Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 முறை உலக கோப்பையை வென்ற மாற்றுத்திறனாளி ஜெனிதாவின் ஆசை!

ஸ்லோவேகியா நாட்டில் உள்ள பிரட்டிஸ்வாலா நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில், 3வது முறையாக செஸ் உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று திரும்பியிருக்கிறார் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த மாற்றுதிறனாளி பெண்ணான ஜெனிதா அண்டோ.
 

செஸ்போட்டியில் கில்லியாக எதிரியை வீழ்த்தும் ஜெனிதாவுக்கு, மூன்று வயதில் ஏற்பட்ட போலியோ நோயால் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை செயலிழந்தது. ஆனாலும் அவர் முடங்கிவிடவில்லை. 3 வயதில் தனது தந்தையின் தோளில் பயணிக்க ஆரம்பித்து, வெற்றியை தனதாக்கி கொண்டே இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னோம். படபடவென பேச ஆரம்பித்தார்.

"மூன்று வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். என்னை எப்படியாவது குணப்படுத்தனும்னு ஹாஸ்பெட்டலுக்கு தூக்கி அலைந்தார் எனது அப்பா. ஆனால் மருத்துவர்கள் இனி அவ்வளவுதான் என கைவிரித்துவிட்டார்கள். வாழ்க்கையில் எல்லாம் முடிந்தது என நினைத்துக்கொண்டிருந்தபோது, அப்பா எனக்கு நம்பிக்கையானார். தலைமையாசிரியரான அப்பா, பள்ளிக்கூடம் முடிந்து மிச்சமிருக்கும் எல்லா நேரத்தையும் என்னுடன் நேரத்தை செலவு செய்ய ஆரம்பித்தார். 9 வயதில் எனக்கு செஸ் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். அவர்தான் எனக்கு முதல் குரு. மூன்றாவது படிக்கும்போது மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஜெயித்தேன். அதுதான் எனக்கு முதல் வெற்றி.

அப்பா என்னை தூக்கி சுமக்க ஆரம்பித்தார். இப்போ எனக்கு 28 வயசு. இன்றுவரை அப்பதான் எல்லாம். கொஞ்ச நாள் முன்னாடிவரை அப்பாதான் என்னை தூக்கி சுமந்தார். ஒரு விபத்தில் அப்பா சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், அவரால் முன்புபோல என்னை தூக்கி நடக்க முடியல. வீல் சேர் வாங்கி ஒரு கையால் இயக்க பழக ஆரம்பிச்சேன். முதலில் கஷ்டமாக இருந்துச்சு. பிறகு பழகிடிச்சி. இப்போவும் பயிற்சிக்காக அப்பா என்னை வெளியிடங்களுக்கு அழைத்துக்கொண்டு போவாங்க.
 

தொடர்ந்து மாவட்ட, மாநில அளவில் ஜெயிக்க முடிந்தது. பிறகு பெங்களூரில் இருக்கும் ராஜா ரவி சேகர் மாஸ்டர்கிட்ட  பயிற்சி எடுத்துக்கிட்டேன். நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். அதன்பிறகுதான் பொதுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி ரெண்டுலயும் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். வெற்றியும் பெற்றேன். அடிக்கடி பெங்களூர் போக முடியாததால சென்னையில் இருக்கும் விக்னேஷ்வர் சாரிடம் சேர்ந்தேன். திருச்சியிலிருந்து ஆன்லைனில் பயிற்சி கொடுக்கிறாங்க.

இதுவரை மூன்று முறை உலககோப்பை போட்டிகளில் பதக்கம் வாங்கியிருக்கிறேன். காமன்வெல்த் போட்டியில் வெண்கலம், உலக உடல் ஊனமுற்றோர், தனிநபர் போட்டியில் தங்கம், தற்போது ஸ்லோவேகியா நாட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் தங்கபதக்கம் பெற்றுள்ளேன்.

ஒவ்வொரு வருடமும் அப்பா, சீட்டு போட்டு பணம் கட்டுவாங்க. போட்டி அறிவிச்சதும் சீட்டை முடிச்சி பணம் வாங்கிக்கிட்டு போட்டிக்கு அழைச்சிக்கிட்டு போவாங்க. இந்த முறை என்னுடைய வெற்றிக்கு நிறைய பேர் உதவியாக இருந்தாங்க.  இந்த போட்டியில் அரசு சார்பில் என்னால் கலந்துகொள்ள முடியுமா முடியாதா எனும் நிலை இருந்தபோது, திருச்சி சிவா எம்பி அவர்களை நேரில் சந்தித்து உதவிட கோரினோம். உடனடியாக அவர்  மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களிடம் பேசி நான் போட்டியில் கலந்துகொள்ள உதவி செய்தார். அதன்மூலம் என்னுடைய பயணச்செலவையும், இதர செலவுகளையும் மத்திய அரசு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர்  அவர்களும் நிதியுதவி  செய்தார்.
 

இப்படி ஒவ்வொரு முறையும் என்னோட வெற்றிக்கு உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு என்னால் என்ன செய்யமுடியும்னு தெரியல. நிச்சயம் நன்றியுள்ளவளாக இருப்பேன். விகடன் மூலம் எல்லாத்துக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்" என்றவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து பேசினார்.

"கடந்த 18ஆம் தேதி நடந்த போட்டியில் 11 நாடுகளிலிருந்து 40 பேர் கலந்துக்கிட்டாங்க. நம்பிக்கையோடு விளையாடினேன். ஜெயித்த பிறகு எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நம்ம இந்தியாவோட தேசியக்கொடிய பறக்கவிட்டபடி தேசிய கீதத்தை இசைச்சாங்க. நம்ம ஊர்ல இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்றும் தெரியல. ஆனால் அப்போது அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. எழுந்து நடக்க முடியாத என்னாலயும் நம்ம நாட்டுக்கு பெருமை வாங்கிகொடுக்க முடிஞ்சதுன்னு  பெருமையாக இருக்கு.
 
ஆனால் எல்லா விளையாட்டு போட்டிகளிலும் பதக்கம் வென்றால் முதல்வர் அம்மா அழைத்து வாழ்த்துவாங்க. ஆனால் இதுவரை 3 முறை உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்று இருக்கிறேன். ஏனோ என்னை அவர் நேரில் அழைத்து வாழ்த்தவும் இல்லை,  அரசு சார்பில் பரிசு தொகையும் அறிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் தேசிய போட்டியில் கலந்துகொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரர் மூன்றாவது பரிசு பெற்றார். அவருக்கு அந்த மாநில அரசு 1 லட்ச ரூபாய் பரிசு தொகை அறிவிச்சாங்க. அதேபோல் இரண்டாம் இடம் பிடித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சதே எனும் வீரருக்கு ஊக்க தொகையை அம்மாநில அரசு வழங்கினாங்க. எனக்கு ஏனோ இதுவரை எந்த பரிசும், பாராட்டும் அரசு சார்பில் கிடைச்சதே இல்லை.

முதல்வரம்மா என்னை நேரில் அழைத்து வாழ்த்தணும், அவர்களிடம் இதையெல்லாம் சொல்லி என்னைபோல் வெற்றிபெறும் பல வீரர்களுக்கு ஊக்கம் தரும் பரிசுகளை வழங்க கோரிக்கை வைப்பேன்" என்றார்.

உலக கோப்பை வென்று ஊர் திரும்பியவரை வாழ்த்துவது நமது கடமை.செய்வாரா முதல்வர்...?

-சி.ஆனந்தகுமார்

படங்கள்:
தே.தீட்ஷித்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close