Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காலும் இல்லை... கையில் காசும் இல்லை... பதக்கங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது!

ஞ்சித் குமார்... இந்தியாவின் ஒரே மாற்றுத்திறனாளி பயிற்றுனர்.

20 பேரை சர்வதேச விளையாட்டு வீரர்களாகவும், 80க்கும் மேற்பட்டோரை தேசிய அளவிலும்  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஏசியன் கேம்ஸ் போன்ற பலதரப்பட்டப் போட்டிகளில் பலரையும் சாதனையாளர்களாக மாற்றிவரும் இவர், நாம் நினைப்பதுபோல் மிகப்பெரிய பிரபலம் கிடையாது.

ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்து, பதினோராம் வகுப்போடு தன்னுடைய கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டு, விளையாட்டே மூச்சு என்று அதன் வால் பிடித்து வாழ்நாள் முழுவதும் தன்னம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர். அவர் பேசும் வார்த்தைகளில் அனுபவம் பேசுகின்றன...

"மதுரை கே. புதூர்தான் என்னோட பூர்வீகம்.  நான் பிறந்த ஒன்பதாவது மாசத்துல எனக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டு என்னால நடக்க முடியாத சூழல். அதற்குப் பிறகு, நான் நடக்கறதுக்கு யாராவது ஒருவருடைய துணை தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். எனக்கு இந்த குறைத் தெரியாம என்னோட வீட்ல வளர்த்தாங்க.  பள்ளிக்கூடத்துல படிச்சிட்டு இருந்த எனக்கு எல்லாப் பசங்களைப்போலவும் ஓடி, ஆடி விளையாட ஆசையா இருக்கும். ஆனா என்னால அது முடியாதே.. இருந்தாலும், எனக்கு நிறையபேர் பிரண்ட்ஸா இருந்தாங்க. அப்போலாம் அவங்க விளையாடப்போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. அந்த விளையாட்டுக்களை பார்த்துப் பார்த்து எனக்கு சின்ன வயசுல இருந்து விளையாட்டுனா அவ்வளவு ஆர்வமா இருப்பேன். ஸ்கூல்லப் படிக்கும்போது மத்த பசங்க விளையாடுறதப் பார்க்க அவ்வளவு ஆசையா இருக்கும். எனக்கு சின்ன வயசுல இருந்தே கால்கள் இரண்டுமே இல்ல. அதனால என்னால ஓடியாடி விளையாட முடியாது. மாற்றுத்திறனாளி  வீல் சேர்ல உட்கார்ந்துட்டே விளையாட ஆரம்பிச்சேன். என்னோட மாற்றுத்திறனாளி அல்லாதப் பசங்களும் சேர்ந்து விளையாடுவாங்க. பதினோராம் வகுப்போட நான் நிற்கவேண்டிய சூழல். அதுக்கப்புறம் பிரண்ட்ஸ்களோட சேர்ந்து சோளக்கருதை வைத்து த்ரோ கேம்ஸ் எல்லாம் விளையாடுவோம். இப்படி உட்கார்ந்தபடியே நிறைய விளையாட்டுக்களை விளையாடினேன். இப்படி இருக்கும்போதுதான் எனக்கு என்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு தேடிவந்தது'' என்றவர் தொடர்ந்தார்.
 

'நான் ஜிம்முக்குப்  போய் பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ தேசிய விளையாட்டு ஆணையத்தைச் சேர்ந்த ஒருவர், 'உனக்கு ஷோல்டர் நல்ல பலமா இருக்கு. அதனால் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்துக்கோ.. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு'னு சொன்னார். அதற்குப்பிறகு, நிறைய பிராக்டிஸ் பண்ணேன். 2002-ல சென்னை, நந்தனத்துல, தேசிய விளையாட்டு ஆணையம் நடத்திய, தேசிய பாரா ஒலிம்பிக் தடகளப்போட்டியில கலந்துக்கிட்டேன். வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என மூன்றிலும் தங்கம் வென்றேன். இதுதான் என்னுடைய சாதனைக்கான முதல்படியா அமைஞ்சது. அதற்குப்பிறகு, தமிழக அணி சார்பாக தென்கொரியாவில் (2002ஆம் ஆண்டு) நடைபெற்ற பாரா ஏசியன் கேம்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்றேன்.

