Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்கே நகர் தேர்தல் முடிவு: எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி!

ர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தில் இருக்கக்கூடிய எதிர்கட்சிகளுக்கு புதிய எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.

இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 1,60,432 வாக்குகள்  பெற்று பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறார்.

தோற்பது நிச்சயம் என்று தெரிந்தே ஜெயலலிதாவை எதிர்த்து தைரியமாக களத்தில் இறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உட்பட 27 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

அதிமுகவின் கோட்டையான ஆர்.கே.நகர்

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு 1996-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியானது தி.மு.க.வின் கையில் இருந்தது. அ.தி.மு.க. - தி.மு.க. என மாறி, மாறி கபடி ஆடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. பின், 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சேகர் பாபு 74,888 வாக்குகளை பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த எஸ்.பி.சற்குண பாண்டியனை 33,000 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். அப்போது அ.தி.மு.க.விற்கு கிடைந்த அந்த வெற்றி தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

2006 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர் சேகர்பாபு 84,462 வாக்குகளை பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரை 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு தாவினார் சேகர்பாபு. தி.மு.க. சார்பில் வேட்பாளராக களத்தில் நிறுத்தப்பட்ட சேகர்பாபுவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 83,777 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் . தற்போது, நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறார். இனி இந்த கோட்டையை சரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இனி இது அம்மா தொகுதி

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கலீஜ் தொகுதியான ஆர்.கே.நகர்,  இடைத்தேர்தலுக்கு பிறகு பளீச் தொகுதிகளாக காட்சியளிக்கின்றது. ஓட்டை ஒடிசல் சாலைகள் சீரமைக்கப்பட்டு விட்டன, கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தேங்கிய குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. தொகுதிவாசிகளின் கோரிக்கைகள் மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. இது இடைத்தேர்தலுக்கு முன்பிருந்த நிலை. இனி இது ஆர்.கே.நகர் தொகுதியல்ல, அம்மா தொகுதி. தமிழகத்திலுள்ள 233 தொகுதிகளில் இல்லாத ஸ்டார் வேல்யூ ஆர்.கே.நகர் தொகுதிக்கு இப்போது கிடைத்துவிட்டது.

நெக்ஸ்ட் ரெஸ்ட்

சொத்து குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றம், ஜான் மைக்கேல் டி குன்ஹா, பரப்பரன அக்ரஹாரா சிறை, ஜாமீன், மேல் முறையீடு, குமாரசாமி, விடுதலை என கடந்த சில மாதங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் விறுவிறு அத்தியாயங்கள். எப்படியோ ஒருவழியாக அதிலிருந்து மீண்டு இடைத்தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தவரை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதிர்ச்சிக்குள்ளக்கியது கர்நாடக அரசு. ஆனால், கொஞ்சமும் அசராமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தயாராகி வெற்றியும் பெற்று விட்டார் ஜெயலலிதா. இனி ஜெயலலிதாவின் அடுத்த பயணம் கொடநாடுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

சுருண்ட எதிர்கட்சிகள்

இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்க்க தைரியமில்லாமலும், பொது வேட்பாளரை நிறுத்த மனமில்லாமலும் பா.ஜ.க., தே.மு.தி.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க. என ஒவ்வொருவராக சொல்லி வைத்தார் போல வரிசையாக தேர்தலை புறக்கணித்தனர். விளைவு எதிர்கட்சிகளின் நிலை இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் பரிதாப நிலையை அடைந்திருக்கிறது. எதிர்கட்சிகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டிய தருணம் இது.

தற்போதுள்ள சூழலில், 2016  சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியின்றி தனித்து  சந்திக்கும் திராணியை அதிகமாகவே கொண்டிருக்கிறது. யாரை எதிர்த்து களத்தில் இறங்கப் போகிறோம் என்பதை முடிவு செய்தால் மட்டுமே எதிர்கட்சிகளால் தற்போதைய நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

-நா.இள.அறவாழி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close