Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)

டிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது. 

அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் -  சாண்டோ சின்னப்ப தேவர்.

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று. மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர்.

ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த தேவர், வறுமையான குடும்ப சூழலால் கோவையில் தனியார் மில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளி மற்றும் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என அடுத்தடுத்து பல வேலைகளில் ஈடுபட்டும், போதிய வருமானமில்லாத நிலையில் சோடா கம்பெனி ஒன்றையும்  கொஞ்ச காலம் நடத்தினார்.

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடைய சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். சின்னப்பா தேவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த உடற்பயிற்சிக் கூடம்தான். அங்கு ஓய்வு நேரத்தில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் தேர்ந்தவரானார்.

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இதனால் திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர்.

பிரபலமான ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. பிரபலமான கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.

நடிப்புத்தொழில் கொஞ்சம் பிசிறடிக்கவும் நடிப்புத் தொழிலோடு,  சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்கு சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல, தம்பி திருமுகம் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றியது, தனது சினிமா தயாரிப்பு அனுபவம், மனதில் படுவதை செயல்படுத்திக்காட்டும் இயல்பான துணிச்சல் இவை திரைத்துறையை விட்டு விலகியிருந்தாலும், தேவரை கோவையில் சும்மா இருக்கவிட வில்லை. சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார்.

முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான்.

திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர்.

தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்!

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை,  'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர்.

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.

அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.

“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் ஆச்சரியமான விஷயம்.

காரணம், திரைத்துறை நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை. ஆரவாரமாக துவங்கப்படும் எந்தப் படமும் வழக்கமான பல பிரச்னைகளை தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயம். அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கு கிற விஷயம். தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.

குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார்.  மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது.  படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவிக்க இதுவும் ஒரு காரணம்.

திரையுலகில் சிரமப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்தால், அவர்களிடம் அதை திரும்ப பெறமாட்டார். தன் கதையில் அவருக்கு ஒரு வேடம் அளித்து அதை சரிப்படுத்திக்கொள்வார். கடனை அடைத்தது போலவும் ஆகிவிட்டது, அவர்களுக்கு வேலை கொடுத்ததுபோலவும் ஆகிவிட்டது என திருப்தியடைவார். இப்படி ஒரு மனிதாபிமானியாகவும் விளங்கினார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர். முருக பக்தரான தேவர், பக்தி கலந்த சமூகப்படங்களை தயாரித்து அவற்றை வெற்றிப்படமாக்கினார். திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார்.

முருக பக்தரான தேவர், தன் படங்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணி களுக்கு வழங்கினார். காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கி விட்டுத்தான் வேலையை துவக்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார். திறமையானவர் களை எப்படியாவது தம் படங்களில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்.

கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக் கும். 

'ஆட்டுக்கார அலமேலு' படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு  ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் அவர்.

நாள் முழுவதும் அவர் நாவில் 'முருகா..!' என்ற வார்த்தை எத்தனை ஆயிரம் முறை வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பணியாளர்களையும், தெரிந்தவர்களையும் 'முருகா' என்றே அழைப்பார். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா... முருகா!' என உருகிப்போகும் பக்தனான அவர், அதே முருகனை வசைபாடும்போது அந்த வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாது.

புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே மறுநாள் 7 -9-1978 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார்.

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவருக்கு மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடித்து பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.

சின்னப்பா தேவர் காலத்திற்குப்பின் சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம்,  கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது. தொடர் தோல்விகளால் சின்னப்பா தேவர் என்ற தனி மனிதரால் உருவான அந்நிறுவனம், படத்தொழிலிலிருந்து முற்றாக விலகி தம் திரைப்படங்களை மட்டும் ஆவணங்களாக்கி ஒதுங்கிக்கொண்டது. 

விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!  

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close