2003ல் பெல்ஜியம், 2005ல் இங்கிலாந்தில் என தொடர்ந்து பதக்கங்களை தட்டிச்சென்ற பொழுது எனக்கு, 2006ஆம் வருடம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்துக்கொள்ள வாய்ப்புக் கிடைச்சது. அங்கே சென்று வரும் வரை மற்றும் தங்குறதுக்கு அத்தனைச் செலவுகளையும் அரசே ஏத்துக்கிட்டதால, வறுமையில் இருந்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரப்பிரசாதமா அமைஞ்சது. ஆஸ்திரேலியா மெல்போனில் நடைபெற்ற அந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவில் இருந்து  மாற்றுத்திறனாளிகள் மற்றும் நார்மல் வீரர்கள் மொத்தம் 16 பேர் கலந்துகிட்டோம். 16 பேரில் நான் மட்டும் வெங்கலப் பதக்கம் வென்றேன். இதுவரை நான்கு ஏசியன் கேம், ஒரு காமன்வெல்த் என இந்தியாவுக்காக விளையாடியிருக்கேன்.
 

2002- 2014 வரை 43 பதக்கங்களை தொடந்து பெற்றதுக்காக நான் 2013ஆம் ஆண்டு, சிறந்த விளையாட்டு வீரருக்கான தேசிய விருதை பெற்றேன். 2006ல் காமன்வெல்த் போட்டியில் மெடல் வாங்கியதால, நம் தமிழக அரசு எனக்கு ஊக்கத்தொகை பத்து லட்சம் ரூபாயை வழங்கி 2007ஆம் ஆண்டு என்னை மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்றுனராக ஒப்பந்த அடிப்படையில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி நியமிச்சார். எனக்கான மாத சம்பளம் 10,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 20 சர்வதேச விளையாட்டு வீரர்கள், 80க்கும் மேற்பட்டோரை தேசிய அளவிலும் தடகளப்போட்டிகளில் பயிற்றுவித்து பலதரப்பட்ட பதக்கங்களைப் வாங்க வைத்திருக்கேன். எந்த ஒரு அரசாங்க வேலையிலயும்,  இரண்டுவருஷம் ஒப்பந்தத்தில் வேலைகொடுக்கப்பட்டாலும், இரண்டு வருடத்திற்கு பிறகு பணி உறுதி ஆணை வழங்க வேண்டும்ங்கறது அரசோட ஆணை. இத்தனை வருடங்கள் ஆகியும் நான் இன்னும் அதே சம்பளத்தில் பணிநிரந்த ஆணைப்பெறாமலேயே வேலை பார்த்துட்டு இருக்கேன்'' என்று கூறியவர் வேதனையுடன் தொடர்ந்தார்.

"இந்திய அளவில் நான் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்றுனராக இருக்கும்பட்சத்துல, இவ்வளவு பேர உருவாக்கி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரைக்கிளை, சிறந்த முறையில் பயிற்றுவிச்சதுக்காக, 'வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு என்னோட பெயரை  இப்போ பரிந்துரைச்சிருக்காங்க.  இப்படி தேசியவிருது வரையிலும்  பெற்ற எனக்கு ஏன் இன்னும் பணி நிரந்தர ஆணை வழங்கலனு தெரியல. எனக்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் இருக்கான். என் குடும்பம் என்னோட  உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்துட்டு இருக்கிற இந்த நிலையில, பொருளாதார ரீதியில அன்றாட வாழ்க்கைய ஓட்டுறதுக்கே ரொம்ப சிரமப்பட்டு இருக்கேன். இருந்தபோதும், நான் உயிரா நேசிச்ச இந்த விளையாட்டுகளில் என்னாமாதிரி இருக்கிற ஆட்களுக்கு வாழ்க்கையில அவங்க சாதிக்க ஏதாவது செய்யணும்ங்கற அந்த எண்ணத்தோடதான் இத தொடர்ந்து செய்துட்டு வரேன். பலதரப்பட்ட கல்லூரிகளுக்கும் போய், 'உங்களாலயும் சாதிக்கமுடியும்ங்கற  மாதிரியான தன்னம்பிக்கை  ஸ்பீச்சையும் கொடுத்துட்டு வரேன்'' என்றவரின் பின்னால் எவ்வளவு வேதைனையும், புறக்கணிப்பும் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

இவரை பணி நிரந்தரம் செய்யுமா அரசு?

- வே.கிருஷ்ணவேணி மாரியப்பன்

படங்கள்:
எம்.விஜயக்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close