Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரும்பு அறுவடை செய்யப்படாது...ஆலைகளின் விளம்பரத்தால் கொந்தளிப்பில் விவசாயிகள்!

ர்க்கரை விலை படுத்தும் பாடு இனிப்பை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வில் கசப்பையே  கொடுத்துக்  கொண்டிருக்கிறது. தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புக்கு, முறையாகப் பணம் வழங்கப்படாத பிரச்னையில், விவசாயிகள் ஆலையில் சிக்கிய கரும்பாய் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'இந்திய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு'(Indian Sugar Mill Association) 'நாட்டின் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு செய்தி' என்ற தலைப்பில் நாளிதழில் வெளியிட்டுள்ள விளம்பரம், வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சிய கதையாக இருக்கிறது என  கொந்தளிக்கின்றனர், கரும்பு விவசாயிகள்.

இந்தப் பிரச்னை பற்றிப் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், "இந்திய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்புக் கொடுத்திருக்கும் இந்த விளம்பரம், ஏற்கெனவே தென்னிந்திய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்புக் கொடுத்த விளம்பரங்களின் தொடர்ச்சியே.
கடந்த சில மாதங்களில் சர்க்கரை விலை வீழ்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். ஆனால், சர்க்கரை விலை 30 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையான போதும், ஆலைகள் விவசாயிகளுக்கு முறையாகப் பணம் வழங்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது ஆலைகள் முழுக்க நஷ்டத்தில் இயங்குவதாக, முதலாளிகள் கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த  நஷ்டத்திற்கு யார் காரணம்…? என்பதை வெளிப்படையாகப் பேச மறுக்கின்றனர். ஆலைகளின் நஷ்டத்திற்கு முழுக்காரணம், மத்திய அரசின் தவறான கொள்கைகளும், ஆலைகள் பேராசையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி  செய்த மூலச்சர்க்கரையும்தான்.

தமிழ்நாட்டில், தனியார் சர்க்கரை ஆலைகளில் அரவை  செய்யப்படும் ஒரு டன் கரும்புக்கு எல்லா செலவுகளும் போக, சரசாரியாக 1,200 ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. தற்பொழுது உள்ள விலை வீழ்ச்சியான நிலையில் 400 முதல் 500 ரூபாய் லாபம் குறைந்தாலும், நஷ்டம் என்பது கிடையாது. விவசாயிகளின் கோரிக்கைகளைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத அரசு, ஆலைகளின் கோரிக்கைகளை ஏற்று, அரசுக்கு உற்பத்தி விலையில் சர்க்கரை  கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொண்டது. (லெவி சுகர் மெக்கானிசம்) லாபத்தில் பங்குக்கொடுக்கும் 5(ஏ) விதியை நீக்கம் செய்தது. இதோடு சில வரிகளையும் நீக்கம் செய்தது.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தின் மையக்கரு, 'கரும்பு- சர்க்கரை விலை இணைப்பு ஃபார்முலா மட்டுமே ஒரே தீர்வு' என சொல்லப்பட்டிருப்பதுதான். இது ரெங்கராஜன் கமிட்டின் பரிந்துரை. இது செயல்பாட்டுக்கு வந்தால், ஆலை முதலாளிகளின் கல்லாப்பெட்டி நிறையும். அதே நேரத்தில் விவசாயிகளின் வயிறு காய்ந்துவிடும். கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், 50 வயதான நஞ்சகவுடா என்ற விவசாயி, தன்னுடைய கரும்பு தோட்டத்திற்குத் தீ வைத்துவிட்டு, அந்தத் தீயில் குதித்துத் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார்.

பருத்திச் சாகுபடி செய்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் போல, கரும்பு விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாக ஆரம்பித்திருக்கிறது.
இந்த விளம்பரத்தில் 2015-2016 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் கரும்பு அறுவடை செய்யப்படாது என விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1966-ன் படி, விவசாயி தான் சாகுபடி செய்துள்ள கரும்பை பதிவு செய்த ஆலைக்குக் வழங்க வேண்டும். அப்படி வழங்காதபட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல…  ஒப்பந்தம் செய்த கரும்பை ஆலை அறுவடை செய்யாதபட்சத்தில் ஆலை மீது வழக்குத் தொடுக்கலாம். இப்படி இருக்கும் நிலையில்… கரும்பு அறுவடை செய்யப்படமாட்டாது என சொல்வது சட்டப்படி குற்றம்.

2015-2016 அரவைப் பருவம் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள நிலையில், இதுபோன்ற நெருக்கடியான நிலையை காரணம் காட்டி, இதுவரை மாநில அரசின் பரிந்துரை விலையை(எஸ்.ஏ.பி) வழங்காமல் இருந்ததைப் போன்று, மத்திய அரசின் பரிந்துரை விலையை(எஃப்.ஆர்.பி) குறைக்க முயற்சி செய்கின்றனர். இதனை அரசு புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார், காட்டமாக.

இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்புச் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரம் பற்றியும், அதற்கான தீர்வு  பற்றியும் சொன்னார், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன், "சர்க்கரை ஆலை முதலாளிகள் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்து சர்க்கரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், உற்பத்தி செய்தச் சர்க்கரையும் பெரிய அளவில் தேக்கம் கண்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி செய்த சர்க்கரை தமிழ்நாட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. குறைந்த உற்பத்தி செலவு மற்றும் 2 சதவிகித வரி ஆகிவற்றால் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த சர்க்கரை தமிழ்நாட்டில் விற்பனைக்கு வருகிறது. உள்ளுர் சர்க்கரையை விற்பனை செய்வதற்கும், வெளிமாநில சர்க்கரையைத் தடுப்பதற்கும், ஒரே வழி வெளிமாநில சர்க்கரைக்கான நுழைவு வரியை 2-லிருந்து  15 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

இதோடு, மதிப்புக்கூட்டு வரியை(வாட்) 5-லிருந்து 10 சதவிகிதமாக மாற்ற வேண்டும். இந்த மதிப்புக்கூட்டு வரி மூலம் கிடைக்கும் பணத்தினை விவசாயிகளின் கரும்புக்கான விலையாகக் கொடுக்கலாம். இந்த வரியால் சர்க்கரை விலை 1.50 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை அதிகரிக்கும். இதனால், பெரிய அளவில் மக்களுக்குப் பாதிப்பு இருக்காது.


தேவைக்குமேல் இருக்கும் சர்க்கரை உற்பத்தியை குறைத்து, எத்தனால் தயாரிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது கரும்புக்குச் சரியான விலையைக் கொடுக்க முடியும். ஆலைகளும் நஷ்டம் இல்லாமல் இயங்கலாம். தற்பொழுது தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 30 சதவிகிதக் கரும்பை அரவை செய்யலாம். மேலும், ஆலைகளின் பழுதை நீக்கம் செய்து, முழுவீச்சுடன் ஆலையை இயக்கினால் தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

இப்படி சர்க்கரை விலை உயர்வுக்கு ஆலோசனைகள், விவசாயிகளுக்கு பாதகம் இல்லாமல் ஆலைகளை லாபமாக நடத்துவது என பல வழிமுறைகள் இருக்கின்றன. அதைச் செயல்படுத்தாமல் ஆலை முதலாளிகள், விவசாயிகள் தலையில் கை வைப்பது, நொடிந்து போய் இருக்கும் விவசாயிகளை மேலும் நொடிந்து போகவே செய்யும்.
மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

-காசி.வேம்பையன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close