொடையில் பயங்கரவலி இருந்தது. பரிசோதித்த மருத்துவர்கள் தொடையில் தசை விளகியிருப்பதாக சொன்னாங்க, போட்டியில் கலந்துகொள்ள முடியுமா? என்கிற நிலையில். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது என்னுடைய பயிற்சியாளர்களான ராம்குமார்சார், முகமது குன்னு எல்லாம் நீண்ட முயற்சிக்கு பிறகு என்னை தேற்றினார்கள்.

தற்போது ஆசிய கிராண்ட் பிரியில் தங்கம் வெல்ல அந்த சோதனைகள் தான் காரணம். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதுதான் எனக்கு லட்சியம். அதற்கான அடுத்தகட்ட முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்து நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றவர்  இறுதியாக  இடிந்துபோன எங்க வீட்டை இடிச்சிட்டு, அதில் சொந்த வீடு கட்டி அம்மா அப்பாவை அதில் குடியேற வைக்கனும் இந்த இரண்டு கனவும் நிச்சயம் நிறைவேரும் என்கிறார்.

கடந்த மாதம்தான் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜுவின் குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. அவ்வளவாக பேருந்துவசதியில்லாத கிராமத்தில், படுத்து எழ நிரந்தரவீடில்லாமல் ஏழ்மையில் வளர்ந்த ஆரோக்கியராஜு தூக்கிபிடித்த தேசியக்கொடியில் மிளிர்கிறது இந்தியா.

ஏழ்மையில் சாதித்த அவரை நாமும் வாழ்த்துவோம்!

சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close